மூடநம்பிக்கை :
ஒளிமதி
மேலே கூறப்பட்டவை, மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கூறியதாகக் கண்ணதாசன் குறிப்பிட்டவை-யாகும்.
நல்லவேளை மதுரை ஆதீனகர்த்தர் நாடி ஜோதிடம் பார்க்கப் போகவில்லை. போயிருந்தால் நாடி ஜோதிடன் தவித்துப் போயிருப்பான்.
“ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்’’ என்ற இவ்வளவு நீட்டுப் பெயருக்கு எப்படிச் சமாளிப்பது? ஏகப்பட்ட ‘கப்சாக்கள்’ அல்லவா அடிக்க வேண்டும்.
கோவை கவுமார மடத்தின் நிறுவனர் இராமக்குட்டிக்கு பிற்காலத்தில் பெயர் ‘இராமானந்தர்’ என்று மாறும் என்று நாடி ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகச் சொல்கிறார்.
அப்படியென்றால், நம்ம ஜெயலலிதா நாடி ஜோதிடம் பார்க்கப் போயிருந்தால், புரட்சித்தலைவி, புரட்சித்தாய், தமிழ்த்தாய், காவிரித்தாய், தெய்வத்தாய், அன்னைமேரி, கன்னிமேரி, இதயத்தாய், காவல்தாய், சமூகநீதி காத்த வீராங்கனை… என்றெல்லாம் பெயர் நாடி ஏட்டில் கண்டிருந்திருக்குமா?
இன்றைக்கு அப்பன் ஆத்தாள் பெயர் தெரியாமல் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இருக்கிறார்களே, அவர்களை நாடி ஜோதிடக்காரனிடம் அழைத்துச் சென்று அப்பா பெயர், ஆத்தாள் பெயர், ஊர்ப் பெயர் கேட்டால் சொல்வானா?
பெயர் என்ன என்று கேட்டால், நேரடியாக ஜான் என்று சொல்ல வேண்டியதுதானே? அதை விடுத்து ‘முழத்தில் பாதி’ என்று ஏன் குறிப்பிட வேண்டும்?
‘ஜான்’ என்பது இரண்டெழுத்து. ‘முழத்தில் பாதி’ என்பது ஏழு எழுத்து. எப்படிச் சொல்வது சுருக்கம்?
மூக்கு என்று சொல்வதை விட்டுவிட்டு நெத்திக்குக் கீழே கண்களுக்கு நடுவே, உதட்டுக்கு மேலே உள்ள உறுப்பு என்றால் அது எவ்வளவு பைத்தியக்காரத்தனமோ அவ்வளவு பைத்தியக்காரத்தனம் இது!
அது மட்டுமல்ல, முழத்தில் பாதி என்றால் ஜாண்; ‘ஜான்’ என்பதற்கு ‘ன்’ இரண்டு சுழி. ஆனால், ஜாண் என்பதற்கு ‘ண்’ மூன்று சுழி.
நாடி சாஸ்திரமெல்லாம் பரமசிவன் பார்வதிக்குச் சொன்னது என்று கூறப்படுகிற போது, பிழைபடச் சொல்லியிருப்பார்களோ?
பீட்டர், மேரி, இன்குலாப், அய்சக், உட்ஸ் என்ற பெயரெல்லாம் நாடி சாஸ்திரத்தில் இருக்கிறதா?
அய்ந்தும் ஒன்றும் வதனமெனப் பெயர் சூட்டி என்றால், அய்ந்து + ஒன்று = ஆறு என்று மட்டுந்தான் பொருள் கொள்ள முடியுமா? 51 என்று பொருள் கொள்ள முடியாதா?
‘அய்ந்தும் ஒன்றும் வதனம்’’ என்பதற்கு அய்ந்தும் ஒன்றிய (ஒன்று சேர்ந்த) வதனம் அதாவது அய்ந்து முகம் என்று ஏன் பொருள் கொள்ளக் கூடாது? அய்ந்து முகம் உடைய சிவபெருமான் பெயராக ஏன் இருக்கக் கூடாது? சிவனுக்கு அய்ந்து முகம் என்பது புராணம்.
‘அய்ந்தும் ஒன்றும் வதனம்’ என்பதற்கு ஆறுமுகம் என்று மட்டுந்தான் அர்த்தமா? சண்முகம் என்று பொருள் இல்லையா? சண்முகம் என்பதன் பொருள் ஆறுமுகந்தானே?
அதாவது பலருக்கும் பொருந்தும்படி திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்டவை நாடி சாஸ்திர ஏடுகள் என்பது இதிலிருந்து விளங்குகிறது அல்லவா?
எந்த நாடி ஜோதிடனும் உடனே ஏடு கொடுப்பதில்லை. தேடி எடுக்க வேண்டும் என்றுதான் சொல்லுவான். காலஅவகாசம் எடுப்பான். காரணம், அதற்குள் பழைய ஓலைகள் தயார் செய்துகொள்ள.
இந்துவைப் போல மாறுவேடத்தில் சென்ற முஸ்லிம் பெயர் அப்துல் ரஹ்மான் என்று இருந்ததாம். இந்தப் பெயர் மட்டும் எப்படி ஓலையில் நேரடியாக எழுதப்பட்டிருந்தது? ‘ஜான்’ என்ற பெயருக்கு ‘முழத்தில் பாதி’ என்று இருந்தது போல். இதற்கும் மீட்டர், கெஜக்கோல் என்று ஏதாவது எழுதப்பட்டிருக்க வேண்டாமா?
அப்துல் ரஹ்மான் என்ற நீண்ட பெயரே நேரடியாக நாடி ஏட்டில் எழுதப்பட்டிருக்கும் போது ‘சூசை’ என்ற சுருக்கமான பெயர் நேரடியாக எழுதப்பட்டிருக்கலாமே? அதைவிட்டு, சாவில் ஆறும் சாவில் ஒன்பதும் என்று ஏன் வளர்த்தலாக, மறைமுகமாகச் சொல்லப்பட வேண்டும்? சூசை என்பது தமிழ் வார்த்தை அல்ல. அப்படியிருக்க தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை எப்படிப் பொருந்தும்?
எல்லாம் மோசடிக்காகத்தான் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?இந்த ஏடுகளைக் கண்டுபிடிக்க மதுரை ஆதினகர்த்தர் 20 ஆண்டுகளுக்கு முன்னே ஒரு லட்சம் ரூபாய் வரை செலவிட்டாராம். எதற்கு? ஏடு கண்டு பிடிக்கவா? ‘ஏடு’ செட்டப் செய்யவா? வாசகர்கள் முடிவு செய்துகொள்ள விரும்புகிறேன்.
“புயலாடு புலவன் சரலில் பூமகள் மதிகோலாக
வெயில் மகன் போகி நண்டில், வேதியன் தேள் மீதாக
செயுமிக்கோள் நிலையில் தோற்றும் சேயாறார்க்குயிர் – சியத்தே
பயன்தரு மிலனின் ஜென்மம், பாண்டியன் நாட்டுக்குள்ளே’’
அதாவது இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள கிரக நிலையில் பிறக்கின்றவன் பாண்டியன் நாட்டுக்குள்ளே பிறப்பான் என்பதாகும்.
(ஆதாரம்: வேலு அவர்கள் எழுதிய ‘கவுமார ஜோதிடப் புரட்டு’ என்னும் கட்டுரை)
சேர, சோழ, பாண்டிய நாடு என்னும் பிரிவு இடைக்காலத்தில் ஏற்பட்ட ஒரு பிரிவாகும். ஆனால், நாடி ஜோதிடமோ ஆதிநாளில் இறைவனால் கூறப்பட்டது என்று சொல்லப்படுகிறது. அதாவது சேர, சோழ, பாண்டிய நாட்டுப் பிரிவுகள் ஏற்படாத காலத்தில் எழுதப்பட்டதாகச் சொல்லப்-படுகிறது. அப்படியென்றால்பாண்டிய நாட்டுப் பிரிவுகள் தோன்றாத காலத்தில் அந்தக் கிரக நிலையில் பிறந்தவர்கள் எந்தப் பகுதியில் பிறப்பார்கள்? அப்போது பாண்டிய நாடு இல்லையே!
அது மட்டுமல்ல. இப்போது தமிழ்நாடு என்றாகி மதுரை மாவட்டம், விருதுநகர் மாவட்டம், நெல்லை மாவட்டம் என்று புதிய பெயர்கள் தோன்றிய பின் அந்தக் கிரக நிலையில் இன்றைக்குப் பிறக்கிறவன் எப்படிப் பாண்டிய நாட்டில் பிறக்க முடியும்?
இந்த நாடி ஜோதிடப் பாடல் பாண்டிய நாடு நடைமுறையில் இருந்த காலத்தில் எழுதப்பட்டது. அதனால்தான் அதற்கு முந்திய காலத்திற்கும் பிந்திய காலத்திற்கும் பொருந்தவில்லை.
எனவே, நாடி ஜோதிடப் பாடல்கள் இறைவனால் எழுதப்பட்டவை அல்ல என்பதும், அது காலத்திற்கு ஏற்ப மோசடிப் பேர்வழிகளால் எழுதிக் கொள்ளப்படுவது என்பதும் தெளிவாகிறது.