பக்கங்கள்

சனி, 31 டிசம்பர், 2016

ஜோதிடம் புரியாத புதிரா?

நான் பெரும்பாலும் புத்தகங்களைப் படிப்பவன், நான் ஒரு புத்தக வியாபாரி. புத்தகங்களைப் படித்து, புரிந்து, அதை விமர்சனம் செய்பவன்.

சமீபத்தில் நடிகர் ராஜேஷ் எழுதிய ஜோதிடம் புரியாத புதிர் என்ற புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது.

ஒரு இடதுசாரி சிந்தனை உள்ளவர், மார்க்சியத்தில் பரிச்சயம், பெரியாரை நேசித்தவர். இயற்கையின் செயல்பாடு களைப் பேசக் கூடியவர் அப்படிப்பட்ட ஒருவர்  சோதிட கலையை ஓர் ஆய்வு செய்து, மக்கள் ஜோதிடத்தை நம்பக்கூடிய அளவில் எழுதியுள்ளார்.

யார் யாரையோ துணைக்கு அழைத்துள்ளார் மார்க்சியவாதிகளைக் கூட விட்டு வைக்கவில்லை. சொந்த வாழ்க்கையில் நடந்ததாக கூறி அத்த னையையும் நம்பும் ராஜேஷ் எல் லோரையும் நம்பச் சொல்கிறார்.

ஒரு கட்டுரை எழுதிவிட்டு கடைசியில் பல கேள்வி போட்டு விக்கிரமாதித்தன் கதையில் வேதாளத்தை சுமந்து செல்லும் விக்கிரமாதித்தன் நிலையில் ராஜேஷ் உள்ளார். அது கூட கதையில் ஒரு கருத்து இருந்தது.

அவர்கள் எழுதியதை கலைஞானம் என்பவர் ராஜேஷ் சோதிடக் கலையை உயர்த்தி வருகிறார் என்று பாராட்டி யுள்ளார்.

எனக்கு தெரிந்த ஒரு மார்க்சியவாதி, பெரியாரின் கொள்கையில் இளம் வயதில் வாழ்நாளைக் கழித்து ஆசிரியராகப் பரிணமித்து, குறிப்பிட்ட காலத்தில் சோதிடம் பார்க்கும் தொழிலைத் தேர்வு செய்து வாழ்கின்றார். சங்கரன் கோவில் அருகே குருவிகுளம் அதன் அருகே ராமலிங்காபுரம் கிராமத்தில் ஓகோ என்று தொழில் ஓடுகிறது.

சோதிடம் பார்க்க வருபவர்களிடம் ஏன் இங்கு வருகிறீர்கள். நாடு எப்படி உருப்படும் என்ற வார்த்தைகளால் அர்ச் சனை செய்து ஜோதிடத்தை சொல்லு கிறார். அவர் பெயர் தேவதாசன்.

எப்படி சப்தம் போட்டாலும் நீங்கள் சொல்வது எங்களுக்கு நடக்கிறது என்று சொல்லி மக்கள் பெருமையோடு பேசுகிறார்கள்.

தேவதாசன் சார் இளவயதில் பெரியார் கொள்கையில் ஈர்த்து பல எதிர்ப்புகளில் வாழ்ந்த ஓர் மாமனிதர். யாரிடமும் ஜோதி டம் பாருங்கள் என்று கூறியதில்லை. வந்த மக்களை நம்பிக்கையோடு தேற்றி அனுப் புகிறேன் என்று சிரித்துக் கொண்டே சொல்வார்.

இதைக்கூட தொலைபேசியில் அனு மதி பெற்றுத்தான் எழுதுகிறேன், வாழ்த் துக்கள் கூறினார். கஷ்டமான வாழ்வு தொடங்கும் போது மக்கள் ஜோதிடத்தை நம்புவதும், குருவி ஜோசியத்தை நம்புவதும், இரவு நேரங்களில் குறி சொல்லும் கோடாங்கி காரர்கள் கையில் பிரம்பு வைத்துக் கொண்டும் குறி சொல்வதை நம்புவதும் அதை தொழில் செய்பவர்கள் பரிகாரம் என்ற பெயரில் பல ரூபாய்களை பிடுங்கிச் செல்வதும் வாடிக்கை.

ஊருக்கு ஜோதிடம் சொல்லும் மக் களுக்கு அவர்களை பிழைப்பு நிலையை யோசிப்பதில்லை. அதைக் கேட்டால் முன் செய்த பலனால் இந்த நிலை என்று கூறி அதற்கு ஓர் காரணம்.

நாடித்துடிப்பை வைத்து மருத்துவம் பார்த்த வைத்தியம் தான் சிறப்பாக இருந்தது. அது நாடி துடிப்பை வைத்துக் கூட கணக்கிடலாம்.

பிறந்த தேதி, நேரம் என்பதை துல்லியமாக சொல்ல முடியாது. குழந்தை தாய் வயிற்றிலிருந்து பூமியில் விழும் போது அந்த பரபரப்பில் நேரம் சரியாக கணிக்க முடியாது. டாக்டர்கள் கூட 5 நிமிடம் 10 நிமிடம் கழித்துத் தான் சொல்வார்கள்.

இதை எப்படி சோதிடமாக ஏற்றுக் கொள்ள முடியுமா? நடிகர் ராஜேஷ் நடிகராகவே இருந்திருக்கலாம். இந்த ஆய்வுக்குள் வந்தது யாரைக் காப்பாற்ற என்று தெரியவில்லை.

பிராமணர்கள் மந்திரம் என்ற பெயரில் எல்லா மக்களையும் ஏமாற்றுகிறார்கள். அவர்கள் வலிய வந்து என்னை அழையுங்கள் என்று கூறவில்லை.

எவ்வளவு படித்திருந்தாலும் கல் யாணம், இழவு, கும்பாபிசேகம், இறந்த தாய், தகப்பனார்களை மேலோகம் அனுப்ப எவ்வளவு பணம் கொடுத்து அனுப்புகிறார்கள்! உலகத்தில் 90% மூட நம்பிக்கையில் உழன்று வாழ்வதைக் காணுகின்றோம்.

ஒரு பாடல் உண்டு

தலையெழுத்து, தலைஎழுத்து என்று சொல்லி தத்தளிக்கிறார்,
கடும் உழைப்பைக் கூட தலைவிதி என எண்ணி
செயல் படுகின்ற மாமேதைகளைப் பற்றி என்ன சொல்வது?
ராஜேஷ் முன்னுரையில் ஒன்னுமே புரியலே உலகத்திலே
என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது என்று கவிஞர் சந்தானத்தின் பாடலை நினைவு கூர்கிறார்.

அதை சந்திரபாபு பாடியுள்ளார்.

இது ஓர் படத்தின் சூழ்நிலைக்கு கவிஞர் எழுதியுள்ளார். இதுவே நிஜமாக ஆகிவிடுமா?

பட்டுக்கோட்டையார் எழுதிய பாடலை விதியை எண்ணி வீழ்ந்து கிடக்கும் வீணர் எல்லாம் மாறணும் வேலை செஞ்சா உயர்வோம் என்ற விபரம் மண்டையில் ஏறனும் இது அவர் வாழ்க்கையில் ஒத்துவரவில்லை என்று எழுதியுள்ளார்.

நல்ல பொழுதை எல்லாம் தூங்கிக் கழித்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்

என்ற பாடல் வரிகள் இன்றும் மக்கள் மனதில் பதிந்து விட்ட பாடல்.

இப்படி எழுதியவர் 29ஆம் வயதிலே ஏன் மறைந்தார்? விதியின் அடிப் படையிலா என்று எழுதியதைப் பார்த்து தான் குருட்டு தனமாக நம்பினால் எல் லோரும் நம்ப வேண்டும் என்ற பிற் போக்கான சிந்தனை தவிர, உயர்ந்த சிந்தனை இல்லை.

என் வாழ்க்கையில் நடந்த ஓர் நிகழ்வைக் கூறுகிறேன். என் கல்யாணத் திற்கு பெண் பார்க்கையில் ஜோதிடம் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள்.  ஓர் தீவிரமான பொதுவுடைமையாள னாகிய நான் மறுத்து விடவில்லை.

கடைசியில் நானும் எனது மைத்துனர் ராமச்சந்திரனும் ஊரின் அருகிலுள்ள சேர்ந்த மரத்தில் பார்க்கச் சென்றோம்.

சோதிடர் பலனைப் பார்த்து ஐந்து பொருத்தந்தான். சரி; இது பொருத்த மில்லை என்று கூறிவிட்டார்.

நானும் என் மைத்துனரும் ஆலோ சித்து வீட்டில் போய் எட்டுப் பொருத்தம் என்று பொய் சொல்வோம் என்று பேசி, சொல்லி கல்யாணம் நடைபெற்றது. சிறிது காலம் என் நடைமுறையில் சில கஷ்டம். நான் மக்கள் பணிக்காக சிறை சென்றேன்.

குறிப்பிட்ட சில காலத்திற்கு பிறகு நான் வாழ்க் கையைப் புரிந்து நல்ல பிள்ளைகள், நல்ல மனைவி, நல்ல மருமக்கள்மார், நல்ல பேரப்பிள்ளைகள், என் மாதி கொடுத்து வைத்தவன் யாரும் இல்லை என்பது போல  வாழ்கிறேன். நான் சைக்கிளில் சென்று 73 வயதில் சுமார் 80 கிலோ மீட்டலிரிந்து 120 கிலோ மீட்டர் பயணம் செய்து சாதனை புரிகிறேன்.

திணமனி, தி இந்து, சிவப்பு சட்டைத் தாத்தா, புத்தகத் தாத்தா என்று பாராட்டு கிறது.

மானமிகு தமிழர் தலைவர் கி.வீரமணி கையினால்  ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் புத்தக விழாவில் புத்தகர் விருது அதிலும் மூன்று பொதுவுடைமைத் தோழர்கள் வாங்கியுள்ளோம். நான் பிறந்த பலனை அனுபவிக்கின்றேன். ஜாதி இல்லை, கடவுள் இல்லை என்று பள்ளி களில் பிள்ளைகளிடம் உரக்க கூறுகிறேன்.

மாதா, பிதா, குரு தான் தெய்வம் என்று பள்ளி பிஞ்சு உள்ளங்களில் கூறி வருகின்றேன்.

உலகத்தில் எந்த விதமான கவலை இல்லாமல் சைக்கிளில் பவனி வருகின் றேன். உடலில் நோயும் இல்லை. மன நிம்மதி, பல புத்தகங்களைப் படிக்கின் றேன் பகுத்தறிவுவாதியாக வாழ் கின்றேன்.

என்னை மனிதனாக்கியது மார்க்சியம்

சிந்திக்க வைத்தது திருக்குறள்

ஜாதி, மதம், கடவுள் இல்லை என்று பெரியாரிசம் சொல்ல வைக்கிறது.

நல்லவர்களைக் தொடுங்கள்! நல்ல பலன் கிடைக்கும்

ஜீவாவை தொட்டேன் எல்லோராலும் பாராட்டப் படுகின்றேன்.

உறுதியான லட்சியம், மன தைரியம் தான் வாழ்வதற்கு ஓர் மா மருந்து, எடுத்த முடிவில் பின் வாங்கக்கூடாது. நல்ல முடிவாக இருக்க வேண்டும். கடவுளை நம்புகிறவர்கள் நிம்மதியாக இருந்ததாக சரித்திரம் இல்லை. நம்பாத நான் திருப்தியாக இருக்கிறேன். யாருக்கும் வஞ்சகம், துரோகம் எண்ணாத என்னை கடவுள் என்று இருந்தால் என்னை நேசிப்பாரே தவிர, என்னைச் சோதிக்க மாட்டார்.

- தோழர் இரா.சண்முகவேல்
நெல்லை மாவட்டம் - 627860

-விடுதலை,31.5.14

திங்கள், 5 செப்டம்பர், 2016

குரு பெயர்ச்சி நம்பிக்கையாளர்களுக்கு மரண அடி!

2011-ஆம் ஆண்டு வியாழனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஜூனோ என்ற வியாழன் ஆய்வுக் கலன் இன்று காலை சரியாக 9 மணியளவில் வெற்றிகரமாக வியாழனின் மேற்பரப்பில் நிலை நிறுத்தப்பட்டது, இதுவரை வியாழன் பற்றி மனிதர்கள் அறிந்திராத  பல்வேறு உண்மைகளை தனது இரண்டு ஆண்டு களில் வியாழனைச் சுற்றி வந்து கண்ட றிந்து 2018 ஆம் ஆண்டு துவக்கத்தில் வியாழனின் உள்ளே நுழைந்து அழிந்து போய்விடும். இந்த ஆய்வின் போது வியாழனின் காற்று மண்டலத்தில் உயிர் கள் வாழ்கிறதா என்பதையும் ஜூனோ ஆய்வு செய்யும் என்பது குறிப்பிடத் தக்கது.
நமது சூரியக் குடும்பத்தில் மிகவும் பெரிய கோள் வியாழன், வானியலைப் பற்றி அறிந்தவர்கள் வெற்றுக்கண் ணால் கூட வானில் கண்டுகளிக்கலாம். இதன் ஈர்ப்பு விசையின் ஆற்றலால் இதனைச் சுற்றி நூற்றுக்கணக்கான துணைக்கோள்கள்(நிலவுகள்) சுற்றிவருகின்றன.
இது மிகப்பெரிய வாயுக் கோளக மாகும், இந்த வாயுக்கோளகத்தில் அதிக அளவு அய்ட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்ற லகுவான வாயுக்கள் நிரம்பி யுள்ளது. கலிலியோவால் கண்டறியப் பட்ட இந்த வியாழன் கோள் சுமார் 200 ஆண்டுகளாக பல்வேறு வானியல் ஆய்வாளர்களால் சோதனை செய் யப்பட்டு வந்தது. 20-ஆம் நூற்றாண்டின் இறுதிகளில் வான்வெளியில் நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ளப்பட்ட போது அனைவரின் பார்வையும் வியாழன் கோளில் என்ன உள்ளது என்று தான் இருந்தது.
சனிக்கோளின் வளையங்களை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட விண்வெளி ஆய்வு ஓடம் காசினி 2001 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வியாழன் கோளுக்கு மிகவும் அருகில் சென்றது, அப்போது காசினியின் ஒளிப்படக் கருவி வியாழனில் கோடிக்கணக்கான ஆண்டுகளாக சுழன்றுகொண்டு இருக்கும் மிகப்பெரிய  சூறாவளியை படம்பிடித்து அனுப்பியது. இந்தச் சுறாவளியின் அளவு நமது பூமியைவிட சிறிது  பெரியதாகும். இது வியாழனின் மேற்புரம் மஞ்சள் நிற சோப்புக் குமிழ் போல் சுற்றிக்கொண்டே  இருக்கிறது. மேலும் பல புதிய கோணத்தில் வியா ழன் கோளை படம் பிடித்து அனுப் பியது.
இந்தப் படங்களை ஆய்வு செய்த அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா வியாழனை தனித்து அதன் சுற்று வட்டப்பாதையில் நின்று முழுமையாக ஆய்வுசெய்ய ஒரு திட்டத்தை முன் வைத்தது.
இதனை அடுத்து இதற்கென தனிக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது, இந்தக் குழுவின் தலைவராக இத்தாலியைச் சேர்ந்த  கிழிநிமிளிலிணிஜிஜிகி சிளிஸிகிஞிமிழிமி ஆங்கி லிட்டோ கொரடினி என்பார் தேர்ந் தெடுக்கப்பட்டார். இவர் குழந்தைப் பருவத்தில் இருந்தே வானியலில் ஆர்வத்துடன் ஈடுபட்டு தன்னுடைய 14-ஆவது வயதில் வியாழனின் மாதிரியை உருவாக்கி அய்ரோப்பிய விண்வெளி ஆய்வகத்திற்கு அனுப்பிவைத்தார்.
அந்த மாதிரியை ஆய்வு செய்த குழுவினர் வியாழன் கோளும், இவரது மாதிரியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பதை கண்டு வியந்து இவரை லண்டனுக்கு அழைத்து கவுரவித்தனர். பிறகு மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்ற இவர் வியாழன் கோள் பற்றி மேலும் பல ஆய்வுகளைச் செய்து கொண்டு இருக்கும் போது நாசா தனது ஜூனோ ஆய்வுக்களத்திட்டத்தின் தலைவராக இவரை நியமித்தது.
இவரது தலைமையில் 62- ஆய்வாளர் குழு இயங்கியது. பல்வேறு விதங்களில் சோதனை செய்து 2009-ஆம் ஆண்டு ஜூனோ விண்கலம் தயாரானது. இந்த விண்கலத்தில் வியாழனை முதல் முதலில் கண்டறிந்த கலிலியோவின் புகைப்படமும், அதன் வெளிப்பகுதியில் அவரது கையெழுத்துப் படிவமும் பொறிக்கப்பட்டுள்ளது. இது ஆங்கிலிட்டோ அவர்களின் விருப்பத் துடன் செய்யப்பட்டது,  ஜூனோ விண்கலத்தின் இறுதிப்பணிகள் நடந்து கொண்டு இருக்கும் போது உடல் நிலை நலிவுற்று அந்த திட்டத்தில் இருந்து தானே விலகிக் கொண்டார்.
அதன் பிறகு ஸ்கோட் போல்டன் தலைமையில் அமெரிக்க மாநிலமான புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து அட்லஸ் அய்ந்து என்ற ராக்கெட்டின் மூலம் 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் அய்ந்தாம் நாள் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.25 மணிக்கு விண்வெளிக்கு அனுப்பப்பட்டது, சுமார் இரண்டு ஆண்டுகள் புவியின் சுற்றுவட்டப் பாதையில் துவக்க வேகத்தில் இருந்து அதிபட்ச வேகத்தில் சுற்ற ஆரம்பித்த ஜூனோ 2013-ஆம் ஆண்டு  மணிக்கு 266,000 கிலோமீட்டர் வேகத்தில் வியாழனை நோக்கி அனுப்பப்பட்டது,
சுற்றுவட்ட அதிகபட்ச வேகத்தின் காரணமாக எரிபொருளைப் பயன் படுத்தாமலேயே சுமார் 13 மாதங்கள் பயணித்து வியாழனின் ஈர்ப்பு வளை யத்திற்குள் நுழைந்தது, பிறகு இதனின் வேகத்தை மெல்ல மெல்ல கட்டுக்குள் கொண்டுவந்து நேற்றைய தினம் (ஜூலை 4ஆம் தேதி) இந்திய நேரப்படி ஜூலை அய்ந்தாம் தேதி காலை 9 மணி அய்ம்பது நிமிடத்தில் வியாழனின் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப் பட்டது. தான் சுற்றுவட்டப் பாதையில் நிலை நின்று விட்டதற்கான சமிக்கையை  இந்திய நேரப்படி சரியாக 11 மணிக்கு அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வாளர் களுக்கு அனுப்பியது.
வியாழனின் மேற்புரத்தைச் சுற்றி வரும் ஜூனோ அங்கிருந்து அக்கோ ளின் ஈர்ப்புப் புலம், காந்தப் புலம், போன்றவற்றை ஆய்வு செய்யும். அதே போல் வியாழனின் துணைக் கோள் களையும், வியாழனால் அந்தக் கோள் களுக்கு ஏற்படும் பாதிப்புகள் போன்ற வற்றை ஆய்வு செய்யும். மேலும் வியா ழன் எவ்வாறு தோன்றியது, வியாழனின் மேற்புரத்தில் உள்ள ஈரப்பதம் போன்ற வற்றை ஆய்வு செய்யும். இதன் மூலம் வியாழனின் உள்ள நீரின் அளவை அறிந்து கொள்ள பேருதவியாக இருக் கும். முழுக்க முழுக்க சூரிய ஒளியாற்றல் மற்றும் ஈர்ப்பு விசை, வீச்சுவிசை போன்ற ஆற்றல்கள் மூலம் இயக்கப் பட்ட முதல் ஆய்வுக்கலன் என்ற பெருமை யையும் இந்த ஜூனோ பெற்றுள்ளது.
வியாழன் என்பது முழுக்க முழுக்க வாயுவால் ஆன ஒரு கோள் ஆகும். பூமியை விட சுமார் 1300 மடங்கு பெரி யது. அதாவது நமது பூமியைப் போல் சுமார் 1300 பூமிகள் வியாழனில் அடங்கிவிடும். வியாழனின் மேற்பரப் பில் இடைவிடாது மின்னல் வெட்டிக் கொண்டே உள்ளது, இதனால் அங்கு மிகப்பெரிய ஆற்றல் மண்டலம் உள்ளது, ஆற்றல் மண்டலம் என்று ஒன்று இருக்குமானால் அதை பயன் படுத்தும் மூலகமும் இருக்கவேண்டும் என்ற இயற்பியல் விதிக்கு ஏற்ப வியாழனின் காற்று மண்டலத்தில் அந்த சூழலுக்கு ஏற்ப வாழும் உயிரிகள் இருக்கலாம் என்றும், இந்த உயிர்கள் மின்னலில் இருந்து வரும் ஆற்றலை தன்னுடைய உயிர்வாழ்க்கைக்கு பயன் படுத்தலாம் என்றும் ஸ்டீபன் ஹவுக் கின்ஸ் கூறியுள்ளார்.
நமது பூமியின் வாயு மண்டலத்தில் கூட பல்வேறு உயிர்கள் வாழ்கின்றன. ஆகவே வியாழனின் வளிமண்டலத்தில் உயிர்கள் இருக்காது என்று மறுப்புக் கூறவாய்ப்பில்லை. இந்த உண்மைகளை வெளிக் கொண்டு வரவே ஜூனோ அனுப்பபப்ட்டுள்ளது.
மூடநம்பிக்கைக்கு இனியாவது
முற்றுப்புள்ளி வையுங்கள்
இந்த நூற்றாண்டில் 2011 ஆம் ஆண் டிற்குப் பிறகு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 4 நிகழ்வுகள் நடந்துள்ளன. இந்தியா ஏவிய சந்திரன் கலம் (சந்திரயான்), செவ்வாய் கலம்(மங்கள் யான்) போன்றவற்றுடன் 2006-ஆம் ஆண்டு அமெரிக்காவால் புளுட் டோவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டு கடந்த ஆண்டு இதே மாதம் 2015 ஜூலை 14 ஆம் தேதி புளுட்டோவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்த நியூஹரைசன் போன்ற விண்வெளிக் கலங்கள் வானத்தின் எல்லையை மேலும் விரிவாக்கிக் காட்டின, ஏற்க னவே வயோஜர் போன்ற விண்கலங்கள் சனிக்கோளையும், அதன்வளையங் களையும் நுணுக்கமாக ஆய்வு செய்து தகவல்களை படமாக பிடித்து நமது பார்வைக்கு அனுப்பி வைத்தன.
இவ்வளவு விண்ணியல் சாதனைகள் புரிந்த பிறகும் இன்றும் நமது நாட்டில் படித்தவர்கள் கூட குருப்பெயர்ச்சி பார்த்துக்கொண்டு தனது அடுத்த பணியை தீர்மானிப்பது ஜூனோ ஆய்வுக்குழுவினரின் உழைப்பை கேலி செய்வது போன்றதாகும்.
விடுதலை ஞாயிறு மலர், 9.7.16

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

வாஸ்து ஒரு மோசடி! வாழ்க்கை அனுபவங்களோடு ஓர் அலசல்

- பொறியாளர் ஜே.என்.தாமோரன்
பயத்தின் காரணமாகத்தான் மக்கள், வாஸ்த்துவைப் பார்க்கிறார்கள். என் முப்பத்தைந்து வருட அனுபவத்தில், இளைய வயதினர்கள்தான் வாஸ்த்துவைப் பற்றி அதிகம் பயப்படுகிறார்கள். இவர்கள் வீடுகட்டும் போதும், வியாபார இடம் மற்றும் தொழிற்சாலைகள் கட்டும்போதும், வாஸ்த்துவிற்கு, தேவையில்லாமல் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

கீழ்க்கண்ட உதாரணங்களைப் படித்தால், வாஸ்த்துவைப் பற்றிய மக்களின் தேவையற்ற பயம் விலகும்! உண்மை புரியும்.
எடுத்துக்காட்டு -1:
ஷான்தி நகர் காலனி, அய்தராபாத் நகரத்தில், 1960 முதல் 1965 வரையான காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. அந்த சமயத்தில், வீடுகட்டியவர்கள் யாரும், வாஸ்த்துவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதிகமான வீடுகள் வாஸ்த்துவுக்கு எதிர்விதமாகவே கட்டப்பட்டன. லக்ஷ்மண ராவ் என்னும் நண்பர் 1975ஆம் ஆண்டு, எங்கள் வீட்டிற்கு, எதிர்வீட்டை விலைக்கு வாங்கினார். அவர் அந்த வீட்டில், வாஸ்த்து பண்டிதர் சொன்ன அறிவுரைப்படி, மாற்றங்கள் செய்தார். வடகிழக்கு மூலையிலிருந்த கார் ஷெட்டை, இடித்துவிட்டு அங்கு கேட்டை வைத்தார். மற்றும், குடிதண்ணீரை தேக்குவதற்கு நிலஅடியில் ஒரு தொட்டி கட்டினார். தென்கிழக்கு மூலையில், அடுப்பறையைக் கட்டினார்.
அவர் 1982ஆம் ஆண்டு இரத்தப் புற்று நோயால், அவதியுற்று இறந்துவிட்டார். அப்போது என் மாமியார், என்ன சொன்னாரென்றால், வாஸ்த்துவைப் பார்க்காமல் வீட்டைக் கட்டிய பக்தவச்சலு நாயுடு, சென்னையில் வசிக்கிறார். அவருக்கு சுமார் 85 வயதிருக்கும். அவர் கட்டிய வீட்டை வாங்கி, வாஸ்த்துவைப் பார்த்து, மாற்றங்கள் செய்த லஷ்மணராவ், தன் அய்ம்பதாவது வயதிலேயே இறந்துவிட்டார். வாஸ்த்துவைப் பார்த்ததன் பயனென்ன என்று கேட்டார்?
எடுத்துக்காட்டு -2:
1980ஆம் வருடம், நான் வேறொருவர் தொடங்கி, நடத்த முடியாமல்போன ஒரு கம்பெனியை எடுத்து நடத்த முடிவு செய்தேன். 1982ஆம் ஆண்டும், 1984ஆம் ஆண்டும், எங்கள் வீட்டில், இரு தற்கொலைகள் நடந்தன. முதல் தற்கொலை, எங்கள் சமையல்காரனுடையது. அடுத்தது, ஒரு வெளிநாட்டுக்காரருடையது. இரண்டாவது தற்கொலை நடந்ததும், நண்பர்கள் சொன்னார்கள். எங்கள் வீட்டு வாஸ்த்து சரியில்லையென்று. அதன் காரணமாகத்தான் இந்தத் தற்கொலைகள் நடந்தனவென்று நண்பர்களில் ஒருவர், வாஸ்த்து பண்டிதர் ஒருவரை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தார். அந்த பண்டிதர் நாங்கள் வீட்டில் செய்ய வேண்டிய மாற்றங்களைப் பற்றி சொன்னார். நாங்கள் இதைப்பற்றி, எங்கள் மாமியாரிடம் சொன்னோம். ஏனெனில், நாங்கள் வாழ்ந்து வந்த வீட்டைக் கட்டியவர், எங்கள் மாமனார். வாஸ்த்து பண்டிதர் சொன்ன அறிவுரையைக் கேட்ட பிறகுதான் என் மாமியார், லஷ்மணராவ் விஷயத்தில் வாஸ்த்து பண்டிதர் அறிவுரை எப்படி வேலை செய்யவில்லையென்பதை நினைவுபடுத்தினார்.
அவர் அப்படி சொல்லியும், நான் எடுத்துக்கொண்ட தொழில் நடக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வாஸ்த்து பண்டிதர் சொன்ன மாற்றங்களைச் செய்தோம்.
வடகிழக்கு மூலையிலிருந்த, கார் ஷெட்டையும், அதற்கு மேலிருந்த ஒரு அறையையும் இடித்து தரைமட்டமாக்கினோம். அதே மூலையில் குடி தண்ணீரைத் தேக்கி வைப்பதற்கு ஒரு தொட்டியைக் கட்டினோம். தென்மேற்கு மூலையிலிருந்த கதவை மூடிவிட்டு, அங்கிருந்த தண்ணீர்த் தொட்டியையும் மூடிவிட்டோம்.
மேற்சொன்ன மாற்றங்களைச் செய்த பிறகும், எங்கள் தொழிலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நான் யோசித்துப் பார்த்ததில் எனக்குப் புரிந்த உண்மை, ஒரு தொழிலை ஆரம்பிக்குமுன், நாம் செய்ய வேண்டிய வீட்டு வேலைகள் நிறைய இருக்கின்றன. யாரோ ஒருவர் சொல்கிறார் எனறு நம்பி, எந்த புது தொழிலிலும் இறங்கக் கூடாது. நமக்கு நடக்கும் நஷ்டத்திற்கும், வாஸ்த்துவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்பது உண்மை.
எடுத்துக்காட்டு -3:
என் சொந்த ஊர் அரக்கோணம். அங்கே என் அண்ணன், எங்கள் அனைவர் சார்பிலும், ஒரு கல்யாண மண்டபத்தைக் கட்டினார். அவர் அதைக் கட்டியது, 1986ஆம் வருடம், அவர் வாஸ்த்துவைப் பற்றிக் கவலைப்படவில்லை. கட்டிமுடித்த பிறகு, அந்த மண்டபம், நூறு சதவீதம், வாஸ்த்துக்கு எதிர்மறையாகத்தான் இருக்கிறது. ஆனால், எங்களுக்கிருக்கும் பொதுச் சொத்துக்களில், கல்யாண மண்டபம்தான், அதிக வருமானம் தருகிறது.
வாஸ்த்து பிரகாரம், கிழக்குப் பக்கம், மேற்குப் பக்கத்தைவிட அதிக வெற்றிடம் ஒதுக்க வேண்டும். ஆனால், இப்போது இருப்பது, மேற்குப் பக்கம், அதிக வெற்றிடம் இருக்கிறது. வடக்குப் பக்கம், தெற்குப் பக்கத்தைக் காட்டிலும் அதிக வெற்றிடம் இருக்க வேண்டும். அது அப்படியில்லை. வடகிழக்கு மூலையில் அடுப்பைக் கட்டியிருக்கிறார்கள். ஆனால், அது தென்கிழக்கு மூலையிலிருக்க வேண்டும். இத்தனை வாஸ்த்து தவறுகள் செய்திருந்தும், அந்த கல்யாண மண்டபம் லாபகரமாக நடக்கிறது.
மேற்சொன்ன காரணங்களால், நான் வாஸ்த்து பார்ப்பது, தேவையற்றது என வரையறுத்துக் கூறுகிறேன். ஸீ
-உண்மை,1-16.4.16

திங்கள், 6 ஜூன், 2016

ஜோதிடப் புரட்டை நம்பாதீர்!


வாஸ்து நிபுணரால் லட்சக்கணக்கில் ஏமாந்தவர் நீதிமன்றம் சென்றார்
ரெய்ச்சூர்(கர்னாடகா) மார்ச் 17_ வாஸ்து நிபு ணரின் ஆலோசனையின் பேரில் புதிதாக கட்டிய வீட்டை இடித்து பல்வேறு மாற்றம் செய்தவர், எந்த ஒரு பலனும் கிட்டாததால் வாஸ்து நிபுணர்மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
நீதிமன்றமும் இவரது வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. கருநாடகா ஆந்திரா மற் றும் தமிழக செயற்கைக் கோள் தொலைக்காட்சி ஒலிபரப்புகளில் அடிக்கடி சர்லா வஸ்து என்ற வாஸ்து நிபுணரின் விளம் பரம் தொடர்ந்து வரும், இந்த நிகழ்ச்சியை சந்திர சேகர் குருஜி என்பவர் நடத்தி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வரும் வழக்குரைஞரான மகா தேவ் துனியால் என்பவர் 2013-ஆம் ஆண்டு இவரைத் தொடர்பு கொண்டு தான் நிம்மதி இழந்து தவிப்ப தாகவும் தனது வருவாய் முழுவதும் செலவழிந்து விடுவதாகவும், இதனால் கடனாளி ஆகிவிட்டேன் என்றும் கூறி சுகமான வாழ்விற்கு வழிகாட்டுமாறு கூறினார். இவர் சமீபத்தில் தான் புதிதாக வீடு கட்டி இருந்தார். வீட்டை பார் வையிடவந்த சந்திரசேகர் இவரிடம் ஆரம்பத்தில் 11 ஆயிரத்திற்கு மேல் முன் பணமாக பெற்று, வீட்டில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று கூறிச் சென்றவர். சில நாள் களுக்குப் பிறகு கணினியில் செய்யப்பட்ட சில வரை படங்களைக் கொடுத்து இதே போல் உனது வீட் டில் மாற்றம் செய்தால் நீ செல்வந்த ராவாய் என்று கூறி மேலும் சில ஆயி ரங்களை ஆலோசனைத் தொகையாக வாங்கிக் கொண்டார். இதனை அடுத்து மகாதேவ் புதிதாக கட்டிய வீட்டில் மீண்டும் சில லட்சங்கள் செலவு செய்து வாஸ்து நிபுணர் கூறியது போன்ற மாற்றங் களைச் செய்தார்.
நம்பி ஏமாந்த பரிதாபம்!
வாஸ்துவின் படி மாற் றம் செய்து ஒராண்டைக்  கடந்துவிட்ட நிலையில் மேலும் அதிக கடனாளி யாகி விட்டார். மேலும் அவரது குடும்பத்தில் பல் வேறு பிரச்சினைகள் தோன் றியது. இதனால் அவர் விஜயபுரா மாவட்ட நீதி மன்றத்தில் வாஸ்து நிபுணர் மீது மோசடி மற்றும் பொய்கூறி ஏமாற்றி பணம் பெறும் குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தொடர்ந்தார் வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இது நுகர் வோர் தொடர்பான வழக்கு என்பது நுகர்வோர் நீதி மன்றத்திற்கு மாற்றியது. நுகர்வோர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
நுகர்வோர் நீதிமன்றத் தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கு தொடர்பாக வழக்குரைஞர் பி.எஸ்.அனந்தபூர் கூறியதாவது:
தொலைக்காட்சி மற் றும் பத்திரிகைகளில் வியா பாரம் மற்றும் ஆலோ சனை தொடர்பாக விளம் பரம் தருபவர்கள் நுகர் வோர் சட்டப்பிரிவின் படியுள்ள விதிகளின் கீழ் அவர்கள் செயல்படவேண் டும், இவர்களின் நடவடிக் கைகளால் ஏமாற்றப்பட்ட வர்கள், நுகர்வோர் நீதி மன்றத்தை அணுகலாம். மகாதேவ் தொடர்ந்த வழக் கின்படி வாஸ்து நிபுணர் மீது நம்பிக்கைத் துரோகம் மற்றும் நுகர்வோரை ஏமாற்றி பணம் பறித்தல் போன்ற குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
பேட்டி
இது தொடர்பாக ஏமாற் றப்பட்ட மகாதேவ் கன் னடப் பத்திரிகை ஒன்றிற் குப் பேட்டியளித்த போது கூறியதாவது:
சில ஆண்டுகளுக்கு முன்பு நான் சொந்தமாக வீடு கட்டினேன்; வீடு கட் டியதில் பொருளாதாரப் பிரச்சினை ஏற்பட்டது, இப்பிரச்சினை தொடர் பாக நான் வீட்டில் நிம்மதி இழந்து விட்டேன். அதே நேரத்தில் பணம் கொடுத் தவர்கள் மீண்டும் திரும்பத் தரக்கோரி தொந்தரவு செய் தனர். ஒரு முறை தொலைக் காட்சியில் சாரல் வாஸ்து என்ற ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தேன். அந்த நிகழ்ச் சியை நடத்துபவர் சந்திர சேகர குருஜி என்பவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது நிலை பற்றிக் கூறி, நான் புதிதாக கட்டிய வீட்டில் ஏதேனும் பிரச்சினை இருக்குமா? என்று ஆலோசனை கேட் டேன். அவரும் என்னு டைய வீட்டிற்கு வந்து அனைத்து இடங்களையும் பார்வையிட்டார்.
பணத்தைக் கறந்தார்
பிறகு ஹுப்லியிலுள்ள அவரது ஆள் ஒரு வர் என்னிடம் வந்து ரூ 11,600 பணமாகப் பெற்றுக்கொண் டார். சில நாள்கள் கழித்து கணினியில் பிரிண்ட் செய் யப்பட்ட ஒருவரை படத்தை என்னிடம் கொடுத்து வீட்டை இதில் உள்ளது போல் மாற்றினால் வாழ்க்கை வளம்பெறும் என்று சந் திரசேகர் குருஜி கூறினார். இதற்கும் ஆலோசனைக் கட்டணம் என்று கூறி 7 ஆயிரத்தை வாங்கிக் கொண் டார். கையில் பணம் இல் லாத நிலையிலும் சில லட்சங்களை மேலும் சில ரிடம் கடன் வாங்கி வீட்டை அவர் வரைபடத்தில் காட் டியது போன்று பல்வேறு மாற்றங்களைச் செய்தேன்.
ஏமாறாதீர்! ஏமாறாதீர்!
இதன் பிறகு சுமார் 2 ஆண்டுகள் ஆகியும் எந்த ஒரு மாற்றமும் ஏற்பட வில்லை. இவர் வரை படத்தில் காட்டியது போல் வீட்டை மாற்றியமைக்க ரூ.4.5- லட்சம் வரை செலவு செய்தேன். வீட்டுச் சுவரை இடித்து பழைய நிலையில் இருந்த கதவை வேறு திசை யில் மாற்றி வைத்தேன். மேலும் படுக்கை அறையில் இருந்த அட்டாச் பாத் ரூமை வேறு இடத்தில் மாற் றினேன். ஆனால், வாஸ்து நிபுணர் கூறியதுபோல் எதுவுமே நடக்கவில்லை.
மேலும் ஏற்கெனவே இருந்த கடன்சுமை அதிக மாகி புதிதாக கட்டிய வீட்டை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். எனது இந்த நிலைக்கு சந்திர சேகர்தான்  முழுக்காரண மாகும். இந்த நிலையில் இவரது நிகழ்ச்சி மீண்டும் மீண்டும் தொலைக்காட்சி களில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. என்னைப்போல் இன்னும் எத்தனை பேர் இவரால் ஏமாற்றப்படுள்ள னர் என்று எனக்குத் தெரி யாது. இருப்பினும் இனி எவரும் இவரிடமும் இது போன்று வாஸ்து ஜோதி டம் என்று ஏமாற்றும் நபர் கள் பிடியில் யாரும் சிக்கக் கூடாது என்ற முடி வில் நான் இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நீதி மன்றம் சென்றுள்ளேன். நீதிமன்றமும் எனது வழக் கைகையில் எடுத்துள்ளது. என்று கூறினார்.
உதயவாஹினி (கன்னடா)\
தி இந்து (ஆங்கிலம்)
-விடுதலை,17.3.16

வெள்ளி, 13 மே, 2016

வாஸ்துவுக்குப் பின்புறத்தில் ஜாதி இருக்கிறது!


அறிவியல் முன்னேற்றத் தினால், பல தொழில்கள் வளர்ச்சி யடைந்துள்ளன. அவற்றில் ஒன்று, கட்டட கட்டுமானப்பணி, பல கட்டுமானப் பொருட்கள், தொழில் நுட்பங்கள், புதிய சாதனங்கள் ஆகியவை தோன்றி சாதனைகள் பல, ஒன்றை ஒன்று மிஞ்சி நிகழ்த்தப்பட்டுள்ளன. இருப்பினும் வாஸ்து முறைப்படி வீடு கட்டுதல் என்ற வழக்கமும் வளர்ந்து கொண்டிருக்கிறது.
இது கல்வி அறிவு இல்லாத பாமர மக்களிடையே மட்டுமின்றி படித் தவர்களிடையேயும் கூட பரவி யுள்ளது. இதற்கு அடிப்படைக் காரணம், மூட நம்பிக்கையும், பயமும், பேராசையும் ஆகும். எந்த அறிவுப் பூர்வ ஆதாரமும் இல்லாத, பகுத்தறிவுக்குப் பொருந்தாத பல கோட்பாடுகள்  இங்கு நிலவு கின்றன.
எடுத்துக்காட்டாக, மனை அளவு 8அடி இருந்தால் அரசு பரிபாலனம் என்றும் 9அடி இருந்தால் செல்வம் குறையும் என்றும் சொல்லப்படுகிறது. இதே போன்று 11அடி இருந்தால், புத்திரப்பேறு அதிகம் என்றும் 12 அடி இருந்தால் மலடாவர் என்று பயமுறுத்துகிறது. 15அடி இருந் தால் தரித்திரம், தாழ்ச்சி என்றும் 16அடி இருந்தால் செல்வம் கொழிக்கும் என்றும் கூறுகிறது.
இந்த ஒரு அடி வேறுபாடு ஏன், எப்படி இந்த நன்மை, தீமை களுக்குக் காரணமாக அமைய முடியும் என்று பகுத்தறிவோடு சிந்தித்தால்தான் இவை மக்களை பயமுறுத்துவதற்காகக் கூறப்பட் டவை என்று தெளிவாகும்.
அறையின் நீளத்திற்கும் தரித் திரத்திற்கும் என்ன சம்பந்தம்?
இதேபோல் அறையின் நீளமும், அகலமும் பல நன்மை தீமைகளுக் குக் காரணமாக விளங்கும் என்றும் கூறுகிறது. அறையின் நீளம், அகலம், 19அடி இருந்தால் தரித்திரம், புத்திரபீடை என்றும், 20அடி இருந்தால் இன்பமயம் என்றும் கூறுகிறது. இது 25அடி இருந்தால் மனைவியின் மரணம் என்றும், 26அடி இருந்தால் செல்வம் பெருகும் எனவும் சொல் லப்படுகிறது.
இங்கும் இந்த ஒரு அடி வேறுபாடு இந்த மாற்றங் களை ஏற்படுத்தும் என்பது பகுத் தறிவுக்குப் புறம்பான ஒன்றாகும். இதே போன்று ஒரு வீட்டை வாஸ்து சாஸ்திரப்படி அமைக்கா விட்டால், இந்த எஜமானன், எஞ்சினீயர், காண்ட்ராக்டர், கொத்து மேஸ்திரி, தச்சு மேஸ்திரி ஆகிய அய்வரின் வாழ்விலும் பாதிப்பு ஏற்படும் எனவும் அச்சுறுத்துகிறது.
இந்த சாத்திரம், அடுத்து ஏற்படும் அய்யப்பாடு, ஏன் இந்த அச்சுறுத்தும் கோட் பாடுகள் கூறப்படுகின்றன என்ப தாகும். இதை சற்று சிந்தித்தால் எப்படி சாதகம், சோசியம் போன் றவை பேராசை, பயம், மூடநம் பிக்கை ஆகியவற்றைக் கொண்ட மக்களை ஏமாற்றி பிழைப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றதோ, அதேபோல், வாஸ்துவும் அதில் கூறப்படும் அச்சுறுத்தும் கோட் பாடுகளும் மக்களை ஏமாற்றிப் பிழைப்பதற்குப் பயன்படுத்தப்படு கின்றது என்பது தெளிவாகும்.
ஜாதி இதன் பின்னணி! மற்ற தொழில் நுட்பத் துறை களுக்குக் கொடுக்கப்படாத சாஸ்திர அந்தஸ்து ஏன் இந்த வாஸ்துவுக்கு மட்டும் கொடுக்கப் பட்டது என்று ஆராய்வோம். ஜாதி முறையை நிலைநாட்டவும் ஜாதியின் அடிப்படையில் சூழ்ச்சி யாக சில நியதிகள் செயல்படுத் தப்படவும் இந்த வாஸ்து வழி செய்தது.
அ) பொன்னிறமான மண்ணில் -_ இனிப்பு ருசியும், தாமரை மலரின் வாடையும் இருந்தால், அந்தணர் கள் இதில் வீடு கட்டலாம்.
ஆ) சிவந்த நிறமும், கார்ப்பு ருசியும், குதினாயின் வாடையுள்ள மனையில் சத்திரியர்களும்,
இ) பச்சை நிறமும், புளிப்பு ருசியும் வாடையுமுள்ள மனையில் வைசியர்களும்
ஈ) கருப்பு நிறமும், கசப்பு ருசியும், தானிய வாடையுமுள்ள மனையில் மற்ற இனத்தவர்களும் (சூத்திரர்) வீடு கட்ட வேண்டும்.
இதேபோல், அந்தணர் தென்திசை ஆயர்மேற்றிசை
வந்திடு வணிகர்நல்வடக்கு வான்திசை
தொந்தமில் சூத்திரர் தோன்றுங்கீழ்திசை
பிந்திய நடுவது பிரமன்தானமே
என்று ஜாதியின் அடிப்படை யில் வீடுகட்டும் இடத்தை நிர்ண யம் செய்தது, வாஸ்து.
இவ்வாறு ஜாதி முறையை நிலைநாட்டவும், அதன் மூலம் பல வசதிகளை பெறவும், வழி செய்ததால், இக் கலை சாஸ்திர அந்தஸ்தை பெற் றது என்று ஊகிக்கலாம்.
இந்த வாஸ்து முறையைப் பின்பற்றாமல் கட்டப்பட்ட கட்டடங்களின் உரிமையாளர்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள் என்பதும், இம்முறையைப் பின் பற்றி கட்டப்பட்ட கட்டடங் களின் உரிமையாளர்கள் பலர் பல இன்னல்களுக்கு ஆளானார்கள் என்பதும், இம்முறையைப் பின் பற்றி கட்டப்பட்ட கட்டடங் களின் உரிமையாளர்கள் பலர் பல இன்னல்களுக்கு ஆளானார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரிந் ததே.
ஆனால், இந்த வாஸ்து முறையைச் சொல்லி, மற்றவர்களை ஏமாற்றி வாழ்பவர்கள், கட்டடக் கலைகூறும் சில நல்ல கருத் துக்களையும் சேர்த்துக் கூறுவது, நச்சுப் பொருளை, இனிப்பு மேலு றையுடன் கொடுப்பதற்கு இணை யாகும் அல்லவா?
முனைவர் நல். இராமச்சந்திரன், பேரா. எல்.ஜே. சுப்ரமணியம்
-விடுதலை ஞா.ம.7.2.15

சனி, 13 பிப்ரவரி, 2016

இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது மூடநம்பிக்கைகள் ஜோதிடம் போன்றவைதான்!


நோபல் அறிஞர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் சாட்டையடி!

மைசூரு, டிச.13-_ இந்தியாவின் வளர்ச்சிக்கு தடை போடுவது மூட நம்பிக்கை என்றார் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ராமகிருஷ்ண வெங்கட்ராமன். மைசூரு பல்கலைக் கழகத்தின் சார்பில் மைசூருவில்   நடந்த நோபல் பரிசு நூற்றாண்டு தொடர்சொற்பொழிவு-4-இல் பங்கேற்று 'யாருக்கும் சொந்தமில்லா உலகம்: சான்றுகள் மற்றும் நவீன அறிவியல்' என்ற தலைப் பில் அவர் பேசியதாவது:
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய அய்ரோப்பா நாடுகள் முன்னேறியுள்ள தற்கு நவீன அறிவியல் பயன்பாடுதானே தவிர, அது விபத்தால் நேர்ந்த தல்ல. நவீன அறிவியல் நடைமுறைகளை பின் பற்றி அமெரிக்காவும், மேற்கத்திய அய்ரோப்பிய நாடுகளும் முன்னேறிக் கொண்டிருக்க, பிற நாடுகள் பின் தங்கிவிட் டன. மூடநம்பிக்கைகள், ஜோதிடம் போன்ற அடிப்படை ஆதா
ரங்கள் இல்லாத பல வழக்கங் கள் இந்தியாவின் முன் னேற்றத்தை தடுத்து வருகின்றன.
ஜோதிடமும் ஹோமி யோபதியும் மனரீதியான நம்பிக்கையால் செயல் படுகின்றன. ஜோதிடம், குத்துமதிப்பாக கூறப்படும் ஆலோசனைகளால் ஆனது. அவரவர் வீட்டை தூய்மையாகவும் வெளிச் சமாகவும் வைப்பதற்கு ஜோதிட ஆலோசனைகள் தேவையில்லை. இந்தி யர்கள் மூடநம்பிக்கை களில் இருந்து விடுபட வேண்டும் அல்லது குறையவேண்டும். இந்தியர்கள் எதையும் ஆராய்ந்து நோக்கும் பகுத்தறிவாளர்களாக மாற வேண்டும். மேற்கத்திய நாடுகளில் விண்கலங்கள் விண்ணில் ஏவப்படுவதற்கு முந்தைய கடைசி நிமிடங்களில் முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளில் ஈடுபடு வார்கள்.
இந்தியாவின் வர லாற்று சிறப்பு வாய்ந்த மங்கள்யான் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டப் போது, அது வெற்றிகர மாக விண்ணில் ஏவுவ தற்காக அப்போதைய இந்திய விண்வெளி ஆராய்ச் சிக்கழக (இஸ்ரோ) தலை வர் கே.ராதாகிருஷ்ணன் திருப்பதிக்கு சென்று பிரார்த்தனை செய்தார். இது எனக்கு மிகுந்த ஆச் சரியத்தை ஏற்படுத்தியது.
மங்கள்யான் விண் கலத்தை ஏவுவதற்கு பொருத்தமான நாளாக செவ்வாய்க்கிழமையையும் தேர்ந்தெடுத்தனர். இது போன்ற நடவடிக்கைகள் மேற்கத்தியநாடுகளில் காணமுடியாதது. மக்களி டையே உயிரியல் சார்ந்த அடிப்படை புரிதல் இல்லை. ஆண் குழந்தையை ஈன்றெடுக்காததற்கு தாயை குறைசொல்லும் மூடநம்பிக்கை இந்தி யாவில் உள்ளது. இதை எப்படிஏற்றுக்கொள்ள முடியும்?
2009 ஆம் ஆண்டில் சூரியகிரகணம் ஏற்பட்ட போது அதனால் ஏற்படும் விளைவுகளை தவிர்க்க கர்நாடக அரசு சார்பில் கோயில்களில் பூஜை நடத்த தாராளமாக நிதி ஒதுக்கப்பட்டது. விண்வெளி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ள கர்நா டகத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது ஆச்சரியமளித்தது.
ஒருபக்கம் அதிநவீன தொழில்நுட்பமும், மறுபக்கமும் மூடநம்பிக் கையும் இந்தியாவில் குவிந்துள்ளன. தவறான நம்பிக்கைகள், ஜோதிடம் போன்றவற்றின் எதிர் வினையால் தான் உண் மையான அறிவியல் மலர்ந்தது. மனிதர்களி டையே தாக்கத்தை ஏற் படுத்துவதாக ஜோதிடர் கள் கருதியதன் விளை வால் கோள்கள், நட்சத் திரங்கள் குறித்த அறிவி யல் ஆராய்ச்சிகள் தொடங் கின. மாறிக்கொண்டே இருக்கும் அறிவியலைப் போல அல்லாமல் ஜோதி டம் வளர்ச்சியில்லாமல் உறைந்துபோயுள்ளது என்றார் அவர்.
-விடுதலை,13.12.15