பக்கங்கள்

வியாழன், 4 மார்ச், 2021

ஜோதிடத்தை நம்பி நான்கு வயது சொந்த மகனை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த பைத்தியக்காரத் தந்தையின் வெறிச்செயல்!


அரசமைப்புச் சட்டத்தின் 51ஏ(எச்) பிரிவு ஏட்டுச் சுரைக்காயா?

ஜோதிடத்தை நம்பி நான்கு வயது சொந்த மகனை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த பைத்தியக்காரத் தந்தையின் வெறிச்செயலைக் கண் டித்து   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு:

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தி லிருந்து வந்துள்ள ஒரு செய்தி நம் இதயத்தைப் பிழிகிறது. வெட்கமும், வேதனையும் விலா நோகச் செய்கிறது. பகுத்தறிவு பூமியாகிய தமிழ்நாட்டில் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் கூடவா, ஜோதிடத்தை நம்பிய ஒரு தந்தை தன் 4 வயது மகனான இளந்தளிரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ள கோர சம்பவம்?

தமிழ்நாட்டிற்கும், பகுத்தறிவாளர்களா கிய நம் அனைவருக்குமே தலைகுனிவை ஏற்படுத்தக் கூடியதாக இது உள்ளது! வன்மையான கண்டனத்திற்குரிய காட்டு மிராண்டித்தனமாகும்.

படிப்பறிவு பெருகியுள்ளது. எனி னும் பகுத்தறிவுப் பிரச்சாரத்தின் வீச்சும் தேவையும் மேலும் பெருகி, அடைமழையாகப் பொழிந்து, இந்த மூடநம்பிக்கை நோயால் வறண்ட மூளைகளை வளப்படுத்த நமது பணி மேலும் மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்பதையே இம் மாதிரி அவலச் செய்திகள் அறுதியிட்டு உறுதி கூறுவதாக அமைந்துள்ளன.

நமது அரசமைப்புச் சட்டத்தின் 51ஏ(எச்) பிரிவில் அறிவியல் மனப்பான் மையைப் பரப்புவதும் மூடத் தனத்திற்கு எதிராகவும், கேள்வி கேட்கும் உணர்வை வளர்த்து மனிதநேயத்தைப் பரப்பவேண்டும் என்பதும் இங்கே வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவே உள்ளது.

தமிழக அரசு காவல்துறை இத் தகைய சம்பவங்களைத் தடுக்க, பகுத் தறிவுப் பிரச்சார அமைப்புகளுக்கு ஆதரவும், ஆக்கமும் ஊக்கமும் தர முன்வரவேண்டும்.

இன்னமும் ஜோதிடம் உயிரைக் குடிக்கும் கொடுமை நீடிப்பதா?

 

 கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

3.3.2021

சோதிட மூடநம்பிக்கை காரணமாக பெற்றோர்களே தம் பிள்ளைகளை நரபலி கொடுப்பதா?


அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கும் 51ஏ(எச்)பற்றி பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவீர்!

நன்னிலம் பகுதியில் சோதிடர் பேச்சைக் கேட்டு, பெற்ற மகனையே தீயிட்டுக் கொளுத்திய நரபலி கொடுமையைக் கண்டித்தும் - மக்கள் மத்தியில் அரசமைப்புச் சட்டம் கூறும் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க் கும் வகையிலும் பகுத்தறிவுப் பிரச்சார கூட்டங்களை நடத்துமாறு கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சோதிட மூடநம்பிக்கைகள் காரணமாக பெற் றோர்களே தாங்கள் செல்லமாக வளர்த்த பெற்ற பிள்ளைகளைப் படுகொலை செய்வது, நரபலி கொடுப்பது என்ற கொடுமை இந்த 2021 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து நடைபெற்று வருவது கொடூரமானது - வெட்கித் தலைகுனியத்தக்கது!

தந்தை பெரியார் பிறந்த மண்ணிலா

இந்தக் கொடூரம்?

மற்ற மற்ற மாநிலங்களில் இவை நடைபெற்றாலும் அவற்றைப் புரிந்துகொள்ள முடியும்; தந்தை பெரியார் பிறந்த, பகுத்தறிவுப் பிரச்சாரம் ஓங்கி வளர்ந்த தமிழ்நாட்டிலும்கூட அங்கொன்றும் இங்கொன் றும் நடப்பதும்கூட ஜீரணிக்கப்பட முடியாதவையே!

நமது இயக்கம் வலுவாக உள்ள நன்னிலம் போன்ற பகுதியில்கூட நடந்திருப்பது - அதிர்ச்சியை அளிக்கக் கூடியதாகும்.

சோதிடன் பேச்சைக் கேட்டு தனது நான்கு வயது மகனை- அரும் செல்வத்தைத் துடிக்கத் துடிக்க மண்ணெண்ணெயை ஊற்றி எரித்த சம்பவம் சாதாரணமானதா?

புதுக்கோட்டை மாவட்டத்தில்...

அதேபோல, தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே நொடியூர் என்னும் ஊரில் தனது மூன்றாவது மகனை நரபலி கொடுத்தால் செல்வம் பெருகும் என்று பெண் மந்திரவாதி கூறியதைக் கேட்டு நரபலி கொடுக்கப்பட்டுள்ளான்.

கேரளாவில் நடந்த கொலை

கேரளாவில் பாலக்காட்டையடுத்த குளத்தூரில் சுலைமான் - சபிதா இணையினர் தமது ஆறு வயது மகன் ஆமிலினை தெய்வ தோஷம் என்று கூறிக் கொலை செய்துள்ளனர்.

சத்தீஷ்கரில் விவசாயம் செழிப்பதற்காக 7 வயது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டுள்ளான்.

பத்து வயது சிறுமி கொலை

கருநாடக மாநிலத்தில் ராம்நகர் மாவட்டம் கன்னக்கல் என்ற ஊரில் 10 வயது மகள் ஆயிஷா நரபலி கொடுக்கப்பட்டுள்ளார் - மந்திரவாதியின் ஆலோசனையைக் கேட்டு.

உத்தரப்பிரதேசம் உன்னவ் பகுதியில் நிலத்தில் புதையல் இருப்பதாகவும், அதனை எடுப்பதற்காக ஆதர்ஷ் என்ற சிறுவன் நரபலி கொடுக்கப்

பட்டுள்ளான்.

மெத்தப் படித்தவர்கள் செய்த

நெஞ்சைப் பிளக்கும் படுகொலைகள்

இவற்றை எல்லாம்விட மன்னிக்கப்படவே முடியாத மிகப்பெரிய கொடுமை - ஆந்திர மாநிலம் சித்தூர் மதனப்பள்ளியில் நடந்த நெஞ்சைப் பிளக்கும் நிட்டுரம்!

பெற்றோர்கள் சாதாரணமான படிப்பாளிகள் அல்லர்; கல்லூரி முதல்வர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் சோதிடன் பேச்சைக் கேட்டு, வளர்த்த தன் இரு மகள்களை மொட்டையடித்து, நிர்வாணப்படுத்தி, தாயே சூலத்தால் குத்தியும், இரும்புக் குண்டால் தாக்கியும் துடிதுடிக்க வைத்துப் படுகொலை செய்ததை இப்பொழுது நினைத்தாலும் பகீரென்கிறது.

இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் என்ன காரணம்? மத மூடநம்பிக்கைதானே - சோதிட மூடநம்பிக்கை தானே!

கல்வியில் பகுத்தறிவுச் சிந்தனையை ஊட்டத் தவறுவதால் தானே!

அரசமைப்புச் சட்டம் கூறுவது என்ன?

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று வலியுறுத்தப்பட்டுள்ள (51-ஏ-எச்) விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டும்; சீர்திருத்த உணர்வைப் பரப்பவேண்டும் என்ற கடமையைச் செய்யத் தவறுவதால்தானே!

வேலியே பயிரை மேய்வதா?

சட்டத்தை செயல்படுத்தவேண்டிய அமைச் சர்களே, சாமியார்களின் காலடிகளில் கிடப்பதும், மந்திரவாதிகள் - சோதிடர்கள் பேச்சைக் கேட்டு கைகளில் வண்ண வண்ணமாக கத்தைக் கத்தையாகக் கைகளில் கயிறுகளைக் கட்டிக் கொள்வதும், பூமிக்குப் பூஜை போடுவதும், மூடத் தனமான நிகழ்ச்சிகளில் பகிரங்கமாகப் பங்கு கொள்வதும்தானே!

வேலியே பயிரை மேய்ந்தால் பாதுகாப்பை எங்கே போய்த் தேடுவது?

சட்டத்தின் கடமையைச் செய்வது

திராவிடர் கழகமே!

உண்மையைச் சொல்லப் போனால், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்திக் கூறப்பட் டுள்ள - ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று உரக்கக் கூறப்பட்ட விஞ்ஞான மனப்பான்மையை பகுத்தறிவுச் சிந்தனையை வளர்க்கும் - பரப்பும் அந்தக் கடமையை முதன்மையானதாக வரித்துக் கொண்டு செயல்படும் நிறைவேற்றும் ஒரே இயக்கம் இந்தியத் துணைக் கண்டத்திலேயே திராவிடர் கழகம் மட்டும்தான்.

அரசும், காவல்துறையும்

 வரவேற்க வேண்டாமா?

திராவிடர் கழகம் மேற்கொண்டுவரும் இந்தப் பணிக்கு அரசும், காவல்துறையும் முன்னே வந்து இருகரம் நீட்டி வரவேற்று ஒத்துழைப்புக் கொடுக்கவேண்டியது மிகவும் அவசியமாகும்

திருவாரூர் மாவட்டத்தில் பிரச்சாரம்

இரண்டொரு மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் நரபலிக் கொடுமைகளை - மூடத்தனங்களை விளக்கிப் பொதுமக்கள் மத்தியில் நல்ல அளவு விழிப்புணர்வை ஏற்படுத்திட நன்னி லத்தைச் சுற்றியுள்ள - திருவாரூர் மாவட்டத்தில் நான்கு ஒன்றியங்களிலும் கழகப் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

ஒத்துழைப்புத் தாரீர்!

 கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார் இதற்கான முன் பணிகளை மேற்கொள்வார்.

கழகத் தோழர்களும், பொதுமக்களும் நல்ல வண்ணம் ஒத்துழைப்புக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

 

சென்னை       தலைவர்

4.3.2021              திராவிடர் கழகம்

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

ஜோதிடப் பைத்தியங்களே, திருந்துங்கள்!