பரபரப்பாகப் பேசப்பட்ட சரவணபவன் ராஜகோபால் வழக்கு குறித்து வளர்தொழில் ஏட்டின் ஆசிரியர் ஜெய கிருஷ்ணன் எழுதியுள்ள முக்கியமான பதிவு..(தமிழ் வலை 30.3.2019)
என்னுடைய அப்பாவின் ஒன்று விட்ட அக்காவின் மகள்தான் திருமதி. வள்ளி அண்ணி. ஒவ்வொர் ஆண்டும் பள்ளி விடுமுறையின் போது சிறுத்தொண்ட நல்லூரில் உள்ள எங்கள் ஆச்சி வீட்டுக்கு செல்லும்போது, பெரும்பாலும் அவர்கள் வீட்டில்தான் விளையாடிக் கொண்டிருப்போம். அவர்களை திரு. ராஜகோபால் நகை, ரொக்கம் என்று எதையும் எதிர்பார்க்காமல் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் திருமணத்துக்கு நாங்கள் எல்லோரும் சென்று இருந்தோம். தன் உறவினர்கள், நண்பர்களுக்கு உதவும் குணம் அவருக்கு இருந்தது. அசோக் நகரில் இருந்த அவரது மளிகைக் கடையில் நின்று பொட்டலம் போடுவதை நான் பார்த்து இருக்கிறேன். அவர் உணவகத் தொழிலில் ஈடுபட்டு வெற்றி அடைந்த பிறகு அவரைச் சுற்றிலும் பிராமணர்கள் கூட்டம்.
வழக்கம் போல் தமிழர்கள் பெரிய வெற்றி அடைந்த பிறகு, நாம் இந்த அளவுக்கு வளர்ந்து விட்டோமா என்று தன் வெற்றியையே பார்த்து அஞ்சுவதைப் போல இவரும் அஞ்சினார். தீவீர பக்தராக மாறினார். கோயில்களுக்கு வாரி வழங்கினார். கார்த்திகை நட்சத்திரம் உள்ள பெண்களைத் திருமணம் செய்து கொண்டால், இன்னும் பெரிய ஆளாகலாம் என்று பரிகாரம் சொன்ன ஜோசியர்களை நம்பி அப்படிப் பட்ட பெண்களைத் தேடி திருமணம் செய்து கொண்டார். முதலில் திருமணம் செய்து கொண்டது ஒரு பிராமணப் பெண்ணை. அவர் கூட இன்னொருவரின் மனைவி. அடுத்து கார்த்திகை நட்சத்திரம் உள்ள இன்னொரு பெண். அவரும் இன்னொருவர் மனைவி. இவர்கள் ஜாதகங்களைப் பார்த்து தேர்ந்து எடுத்துக் கொடுத்தவர்கள், அவர் நம்பிய ஜோசியர்கள்.
காமம் மட்டுமே அவரது நோக்கமாக இருந்தால் அதற்கு வேறு எத்தனையோ வழிகள் உள்ளன. அவரிடம் இருக்கும் பணத்துக்கு வெளியே தெரியாமல் நிறைவேற்றிக் கொண்டிருந்திருக்கலாம். வெளிநாடுகளுக்கு சென்றிருக்கலாம். அவரிடம் இருந்த ஜோசியப் பித்து காரணமாகவே அவர் இப்படி வீணாகப் போனார். பிந்தைய காலக் கட்டங்களில் அவரால் நிறைய பிராமணர்களே பயன் அடைந்தார்கள். அவர் பிறந்த ஊரில் வனத்திருப்பதி என்ற பெயரில் ஒரு பெரிய கோயிலைக் கட்டி, பிராமணர்களுக்கே படியளந்து கொண்டிருக்கிறார்.
இவருடைய செயல்களால் அதிகம் பாதிக்கப்பட்டவர் எங்கள் வள்ளி அண்ணி. இப்படி ஒரு வாழ்க்கை தனக்கு அமைந்து விட்டதை எண்ணி எப்போதும் அவர் சோகத்துடனேயே காணப்படுவார். அண்மையில் அவரது தம்பி திரு. குமரேசன் இறந்த போது, ‘என் கதை கேட்டு வருந்தினானே என் தம்பி..’ என்று கதறிக் கொண்டிருந்தார். எங்கள் அண்ணியை நினைத்து நாங்கள் மிகவும் வருந்தினோம். அனைவர் மீதும் அன்பு செலுத்தக் கூடியவர். இவ்வளவு பெரிய அளவுக்கு பணத்தில் உயர்ந்த பின்னும், தொடக்கத்தில் இருந்த மாதிரியே அனைவரிடமும் பழகக் கூடியவர். எங்கள் தந்தையார் மறைந்த போது, தினத் தந்தியில் கொடுத்து இருந்த விளம்பரத்தைப் பார்த்து, நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தியதோடு, ஏன் எனக்குச் சொல்லவில்லை என்று உரிமையோடு கடிந்து கொண்டார்.
உறவினர்கள் வீட்டுத் திருமணங்களில் தவறாமல் கலந்து கொண்டு அனைவரிடமும் கலந்துரையாடி மகிழ்வார்.
திரு. ராஜகோபால் கடுமையான உழைப்பாளிதான். அதை மறுக்க முடியாது. இரவு பத்து மணிக்கு தன் உணவக சாம்பாரை வாங்கி சுவைத்துப் பார்த்து கெட்டுப் போகாமல் தரமாக இருக்கிறதா என்பதை சோதித்துப் பார்ப்பார். உணவுகள் தரமாகவும், சுவையாகவும் இருக்க வேண்டும் என்பதில் சற்றும் விட்டுக் கொடுக்க மாட்டார். உணவகங்களின் தூய்மையைப் பராமரிப்பார். ஆனால் அவரை கவிழ்த்துப் போட்டது, ஆன்மிகமும், ஜோசியமும் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. என்ன பரிகார பூஜைகள் பண்ணி என்ன பயன்? உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு இப்படி ஆகி விட்டதே?
எங்கள் அண்ணியின் திருமண வாழ்வு இப்படி ஆனதில் எங்களுக்கு எல்லாம் துன்பம்தான்.
இனி அவரது பிள்ளைகளாவது விவரமாக செயல்பட்டு சரவணபவனை காப்பாற்ற வேண்டும். முடிந்தால் இன்னும் வளர்க்க வேண்டும். தங்கள் அம்மாவை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.
சொந்த உழைப்பில் முன்னேறிய ஒருவர் சோதிடத்தை நம்பியதால் என்னவானார்? என்பதை இதன் மூலம் உணரமுடிகிறது.
(குறிப்பு: சரவணபவன் ராஜகோபால் மறைவிற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே எழுதப்பட்டது இது)
- விடுதலை நாளேடு, 3.8.19