பக்கங்கள்

திங்கள், 16 நவம்பர், 2015

சோதிடந்தனையிகழ்!


-சு.அறிவுக்கரசு
’விதியே வாழி! விநாயகா வாழி! பதியே வாழி! பக்தி வாழி! என்றெல்லாம் பாடிய பாரதியார், ஆத்திச்சூடியில் சோதிடந்தனை இகழ் எனக் கூறினார். இராசகோபாலாச்-சாரியாரும்கூட சோதிடம் ஒரு மூடநம்பிக்கையே என்றார். நம் வீட்டு எருமை, கன்று ஈந்த நேரத்தைக் குறித்துக் கொடுத்தால்கூட, ஜோதிடன் ஜாதகம் கணித்துக் கொடுப்பானே தவிர, இது எருமை சோதிடம் என்று கூறமாட்டான் என்றார் தந்தை பெரியார்.
அண்ணனின் ஜாதகத்தையும் தங்கையின் ஜாதகத்தையும் தந்து, பொருத்தம் பாருங்கள் என்று கூறினால், பத்துக்கு எட்டரைப் பொருத்தம் இருக்கிறது என்றுதான் சோதிடன் கூறுவானே தவிர, உடன் பிறந்தவர்களின் ஜாதகம் இவை என எந்த ஜோசியனும் கூறுவது இல்லை. ஆகவேதான் அதனை இகழ வேண்டும் என்றனர்.
மாறாக, அதனைப் பாடமாக்கி, கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் கற்பிக்கின்றனர் என்றால்... இந்தக் கொடுமை அரங்கேற்றப்பட்டது, பி.ஜே.பி. ஆட்சி ஆறாண்டுக் காலம் நடந்தபோது!
ஆர்.எஸ்.எஸ்.காரரான முரளி மனோகர் ஜோஷி கல்வித்துறையைக் கவனித்த அமைச்சராக இருந்தபோது மேடையை அமைத்தார். இந்த அறிவியல் படித்தால் பி.எஸ்.சி. பட்டம் வழங்கப்படும் என ஆணை பிறப்பித்தார். எல்லாரும் எதிர்த்தனர். இது எப்படி அறிவியலாகும் எனக் கேட்டனர்.
பதில் கூற முடியாத முரளி மனோகர் ஜோஷி பணிந்து பேசினார். பி.ஏ. பட்டம் தரப்படும் அதுவும் ஒரு கலை என்ற காரணத்தினால் என்றார். மேல்நாட்டார் ஒருவர் கொலைகூட ஒரு கலைதான் எனக் கூறினார் அல்லவா? கொலை ஒரு கலை அப்பா! என்று மந்திரிகுமாரி திரைப்படத்தில் எஸ்.ஏ.நடராஜன் என்ற நடிகர் கூறும் வசனத்தை கலைஞர் மு.க. எழுதியதைப் படம் பார்த்தவர்கள் நினைவில் வைத்திருப்பர்.
அதுபோல சோதிடத்தைப் புளுகுக்கலை எனக் கூறினாரோ? இந்தக் கலையைக் கற்றுத் தந்தால் பல்கலைக்கழக மான்யக் குழு (U.G.C.) நிதி கூடுதலாக வழங்கும் என்று தேன் தடவினார். பல்கலைக் கழகங்கள் சில ஈக்களாகச் சிக்கின. அதில் ஒன்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்!
நாள், நட்சத்திரம் பார்த்து பிரும்மரிஷி வசிட்டன் ஜோதிடம் கூறியவாறு, ராமன் பட்டாபிஷேகம் நடைபெறவில்லை; காட்டுக்கு அனுப்பப்பட்டான். அக்மார்க் முத்திரை குத்தும் அருகதை பெற்றவன் வசிஷ்டன். அவன் கணித்ததே கவிழ்ந்து போனது கைகேயியால்!
முறைப்படியும் வழக்கப்படியும் ஜாதகப்படியும் அண்ணன் நாடாள முடியாது, தம்பிதான் நாடாள்வான் என்றான் ஜோதிடன். தம்பி துறவு மேற்கொண்டான். அண்ணன் ஆட்சியில் அமர்ந்தான். நிமித்தகன் சொன்னதை மாற்றிக் காட்டினான் சிலப்பதிகாரத்தில்! செங்குட்டுவன் சேரனானதை இளங்கோ அடிகள் அப்படித்தான் பாடினார்! சோதிடத்தைப் பொய் எனக் காட்டி இகழ்ந்த செய்திகளை ஏராளம் சுட்டிக்காட்டலாம்!
கேரளப் பகுத்தறிவாளர் ஏ.டி.கோவூர் 1969இல் விடுத்த அறைகூவலை ஏற்று, சோதிடம் அறிவியல் என்பதை எண்பித்துக்-காட்ட எவரும் முன்வரவில்லையே! பெங்களூர் நகரில் எட்டுக் கூட்டங்களில் பேசி இந்த அறைகூவலை 1978இல் புதுப்பித்தார் கோவூர். இங்கிலீஷில் ஜோசியம் கூறி, ஏடு நடத்திவந்த உலகப் புகழ்(!) பி.வி.ராமன் என்பவர்கூட பெங்களூர்க்காரர்தான். அறைகூவலை ஏற்கவில்லையே!
வைத்தீசுவரன் கோவில் என்ற ஊரில் நாடி ஜோதிடம் கூறிவந்த பூசமுத்து என்பவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்து கணக்கில் காட்டப்படாத பல இலட்ச ரூபாய்த் தொகையை அள்ளிப் போனார்கள்.
பசிக்காமலிருக்க வரம் தருவேன், எனக்குப் பழைய சோறு பிச்சை போடுங்கள் என்று ஒருவன் சொன்னதைப் போல என்பார் தந்தை பெரியார். அதைப் போல ஊருக்கு ஜோசியம் சொன்ன ஆள், தனக்கு வருவதை உணரவில்லையே!
காந்தியாரும் இந்திரா காந்தியும் சுடப்பட்டுச் சாவார்கள் என்று எந்த ஜோதிடனும் கூறவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆபிரகாம் லிங்கனும், கென்னடியும் கொலை செய்யப்படுவார்கள் என்று அமெரிக்க நாட்டு ஜோதிடனும்கூடக் கூறவில்லையே! அங்கேயும்-கூட ஜோசியர்களும் சோதிடமும் இருக்கின்றன. முட்டாள்தனம் உலகுக்கே சொந்தம் என்றார் தந்தை பெரியார்.
வானவியல் (Astronomy) என்பது வேறு. சோதிடம் (Astrology) என்பது வேறு. முன்னது அறிவியல். பின்னது பொய்யியல். நோபல் பரிசு பெற்ற பல அறிவியலாளர் வெளிப்படையாக அறிவித்த பிறகும் அங்கேயே பலருக்கு அறிவு வரவில்லை எனும்போது, இந்தியாவில் எப்படி....?
வானவெளியில் ஒன்பது கிரகங்கள் மட்டுமே உள்ளனவா? ஹம்ஃப்ரி என்று பெயர் வைக்கப்பட்ட பத்தாம் கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூரியனைச் சுற்றிவர 204 நாள்கள் ஆகிறது என்பது உட்படப் பலவற்றையும் கண்டறிந்து உள்ளனர்! இது ஜாதகத்தில் இடம் பெறவில்லை! ராகு, கேது, என்பவை ஆங்கில ஜோசியத்தில் இடம்பெறவில்லையே!
சூரியனைக் கிரகம் என்கிறது சோதிடம். அது நட்சத்திரம் என்பது அறிவியல்! சூரியன் ஏழிலிருந்து ஒன்பதாம் வீட்டுக்குப் போகிறார், ஆறிலிருந்து நாலுக்கு நடக்கிறார் என்கிறது சோதிடம். சூரியன் நகர்வதோ, சுற்றுவதோ இல்லை. நிலையாக நின்று எரிகிறது என்கிறது அறிவியல். பின் எப்படி சோதிடம் அறிவியல்?
சந்திரன் கோள் அன்று! துணைக் கோள்தான். ஆனால், அதனைக் கோள் என்றே கணக்குப் போடுகிறது சோதிடம்! பூமிக்கு ஒரு சந்திரன், செவ்வாய்க்கோளுக்கு இரண்டு சந்திரன், வியாழனுக்கு 16, சனிக்கு 22, யுரேனசுக்கு 15, நெப்டியூன் கோளுக்கு 3 என நூற்றுக்கும் மேற்பட்ட சந்திரன்கள் வானவெளியில் உண்டு. எந்தச் சந்திரன் சோதிடத்தில் சேர்த்தி? நாம் கண்ணால் காணும் சந்திரனை மட்டும் சேர்த்தால் போதுமா?
பூமி ஒரு கோள் (கிரகம்)! பூமியை சோதிடத்தில் கிரகமாகக் கணக்கில் சேர்க்கவில்லையே!
கோள்களின் பார்வை படுகிறது என்கிறது சோதிடம்! எட்டாம் வீட்டில் இருந்துகொண்டு சூரியன் பார்க்கிறான் என்கிறார்கள். அனுகூலப் பார்வை, வக்கிரப் பார்வை என்று பார்வையோ பலவிதம் என்கிறார்கள். பூமியிலிருந்து 15 கோடி கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் சூரியன்! 195 நாடுகளுக்கும் ஒரே சாயையும் ஒரே கிரணங்களையும் பதிவு செய்கிறது. நாடே இல்லாத, ஆளே இல்லாத துருவப் பகுதிகளிலும் சூரியக் காற்று சுமூகமாகவே வீசுகிறது. இந்த நிலையில் சூரியப் பார்வையில் வேறுபாடாம்! எப்படி அறிவியலாகும்?
உலகில் அரசியல் நிலையை சுக்கிரன் முடிவு செய்கிறதாம். போர்களைச் செவ்வாய் உண்டாக்குகிறதாம்! தர்மச் செயல்களுக்கு குருவாம்! அதர்மச் செயல்களுக்கு சுக்கிரன், செவ்வாய், ராகு கிரகங்களாம்!
நாடு பிடிக்கும் வெறியும், பேராசைகளும் உலகில் இதுவரை ஏற்பட்ட போர்களுக்குக் காரணிகள். அலெக்சான்டர், செங்கிஸ்கான், தொடங்கி பிஸ்மார்க், முசோலினி, டோஜோ, இட்லர் ஈறாகப் பல சர்வாதிகாரிகளின் மன வக்கிரங்கள், நாடு பிடிக்கும் பேராசைகள் போன்றவையே அரசியலையும் போர்களையும் ஆட்டிப் படைத்தன என்பதே உண்மை! நபர்களின் வக்கரிப்புகளுக்கு நாடு எப்படிப் பொறுப்பு? நாட்டின் ஜாதகம் எப்படிப் பொறுப்பு ஆக முடியும்?
மனிதர்களின் பிறந்த நேரம், கிரக நிலை இதனை வைத்து ஜாதகம் என்று கூறுகிறார்கள்! நாடுகளுக்கு எது பிறந்த நேரம்? இந்தியா எப்போது ஜனித்தது? 1947 ஆகஸ்ட் 15ஆம் நாளிலா? நள்ளிரவு 12-_01க்கு அல்லவா? இவர்களது பஞ்சாங்கம் 30 நாழிகைக்கு மட்டும்தானே கணித்து வைத்திருக்கிறார்கள்!
சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை உள்ள 12 மணிநேர, 30 நாழிகைக்கு மட்டும்தானே! உதயமோ, அஸ்தமனமோ சூரியனுக்குக் கிடையாது. அது, தோற்றப் பிழை! ஆனால், அதனடிப்படையில் எதையோ பிதற்றுவது அறிவியலா?
எவ்வளவோ வாதங்கள் உள. என்றாலும் ஈராயிரம், மூவாயிரம் ஆண்டுகளாக சோதிடப் பித்தலாட்டம் உலகில் இருக்கிறது. தமிழர் பிரித்த நானிலங்களில் மருத நிலத்துக்கு உரித்தான பரத்தமை உலகின் இரண்டாம் மூத்த தொழில் என்கிறார்கள். அப்படியானால் உலகின் மூத்த முதல் தொழில்? சோதிடம்!
சோதிடர்களை நற்செய்தி கூறுவோர் (Soothe Sayers) என்கின்றனர் ஆங்கிலேயர்கள்! இங்கோ, இந்தியாவிலோ, சோதிடர்கள்தாம் எல்லாமுமே! அத்தகைய மடமை ஒழிய வேண்டும். ஒழிக்கப்பட வேண்டும். கல்விச் சாலைகள் அறிவை வளர்க்க வேண்டும்.
பகுத்தறிவைப் பயன்படுத்திட படிப்போரை ஊக்குவிக்க வேண்டும். சிலகோடி நிதிக்காகப் பகுத்தறிவைப் பாழ்படுத்தும் பாடத் திட்டங்களை ஏற்கக் கூடாது, மறுதலித்திட வேண்டும்! அந்த நாளும் வந்திடாதோ?
-உண்மை இதழ்,15-28.2.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக