பக்கங்கள்

செவ்வாய், 21 ஜூலை, 2015

குருபெயர்ச்சியா? ஜாதிப் பயிற்சியா?ஜூன் 13 2014 (தி.ஆ.2045 விடை -_ 30) வைகாசி 30ஆம் தேதி என்னும், ஜூபிடர் என்னும் குருப்பெயர்ச்சி மிதுன இராசியில் இருந்து கடக இராசிக்கு மாறுகிறது. இது வாக்கியப் பஞ்சாவ்கம் தரும் தகவல் ஜூன் 19 - _ 2014 (தி.ஆ. 2045 ஆடவை - _5) ஆனி 5ஆம் நாள் வியாழன் என்னும், ஜூவிடர் என்னும், குருப்பெயர்ச்சி மிதுன இராசியில் இருந்து கடக இராசிக்கு மாறுகிறதாம் - இது திருக்கணித பஞ்சாங்கம் தரும் தகவல்.
பஞ்சாங்கத்துக்கு பஞ்சாங்கம் முரண்பாடு, ஆனால் அறிவியலில் இல்லை முரண்பாடு. அறிவியலில் எல்லாமே சமன்பாடுதான்.
வியாழன் கோள் சூரியனைச் சுற்றி வர, பூமியின் கணக்கில் ஏறத்தாழ 12 ஆண்டுகள்ஆகின்றன. நமது பூமி சூரியனைச் சுற்றிவர ஒரே ஆண்டு ஆகிறது. உண்மையில் வியாழனுக்குப் பின்னால் தெரியக் கூடிய விண்மீன் மண்டலக் காட்சியானது பூமியின் பெயர்ச்சியாலேயே மாறித் தெரிகிறது. பூமியில் நாம் பார்க்கும் எல்லா காட்சி மாற்றத்திற்கும் பூமியின் சுழற்சியும், பெயர்ச்சியுமே உண்மையான காரணம். அதுவும் மற்ற கோள்களின் பின்புலம் (இராசி) மாறுவதற்கும் பூமியின் பெயர்ச்சியே காரணம். அப்படியிருக்கும்போது குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி என பத்திரிகைகள் பொய்ச் செய்திகளை ஆராயாமல் வெளியிடுவது, கோவில் குருக்களின் வயிற்றை நிரப்பவே! அதற்குத்தான் குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜையும், கட்டணமும்.
எல்லாக் கோள்களும் தன்னைத்தானே சுற்றிக் கொண்டுதான் சூரியனைச் சுற்றி வருகின்றன. அப்படி இருக்க சனிப் பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி எனக் கூறும் ஆன்மிகம், சனி சுழற்சி, குரு சுழற்சி பற்றி சொல்வதில்லையே. அதிலும் நவக்கிரகம் என்று கூறும் (இப்போது 8 கோள்களின்) ஆன்மிகம், புதன் பெயர்ச்சி வெள்ளிப் பெயர்ச்சி பூமிப் பெயர்ச்சி, செவ்வாய்ப் பெயர்ச்சி, வின்மம் (யுரேனஸ்) பெயர்ச்சி, சேண்மம் (நெப்டியூன்) பெயர்ச்சி பற்றி சொல்வதே இல்லையே... ஏன்? ஏன் எனில் கிரகத்தில்கூட உயர் ஜாதி கிரக மாம் இதோ மாலை முரசு தரும் தகவல்.
குரு சில தகவல்கள் கிழமை    வியாழன்
நட்சத்திரம்    புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
ராசி    தனுசு, மீனம்
பால்    ஆண்
நட்பு    சந்திரன், செவ்வாய், சூரியன்
பகை    புதன், சுக்கிரன்
சமம்    சனி, ராகு, கேது
கோத்திரம்    ஆங்கிரசு
அதிதேவதை    இந்திரன்
பிரத்யதி தேவதை    பிரம்மா
குணம்    சாத்விகம்
திசை    வடக்கு
மொழி    வடமொழி
சாதி    பிராமண சாதி
ஆடை    தங்க மஞ்சள்
மனைவியர்    தாராதேவி, சங்கினி
புதல்வர்கள்    எமகண்டன், கசன், பரத்வாஜன்
ஊர்தி    யானை
தசை    16 ஆண்டு
மலர்    முல்லை
தானியம்    கடலை
உணவு    தயிர்ச் சோறு
உலோகம்    பொன்
-விடுதலை ஞா.ம.19.7.14 ப8

திங்கள், 20 ஜூலை, 2015

ராசியும் வானியலும்


ஜோதிடத்தில் தலையாய பங்குவகிப்பது இராசி அல்லது இராசிச் சக்கரமாகும். இந்த இராசி என்பது என்ன? இதற்கும் வானியலுக்கும் என்ன தொடர்பு? இதனை முதலில் விளங்கிக் கொண்டால் ஜோதிடத்தினை அறிவியல்பூர்வமாக விளங்கிக் கொண்டால் ஜோதிடத்தினை அறிவியல்பூர்வமாக விளங்கிக்கொள்ள ஏதுவாகும். இரவு வானில் விண்மீன்கள் ஜொலிப்பதைக் கண்டு களித்திருப்பீர்கள். சற்றுக் கவனமாக நோக்கினால், விண்மீன்களும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகர்வது போன்று தோற்றமளிப்பதைக் காணலாம். மெய்யாக, பூமி சூழல்வதால்தான் இத்தோற்றம் ஏற்படுகிறது.
மேலும், சலியாது பலநாள்கள் வானத்தை உற்று நோக்கினால் சில விண்மீன்கள் மட்டும் ஏனைய விண்மீன்களிலிருந்து வேறுபட்டுத் தோற்றமளிப்பதைக் காணலாம். மேலும் விண்மீன்களின் பின்புலத்தில் இந்தக் குறிப்பிட்ட சில மட்டும் சலனிப்பதைக் காணலாம். இவைதான் கோள்கள். கிரகம் என்று வடமொழியிலும் பிளானட் என்று கிரேக்க மொழியிலும் வழங்கப்படுகிறது. பிளானட் என்றால் அலைபவன் என்று பொருள்.
விண்மீன்களை உற்றுநோக்கினால் வேறு சில தோற்றங்களையும் காணலாம். சிலசமயம் வானில் புலப்படும் முகில்களில் யானை, குதிரை என பல உருவங்கள் தென்படுவது போன்று, விண்மீன்கள் இடையே சில உருவங்களைக் கற்பனை செய்ய முடியும். சில வார இதழ்களில் புள்ளிகளை இணைத்து மறைந்துள்ள உருவங்களைக் கண்டுபிடி எனக் கூறுவதுபோல, விண்மீன் சிலவற்றை இணைத்துப் பார்த்தால் சில உருவங்களைக் காணலாம்.
இவ்வாறுதான் கரடி, நாய், மீன், மனிதத் தலை, குதிரை, வேடுவன், எருது எனப் பல உருவங்களை நமது முன்னோர்கள் கற்பனை செய்துள்ளனர். இவைகளை விண்மீன் தொகுப்பு எனக் கூறலாம். இவை கற்பனைதானே தவிர, மெய்யாக இரவு வானில் உள்ள பொருள்கள் அல்ல. கோள்கள், விண்மீன்கள் தவிர வானத்தில் காட்சி தருபவை சூரியனும் சந்திரனும்தான்.
பூமி கோள வடிவில் உள்ளதால் பூகோளம் என்கிறோம். பார்வைக்கு இரவு வான் நம் தலைமீது கவிழ்த்து வைக்கப்பட்ட தேங்காய் மூடி போன்று உள்ளது அல்லவா? கற்பனையாக இரவு வானின் தேங்காய் மூடி உருவை முழுமையாக்கினால், ஒரு பெரும் கோளம் கற்பனை செய்யலாம் அல்லவா? இதைத்தான் வான்கோளம் என்கிறோம். அதாவது, ஒரு மிக மிகப்பெரிய கோளத்தில் விண்மீன்கள் பதிந்துள்ளன எனவும், இந்தக் கோளத்தின் மய்யத்தில் சிறு எலுமிச்சைப் பழம்போல் பூமி கோளமாய் இருக்கிறது என்றும் கற்பனை செய்யலாம் அல்லவா? இவ்வாறுதான் நமது முன்னோர்களும் கற்பனை செய்தனர். இதனை, பூகோளம் என்றழைத்தனர்.
வான்கோளத்திற்கும், பூமிக்கும் இடையே கோள்கள் பூமியைச் சுற்றி வலம் வருவதாகவும் புனைவு செய்தனர். சூரியன் ஒரு நாளில் பூமியைச் சுற்றுவதால் இதனை முதல்கோள் எனவும், அதற்கு மேலே சந்திரன் என கோள்களை வரிசைப்படுத்தினர்.
சூரியன் பூமியைச் சுற்றும் பாதைக்கு, பூமியின் அச்சு 23லு பாகை சாய்வாக உள்ளது. ஆகவே, பூமியின் வட, தென் முனைகளுக்கு நேரே வான்கோள வட, தென் முனைகள் அமையாது, 23லு பாகை சாய்வாக வான்கோளத்தின் மத்திய ரேகை அமையும். வான்கோளத்தில் சூரியன் வலம் வரும் பாதை சூரிய வீதி என்றழைக்கப்படுகிறது. சூரியவீதியின் சிறப்பு என்னவெனில், கோள்கள் அனைத்தும் மற்றும் நிலவும் சூரிய வீதியைச் சார்ந்தே வான்கோளத்தில் சலனிக்கும். சூரியவீதிக்கு 80 இரண்டு பக்கமும் உள்ள பகுதியில் மட்டுமே கோள்கள் பாயும். சூரியவீதியின் இருபுறமும் 80 உள்ள வான்கோளம் பகுதியே ராசி என்று அழைக்கப்படுகிறது. வான் கோளத்தின் மத்தியப் பகுதியில் 160 அகலத்தில் 3600 வட்டமாக ராசி உள்ளது.
இந்த ராசியை 12 சம பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதியில் உள்ள விண்மீன்களைக் கற்பனையாக, சில உருவங்களைப் புனைவு செய்தனர் நமது முன்னோர். மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்ன 12 ராசிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் பூமி (1) வான்கோளத்தில் உள்ள மேஷ ராசிக்கு நேராய் உள்ளது. ஆகவே, சூரியனிலி ருந்து யாராவது பூமியைப் பார்த்தால், பூமி மேஷ ராசியில் உள்ளது போன்று தோன்றும். ஆனால், பூமியிலிருந்து பார்ப்பவருக்கு, சூரியன் துலாம் ராசி யில் உள்ளது போன்று தோன்றும். வானியலில், இதை, சூரியன் துலாமில் இருப்பதாகக் கூறுவோம்.
ஆனால், பூமி (2) என்ற இடத்தில் பூமி தனது சுற்றுப்பாதையில் அமைத்தால், சூரியனிலிருந்து பார்ப்பவருக்கு பூமி மிதுனத்திலும், பூமியிலிருந்து பார்ப்பவருக்கு சூரியன் தனுசுவிலும் உள்ளது போன்று தோன்றும்.
ஆக உள்ளபடியே ராசிகளையும், விண்மீன் தொகுப்பு (Constellations) களை நமது முன்னோர் வடிவமைத்தது, இரவு வானின் நிகழ்வுகளைச் சுட்டுவதற்குத்தான். காலப்போக்கில் இந்த உருவங்கள் தான் புராணங்கள் உருவாகி புனைவுகள் புரட்டுகள் நிலைகொண்டிருக்கும் எனக் கருதலாம். சந்திரன் இன்று இரவு எங்கே இருக்கும் என்று எப்படி விவரிப்பது. பூமியின் சூழற்சியால் சந்திரன் மேற்கு முகமாக மெல்ல மெல்ல ஒவ்வொரு நொடியும் நகரும் அல்லவா? இச்சூழலில் எப்படி விவரிப்பது. இங்குதான் ராசிகள் உதவுகின்றன. இன்று கடக ராசியில் சந்திரன் இருக்கும் என்றால் மிகத் தெளிவாக அனைவரும் விளங்கிக்கொள்ள முடியும். கடக ராசி மேற்குமுகமாக நகர்ந்தாலும் அத்துடன் சந்திரனும் இணைவாக நகரும் அல்லவா? ஆகவே விண்மீன் தொகுப்புகள் வானவியலில் கற்பனைப் பிரதேசங்கள், வான் நிகழ்வுகளை எளிதில் சுட்ட உபயோகமானவையாகத் திகழ்கின்றன. கோள்களும், சந்திர சூரியனும் ராசி மண்டலத்தில்தான் சலனிப்பவை என்பதால் விண்மீன் தொகுப்புகளிலேயே மிக முக்கியத்துவம் பெற்றதாக ராசி மண்டலமும், அதன் 12 விண்மீன் தொகுப்பும் (ராசிகளும்) திகழ்கின்றன.
உத்ராயணம் தட்சணாயனம் என்றால் என்ன?
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 ஆம் தேதி சூரியன் மேஷ ராசியில் இருக்கும். ஜூன் 21ஆம் தேதி கடக ராசியிலும், செப்டம்பர் 23 ஆம் தேதி துலாம் ராசியையும், டிசம்பர் 22 ஆம் தேதி மகர ராசியிலும் அமையும். மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23ஆம் தேதி ஆகிய இரண்டு நாள்களில் இரவு பகல் பூமி முழுவதும் சரிசமமாக இருக்கும். இந்த இரண்டு நாள்களை, சம இரவு நாள்கள் எனவும் இந்நாள்களில் வான்கோளத்தில் சூரியன் அமையும் புள்ளிகளை, சம இரவுப் புள்ளிகள் எனவும் அழைப்பர்.
மார்ச் 21ஆம் தேதிக்குப் பிறகு சூரியன் மேஷத்திலிருந்து கடகம் நோக்கி நகரும். பூமி 23லு பாகை சாய்வாக இருப்பதால், சூரிய ஒளி பூமியின் வடகோளத்தில் அதிகமாயும் தென் கோளத்தில் குறைவாகவும் விழும். வடகோளத்தில் கோடை; தென் கோளத்தில் குளிர் நிலையைப் பூமியில் தோற்றுவிக்கும். இச்சமயத்தில் நமது பார்வைக்கு, சூரியன் நேர் கிழக்காக உதிக்காது. சூரிய உதயப் புள்ளி மெல்ல மெல்ல வடக்கு நோக்கி நகரும். இச் சமயத்தில் வடகோளத்தில் உள்ளவர் களுக்குப் பகல் பொழுது நீளும். ஜூன் 21 ஆம் தேதி சூரிய உதய விலகல் வடக்கு நோக்கி உச்சத்தை அடையும். மறுபடி சூரிய உதய விலகல் வடக்கு நோக்கி உச்சத்தை அடையும். மறுபடி சூரிய உதயப் புள்ளி தெற்குநோக்கி நகரத் தொடங்கும். செப். 23 அன்று மறுபடி சமஇரவு. அன்று மார்ச் 21ஆம் தேதி உதித்தது போல, சூரியன் நேர்கிழக்கில் உதிக்கும். செப். 23 முதல் டிச. 22 வரை சூரிய உதயப்புள்ளி தெற்கு நோக்கி நகரும். டிச. 22 அன்று, உச்ச கட்டத் தெற்குப் புள்ளியில் சூரிய உதயம் அமையும். டிச. 23 முதல் சூரியன் வடக்கு நோக்கி நகரும். மறுபடி மார்ச் 21 சம இரவு நாள். அன்று நேர் கிழக் காக சூரிய உதயம் அமையும்.
அதாவது டிச. 23 முதல் ஜூன் 21 வரை சூரிய உதயப் புள்ளி வடக்கு முகமாகவும், ஜூன் 22முதல் டிச. 22 வரை தெற்குநோக்கியும் அமையும். ஆகவே, இதனைக் குறிக்க முன்னதை உத்தராயணம் எனவும் பின்னதைத் தட்சணாயனம் என்று அழைப்பர். ஆக மகரம் முதல் கடகம் வரை சூரியப் பெயர்ச்சி உத்தராயணம். சிம்மம் முதல் மறுப்பு கடகராசியை அடைவது தட்சணாயனம்.
ராசிகள் உருவானது எங்கே?
இந்திய ஜோதிடத்திலும் வானவியலிலும் பயன்படுத்தப்படும் ராசி எனும் கருத்தும், 12 ராசிகளின் பெயர்களும் பெரும்பாலும் கிரேக்க பாபிலோனியக் கொள்கைகளுக்கு ஒப்பாக இருப்பது வியப்பான சிறப்புச் செய்தி ஆகும்.
வராகமிகிரர் தனது பிரஹத் சம்ஹிதையில் கிரேக்க ஜோதிடர்கள் குறித்துக் (யவனர், மிலேச்சர் என குறிப்பிட்டு) கூறுகிறார். மேலும், பிரஹக் ஜாதகம் எனும் நூலில் ராசிகளின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. சிதம்பர அய்யர் இந்நூலினைக் குறித்துக் கூறும்போது, கிரேக்கர்கள் இந்தியர்களிடையே நீண்டகாலத் தொடர்பு இருந்திருக்க வேண்டும் எனக் கூறுவதும் கவனிக்கத்தக்கது. அதுபோன்றே வராகமிகிரர் பயன்படுத்தும் சில கலைச் சொற்கள் கிரேக்க மொழியின் திரிபு என பாலசந்திரராவ் சுட்டிக்காட்டுகிறார். மேலும், வானியல் நூல்கள் ஆசிரியர்கள் குறித்துக் கூறும்போது, பவுலிஸ், ரோமசு சித்தாந்தங்கள் எனவும் சுட்டப்படுகின்றன. பவுலிஸ் என்பது பவுலஸ் அலெக்ஸாண்டிரனஸ் என்பர் எனவும் ரோமசு என்பது ரோமபுரியைக் குறிப்பது எனவும் கூறப்படுகிறது. ஆக வானவியல் கருத்துகள் பரவியதுபோல ஜோதிடக் கருத்துகளும் இங்கும் அங்கும் உலகம் முழுவதும் பரவியிருக்கக்கூடும் என துணியலாம்.
2.8.2000 அன்று மாலை சுமார் 4 மணி அளவில் திருநள்ளாறு சனி பகவான் ஆலயத்தில் சுமார் 4 லட்சம் பக்தர்கள் கூடினர். அந்நகரமே அல்லோலப் பட்டது. அன்று சனி பகவான், அதுவரை தான் குடியிருந்த மேஷ ராசியை விட்டு அகன்று ரிஷபராசிக்கு மாறியதே இதற்குக் காரணம்.
சனிக்கோள் சூரியனை ஒரு முறை சுற்ற சுமார் 36 ஆண்டுகள் எடுக்கும். ஆகவே, 12 ராசிகள் உள்ள சூரியவீதியில் சனி ஒவ்வொரு ராசியிலும் சுமார் 2.5 ஆண்டுகள், காணப்படும். இதனைத்தான், அந்த ராசியை, சனி பிடித்துள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. இரண்டரை ஆண்டுகள் கழித்து, சனி அந்த ராசியிலிருந்து விலகி அடுத்த ராசிக்கு மாறும். இதனைத்தான் சனிப்பெயர்ச்சி எனக் கூறுகிறார்கள்.
ஆகஸ்ட் 2000த்தில் மேஷ ராசிக்காரருக்கு சனி விலக ஆரம்பித்து விட்டதாகவும், ரிஷப ராசிக்காரரை சனி பிடித்து விட்டதாகவும் அதற்கடுத்துள்ள மிதுன ராசிக்காரருக்கு சனியின் பார்வை படியத் தொடங்கிவிட்டதாகவும் ஜோதிடம் கூறுகிறது. இதுதான் 7லு நாட்டுச் சனியின் பின்புலமுள்ள கருத்து. (புரட்டு)
சனி மட்டுமல்ல, எல்லாக் கோள்களுமே சூரியனைச் சுற்றுவதால் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகரும். சந்திரன் இரண்டே கால் நாளும், இராகு, கேது ஒன்றரை வரு டமும், சனி இரண்டரை வருடமும், குரு ஒரு வருடமும், செவ்வாய் ஒன்றரை மாதமும், சூரியன், சுக்கிரன், புதன் ஆகியவை ஒரு மாதமும் ஒரு ராசியில் தங்கும் என்பது வழக்கு. (நன்றி: விவேகானந்தன், தீக்கதிர்). நாள் என்ன செய்யும்? கோள் என்ன செய்யும்?
தி. வெங்கடேஸ்வரன்
விடுதலை,14.8.10

ஞாயிறு, 19 ஜூலை, 2015

ஜோதிடப் புரட்டை புரிந்து கொள்வீர்!

ஜோதிடப் புரட்டை புரிந்து கொள்வீர்!மிகப்பழங்காலத்தில் வானவியல் பற்றிய சரியான உண்மைகள் தெரியாத போது உருவானதுதான் ஜோதிடம். அது அந்தக்காலத்து அறிவு. அவ்வளவுதான் அதற்கு மரியாதை. ஆனால், அதையே இப்போதும் கடைப்பிடிக்க வேண்டும் என்றால் எப்படி? மாற்றம் என்பதுதான் மாறாதது. இதற்கு நேர் எதிர்மறையா னதுதான் மதங்கள். ஆனால், கிறித்துவ மதத்தில் சில மாற்றங்கள் தெரியத் தொடங்கியிருக்கின்றன. போப் ஜான் பால் மிமி கலிலியோவுக்கு கிறித்துவ மதம் இழைத்த கொடுமைக்கு வெளிப்படை யாக மன்னிப்பு கேட்டதும், இப் போதிருக்கிற போப் அதற்கு ஒரு படி மேலே சென்று உருமலர்ச்சி கொள் கையை ஏற்றுக்கொண்டதும், மாற்றம் என்பதுதான் மாறாதது என்பதை எண்பித்துள்ளது. ஆனால், ஹிந்து மதம்; சனாதன மதம்; வேதமதம் என்கிற பார்ப்பன மதம் மட்டும் மாறாமல் அதே காட்டுமிராண்டி காலத்து பழக்க வழக்கங்களை தொடர்ந்து கடைப் பிடித்துக்கொண்டு வருகிறது. அதில் ஒரு கூறுதான் இந்த ஜோதிடம்.
இந்த தனி உரிமை, தனி உடைமை சமுதாய அமைப்பில் சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தவிர்க்க இயலாதவை. வாழ்வு நிலையில் பல்வேறு சிக்கல்களில் குடும்பம் சிக்குண்டு இருப்பதும் இயல்புதான். அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் பலகீன மனம் உடையோர்தாம் இந்த ஜாதக மோசடி செய்வோரின் மூலதனம். இல்லாத கோள்களை இருக்கிறது என்றும், இருக்கும் கோள்களை இல்லை என்றும் ஜோதிடத்தில் கூறுகிறார்கள்.
முக்கிய மாக பூமியே இவர்கள் ஜோதிடத்தில் இல்லை. சிறுபிள்ளைத்தனமாக இருக் கிறது நமக்கு. சிரிப்புகூட வந்துவிடுகிறது. ஆனால் இதை வைத்துக்கொண்டுதான் மக்களின் வாழ்க்கையோடு விளையாடு கிறார்கள். ஜாதகக் கணிப்பில் ஒரு விநாடி தவறினால்கூட கணிப்புத் தவறும் என்கிறார்கள். சில நட்சத்திரங்களில் இருந்து நமக்கு ஒளி வந்து சேருவதற்கு பல ஆண்டுகள் ஆகும். வீனஸ் என்ற கோளின் உண்மை நிலைக்கும், நமக்குத் தெரியும் நிலைக்கும் இடையில் ஆறு நிமிட நேர வேறுபாடு இருக்கிறது. அதாவது வீனஸ் என்று நாம் பார்ப்பது ஆறு நிமிடத்திற்கு முந்தைய தோற்றம். அதே இடத்தில் இப்போது தெரிவது வேறொரு நட்சத்திரம். இப்படி இருக்க இவர்கள் அந்த நட்சத்திரங்களை வைத்து பூமியில் உள்ள மனிதர்களுக்கு இராசி பலன் பார்க்கிறார்கள்? தந்தை பெரியார் பிறந்த காலம் என்பதைப்பற்றி அன்று கேட்ட அடுக்கடுக்கான கேள்விகளுக்கு என்றுமே எவருமே பதில் சொன்னதில்லை.  அதுமட்டுமல்ல, இந்த இராசி பலனில் சமூகத்தில் சரி பாதியாக இருக்கும் பெண்களுக்கு இடமே கிடையாது. இது ஒன்றே போதும் ஜோதிடம் என்பது ஆரிய பண்பாட்டின் ஊடுருவல் என்பதற்கு சான்று.
கர்நாடகா அரசு இந்த மோசடிகளை வெளிப்படையாகவே கண்டித் திருக்கின்றது. ஆனாலும் ஜோதிடத்தை பள்ளிகளிலும், கல்லூரி களில் பாடமாக்கத் துடிக்கும் மத்திய அரசுதன் இப்போது நமக்கு வாய்த் திருக்கிறது? முன்னாள் குடியரசுத் தலை வரும் சிறந்த அறிவியல் அறிஞருமான ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் தான் எழுதிய அக்னிச் சிறகுகள் என்ற புத்தகத் தில் ஜோதிட மடமையைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார். டாக்டர் கோவூர், டாக்டர். பராஞ்சிபே, மா. சிங்காரவேலர் உள்பட ஏராளமான அறிஞர்கள் இதைச் சாடியுள்ளனர். ஜாதக பலனால் திருமணமே ஆகாமல் தவித்த தன் நண்பரின் மகளுக்காக புதிதாக ஒரு ஜாதகத்தை - அந்த பெண்ணுக்கு பொருத்தமான ஒரு ஜாதகத்தை எழுத வைத்து, இப்போது அந்தப் பெண் நன்றாக வாழ்ந்து கொணடிருக்கிறாள். இது எங்கும் நடக்கிறது. புகழ் பெற்ற எழுத்தாளர் குஷ்வந்தசிங் பத்திரிகை அலுவலகத்தில் பணிபுரியும் போது, இராசி பலன் எழுதக்கூடிய நபர் வரவில்லையே என்பதால் இவர், அந்த பக்கத்தை நிரப்ப வேண்டுமே என்ப தற்காக ஏற்கனவே எழுதி அதே பத்தி ரிக்கையில் வெளியான ஏதோவொரு இராசி பலனை எடுத்துப் போட்டிருக் கிறார். அது பெரிய வரவேற்பை பெற்றி ருக்கிறது. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்றிருக்கும் மக்கள்தானே வேறு எப்படி இருக்கும்?
இந்த மோசடிக்கு நாமும் துணைபோவதா என்று, குஷ்வந்த் சிங் இராசி பலன் பகுதியையே  அந்தப் பத்திரிகையில் இருந்தே அகற்றியிருக்கிறார். அதுமட்டு மல்ல, ஒரு நாயின் பிறந்த நாளைக் கொண்டு போய் ஜோதிடக்காரரிடம் காட்டி பலன் கேட்ட போது, அதற்கு அந்த ஜோதிடர் மனிதர்களுக்கு பார்ப்பது போல பார்த்து பலன் சொன்னதை ஏறக்குறைய எல்லோருமே படித்தும் கேட்டும் இருப்போம். அதுமட்டுமல்ல, ஈரோட்டில் ஒரு பெண் தனக்கு ஜோதிடம் பார்த்த பார்ப்பனர் ஒருவர் ஏமாற்றுப் பேர்வழி என்றதும், துடைப்பக் கட்டையைக் கொண்டு அடித்து விரட்டியதை எல்லா நாளேடு களும்தான் வெளியிட்டன. இதற்குப் பிறகும் இந்த மோசடிகள் தொடரத்தான் செய்கின்றன. அந்த மோசடிகளைத்தான் பகுத்தறிவு நாளேடாம் விடுதலை தோலுரித்துக் காட்டியிருக்கிறது. தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களும் ஏமாற்றாதீர்! ஏமாறாதீர்! என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.
ஏற்றத் தாழ்வற்ற சமத்துவம் ஏற்படுகின்ற வரையிலும் இந்த மோசடிகளை இப்போதைக்கு வீழ்த்த முடியாது என்றாலும், பணம் கொடுத்துப் பார்த்த ஜோதிடம் பலிக்க வில்லை என்றால் சம்பந்தபட்ட ஜோதி டரைத் தட்டிக் கேட்கும் மனோபாவ மாவது மக்கள் மனதில் வரவேண்டும். அப்படி வந்தாலே இந்த ஜோதிடம் ஒழிந்துவிடும்.
விடுதலை ஞாயிறு மலர்,6.12.14

ஞாயிறு, 5 ஜூலை, 2015

சோதிடம் - தந்தை பெரியார்இந்தியாவில் இந்துக்கள் என்ப வர்கள் சாமி ஆடுதல், வாக்குச் சொல் லுதல், பூதம், பேய், பிசாசு, மனிதனை அடித்தல், மனிதனைப் பிடித்தல், மந்திரம் மந்திரித்தல், பில்லி சூனியம் செய்து மக்களுக்குத் துன்பம், சாவு முதலியவை உண்டாக்குதல், குட்டிச்சாத்தான் கருப்பு முதலியவை களைக் கொண்டு சித்து விளையாடுதல், வசியம் செய்து மக்களை வாதீனப்படுத்தல், முன் ஜென்மம் பின் ஜென்மம் உண் டெனல், இவை முத லாகிய விஷயங்களில் நம்பிக்கை கொண்டு தங்கள் வாழ்க்கை நலத்திற்கு என்றும் எதிரிகளின் கேட்டிற்கு என்றும், எப்படித் தங்கள் பணத்தையும் நேரத் தையும் உபயோகிக்கின்றார்களோ அதுபோலவே தங்கள் வாழ்க்கைக்கு ஜோசியம் என்னும் ஒரு விஷயத்திலும் அதிக நம்பிக்கை  வைத்துப் பணத் தையும் நேரத்தையும் செலவு செய்து வருகிறார்கள். இதனால் மக்களின் வாழ்க்கைக்கு எவ் வளவோ கெடுதிகளும், பொருள் நஷ்டம், காலம் நஷ்டம், தப்பு அபிப்பிராயம் முதலியவைகளும் ஏற்பட்டு வருவதை கண்கூடாய்ப் பார்க்கிறோம்.
சாதாரண மாய் எப்போதுமே ஜோசியன், மந்திரவாதி, கோயில் குருக்கள் ஆகிய மூவரும் மக் களின் பேராசைக்கும் முட்டாள்தனத் திற்கும்  சரிபங்கு தாயாதிகளே யாவார்கள். எப்படி எனில் முதலில் ஜோசியன் ஒருவ னுடைய ஜாதகத்தைப் பார்த்துப் பலன் சொல்லுவதன் மூலம் கண்டம் நீங்க சாந்தியும் கிரகதோஷ பரிகாரத்திற்குச் சாமிகளுக்கு அர்ச்சனை அபிஷேகங் களும் செய்யும்படி சொல்லுவான். இதைக் கேட்ட  அந்த மனிதன் தனது முட்டாள் தனத்தினால்  ஏற்பட்ட பயத் திற்காகவும், ஆசைக்காகவும், மந்திரவாதியைக் கூப்பிட்டு சாந்தி கழிக்கச் சொல்லுவான். இந்த மந்திரவாதிகள் அனேகமாய் வைத்தியர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் சாந்தி கழிக்கக்  கடைச்சாமான் பட்டியல் போடும் போதே ஒரு மண்டலம் (48 நாள்) அரை மண்டலம் நவகிரகங் களுக்கோ அல்லது குறிப்பிட்ட சனி செவ்வாய் முதலிய ஏதாவது  ஒரு கிரகத்திற்கோ, ஒரு சாமிக்கோ, அர்ச்சனை எள்ளு, பருத்திக் கொட்டை முதலிய தானம் விளக்கு வைத்தல் அபிஷேகம் செய்தல் ஆகிய வைகளையும், ஏதாவது புண்ணியப் புராணம்  படித்தல் முதலி யவைகளையும் சொல்லிவிடுவான். இவை களை  எல்லாம் செய்வதால் மந்திர வாதிக்கும் அர்ச்சகனுக்கும் புராண பிரசங்கிக்கும் வரும் வரும்படியில் ஒரு பாகம் ஜோசியனுக் குச் சேர்ந்து விடும். இந்தப் படியே எங்கும் இப்போதும் நடப்பது வழக்கம். ஆகவே இந்த விஷ யத்தில் மந்திரம் அர்ச்சனை ஆகியவை களைப் பற்றி விசாரிக்குமுன் ஜோசியம் என்பதைப் பற்றியே முதலில் யோசிப் போம்.
அதாவது:- ஜோசியம் என்றால் என்ன? அது உண்மையா? அப்படி ஒன்று இருக்க முடியுமா? என்பன முதலாகிய விஷ யங்களை ஆராய்ச்சி செய்து பார்ப்போம்.
ஜோசியம் என்பது உலக வழக்கில் அனுபவத்தில் ஒரு மனித ஜீவனுடைய பிறந்த காலத்தை ஆதாரமாய் வைத்து அந்த மனிதனின் வாழ்க்கை அதன் சம்பவம், பலன் முதலியவைகளை மொத்தமாய் வருஷப்பலனாயும் மாதப் பலனாயும் தினப் பலனாயும் நிமிஷப் பலனாயும் சொல்லுவதும் அவற்றுள் துன்பம் வரத்தக்கது ஏதாவது நேர்ந்தால் அதற்கு ஏதாவது பரிகாரம் செய்து தடுத்துக் கொள்வதும். இஷ்ட சித்திக்கு ஏதாவது  விரோதமாய் இருந்தால் அதற்கும் ஏதாவது பரிகாரங்கள் செய்வதன் மூலம் விரோ தத்தை நீக்கி சித்தியடைய முயற்சிப்பதும் ஆகிய காரியங்களுக்கு உபயோகப் படுத்திக் கொள்வதாகும். இந்த ஜோசியம் முன் சொன்னது போல் பிறந்த காலத்தைக் கொண்டு சொல்வதோடு மற்றும் வேறு பல வழிகளிலும் அதாவது பேர் நாமத்தைக் கொண்டும் கேட்கப்பட்ட நேரம், கேட் பவரின் இருப்பு நிலை, கேட்ட சங்கதி, ஜோசி யனுக்கு எட்டும் நேரம், கேட்பவரின் தாய், தகப்பன், சகோதரன், பந்து முத லானவர்களின் பிறந்த கால ஜாதகம் முதலியவைகளைக் கொண்டும் பலன் சொல்வது உண்டு. இன்னும் இது போன்ற பல வகை அதாவது ஏதாவது ஒரு எண், ஒரு புஷ்பம், ஒரு எழுத்து ஆகியவை களைக் கேட்டல் ஒரு அங்கத்தைத் தொடுதல் முதலாகியவைகளின் மூலமும் பலன் சொல்லுவதுமுண்டு. ஆகவே  மேல்கண்ட எல்லாவற்றின் மூலம் பலன் சொல்ல முடியுமா? முடியாதா? என்பதைப் பற்றி யோசிப்பதில் முதலாவதாக ஜீவன் பிறந்த காலத்தை ஆதாரமாக வைத்து பலன் சொல்லக் கூடுமா? என்பதைப் பற்றி முதலில் ஆராய்வோம்.
பிறந்த காலம் என்பது வயிற்றுக்குள் இருக்கும்போது ஜீவன் (உயிர்) ஏற்பட்ட காலமா? அல்லது வயிற்றிலிருந்து 7, 8, 9, 10 மாதங்களில் எப்பொழுதானாலும் பிறக்கும் காலமா? அப்படி பிறக்கும் காலத்தில் தலை வெளியில் தெரியும் காலமா? அல்லது ஒரு நாள் அரைநாள் அக்குழந்தை கீழே விழாமல் கஷ்டப்படும் காலத்தில் தலை வெளியாகி நிலத்தில் பட்டுக் கால் நிலத்தில் விழாமல் தாய் சரீரத்தில் பட்டுக் கொண்டிருக்கும் காலமா? அல்லது கால் தலையெல்லாம் மருத்துவச்சிக் கையில் விழுந்த நேரமா? அல்லது மருத்துவச்சி கையிலிருந்து கீழே விழுந்த நேரமா? என்பனவாகிய கேள்விகள் ஒரு புறமிருக்க ஜீவனுடைய சரீரமெல்லாம் பூமியில் விழுந்த நேரம் என்பதாக வைத்துக் கொண்டே பார்ப்போமானாலும் அந்த நேரத்தைச் சரியாக எப்படி கண்டு பிடிக்க முடியும்? என்பதை யோசிப்போம். குழந்தை கீழே விழுந்ததும் அது உயிருடனிருக்கிறதா இல்லையா? ஆணா பெண்ணா என்பன போன்றவைகளைப் பார்க்க சிறிது நேர மாவது செல்லும். பிறகு அந்த சேதியைக் கொண்டு வந்து வெளியில் இருக்கும் ஆண்களிடம் சொல்ல சிறிது நேரமாவது செல்லும். அந்த சேதியைக் கேட்டவன் நேரத்தைக் குறிக்க அங்கேயே அவனுக் குக் கடிகாரம் வேண்டும். அந்தக் கடிகாரம் சரியான மணியா? என்பது தெரிய வேண் டும். கடிகாரமில்லாவிட்டால் வானத்தைப் பார்த்து நேரம் கண்டு பிடிப்பதாயிருந்தால் அதற்குப் பிடிக்கும் நேரம் முதலியவை அல்லது அக்கம் பக்கம் கடிகார நேரம், அதுவுமில்லாவிட்டால் உத்தேச சுமார் நேரம் ஆகியவைகளின் தாமதங்களும் பிசகுகளும் எப்படி நேராமல் இருக்க முடியும்? இவை ஒரு புறமிருக்க அந்த நேரத்தால் பலன் சொல்லுவதனால் அந்த நேரத்தில் உலகத்தில் பிறக்கும் ஜீவன்கள் எவ்வளவு இருக்கக்கூடும் மற்ற ஜீவன்களை எல்லாம் தள்ளிவிட்டு வெறும் மனித ஜீவனை மாத்திரம் எடுத்துக் கொண்டாலும் உலகத்தில் 170 கோடி மக்கள் இருக்கிறார்கள் என்ற கணக்குப்படி பார்ப்போமானால் சென்னை முதலிய பட்டணங்களில் சாதாரண அனுபவங்களின் படிக்கு உலகத்தில் நாள் ஒன்றுக்கு 2,26,666 (இரண்டு லட்சத்து இருபத்தாறாயிரத்து அறுநூற்று  அறுபத்தாறு) குழந்தைகள் பிறப்பதாக கணக்கு ஏற்படுகின்றது. (இந்தக் கணக் கானது அய்ந்து லட்சம் ஜனத்தொகை  உள்ள சென்னை நகரத்திற்கு தினம் ஒன்றுக்கு 70  (எழுபது) குழந்தைகள் பிறப் பதாகக் கணக்குப் போடப்பட்டிருக்கின்றது.) இதைத் தவிர கணக்குக்கு வராத விதவை களின் குழந்தைகள், கல்யாணம் ஆகாத பெண் களின் குழந்தைகள், புருஷன் சமீபத்தில்  இல்லாத ஸ்ரீகளின் குழந்தைகள் ஆகிய வைகளைச் சேர்த்தால் இன்னமும் இந்தக் கணக்குக்கு  அதிகமாகும். இது ஒரு புறமிருக்க மேல்படி சாதாரண கணக்குப் படிக்கு பார்த்தாலே ஒரு நாளைக்கு பிறக் கும் குழந்தைகளைப் பங்கிட்டு பார்த்தால் ஒரு நிமிஷத்திற்கு சுமார் 160 குழந்தைகள் வீதம் பிறக்கிறதாக கணக்கு ஏற்படுகிறது. இதில் 33 கோடி ஜனத்தொகை கொண்ட நமது இந்தியாவுக்கு மாத்திரம் கணக்குப் பார்த்தால் நிமிஷத்திற்கு 33 குழந்தை வீதம்  பிறக் கின்றதாக கணக்கு ஏற்படுகின்றது. ஆகவே இந்த 33 குழந்தைகளுக்குமாவது ஜாதகப் பலன் ஒத்து இருக்க முடியுமா? இவைகளுக் குச் சரியான நேரம் கண்டு பிடிக்க முடியுமா? என்பதை யோசிக்க வேண்டும்.
நிமிஷக் கணக்கே இப்படி நிமிஷத்துக்கு 33 குழந்தைகள் பிறப்ப தாயிருக்கும் போது ஒரு சோதிடம் சொல்லுவதற்குப் போது மான காலமாகிய ஒரு லக்கினம் நட்சத்திரம் ஆகியவைகளின் காலத்திற்குள் எத்தனை குழந்தைகள் பிறக்கக்கூடும்? என்பதைப் பார்த்தால் இது சிறிதும் பொருத்த மற்றதென் பதாகவே காணலாம். சாதாரணமாய் ஒரு ஜாதகம்  என்பது வருஷம், மாதம், தேதி, கிழமை, மணி (அல்லது நாழிகை) அந்த சம யத்தின் லக்கினம் நட்சத்திரம் ஆகியவை களைக் குறித்துள்ளதேயாகும். உதாரணமாக பிரமாதி வருஷம் புரட்டாசி மாதம் 2ந் தேதி புதன்கிழமை  காலை சுமார் 10  மணிக்கு விருச்சிக லக்கினத்தில் அஸ்த நட்சத்திரத்தில் ஒருவன் பிறந்தான் என்பதாக ஒரு துண்டுச் சீட்டில் எழுதி ஒரு ஜோசியனிடம் கொடுத்து விட்டால் இதன் பேரில் அந்த ஜோசியன் பலன் சொல்லி விடக் கூடும் என்பதே அநேகமான ஜோசியத்தின் லட்சணம். ஆகவே இந்த விருச்சிக லக்கினம் என்பது 5 1/4 நாழிகை உடையதாகும். இந்த அய்ந்தே கால் நாழி கைக்குள் அதாவது 126 நிமிஷ நேரத்திற்குள் உலகத்திலே 20,160 (இருபதாயிரத்து நூற்று அறுபது) குழந்தைகள் பிறந்திருக்க வேண்டும். இது ஒரு புறமிருக்க மேலும் இந்த லக் கினத்தில் நடப்பன, பறப்பன, ஊர்வன, நீந்துவன ஆகிய பூதக்கண்ணாடி பூச்சி முதல் யானை வரையில் உள்ள ஜீவன்களின் குழந்தைகள் பல நூறு கோடிக்கு மேல் பிறந்து இருக்க வேண்டும், இதுவுமொரு புறமிருக்க,
இந்தியாவில் மாத்திரம் அந்த விருச்சிக லக்கினத்தில் முன் சொல்லப்பட்ட கணக்குப் படிக்கு 4158 (நாலாயிரத்து நூற்று அய்ம்பத்தெட்டு) குழந்தைகள் பிறந்திருக்க வேண்டும். ஆகவே அன்றைய தினம் இந்த விருச்சிக லக்கினத்தில் பிறந்த காரணத் திற்காக  மேற்படி 4158 பேருக்கும் வாழ்க் கையில் ஒரே விதமான பலன் அனுபவ மிருக்க முடியுமா? அந்தப்படி  இருக்கின்றதா? என்பதை முதலில் யோசிக்க வேண்டும்.
தவிர இந்தப் பலன் அனுபவங்கள் மனிதனுக்குத் தானாக ஏற்படுவதா? அல்லது ரட்சிக்கிற கடவுள்களின் தன்மை யால் ஏற்படுவதா? அல்லது, முன் ஜென் மத்தில் செய்த கர்மத்தின் பலனாய் பலன் ஏற் படுவதா? அல்லது விதியின் பயனாய் பலன்கள் ஏற்படுவதா? என்பவைகளையும் யோசித்துப் பார்க்க வேண்டும். இந் நான்கிலும் மனிதனுக்குப் பலன் அவனது சொந்த இஷ்டத்தால் செய்கையால் தற் சம்பவமாய் ஏற்படுமானால் மேல்காட்டி யவைகளில் அதுதவிர மற்றவைகள் மூன்றும் அடிபட்டு போகும். கிரகங்களின் தன்மையினால் ஏற்படும் என்றால் இதைத் தவிர மற்ற மூன்றும் அடிபட்டு போகும். முன் ஜென்ம கருமத் தின்படி  என்றால் இது தவிர மற்ற மூன்றும் அடிபட்டு போகும். தலைவிதிப்படி என்றால் இதுதவிர மற்ற மூன்றும் அடிபட்டு போகும். ஆகவே மனிதனுடைய அனுபவ பலனுக்கு இவற் றுள் ஏதாவது ஒன்றுதான் காரணமாய் இருக்க முடியுமே தவிர  இன் நான்கும் சேர்ந்து குழப்பிக் கொண்டிருக்க முடியாது. இது ஒரு புறமிருக்க இந்த வியாசத்திற்கு  அவசியமான பிறந்த நேர லக்கினத்தால்  ஏற்பட்ட கிரகத் தன்மை  பலனைப் பற்றியே மேலும் ஆராய்வோம்.
உதாரணமாக இன்ன இன்ன கிரகம் இன்ன இன்ன வீட்டில் இருப்பதாலும் இன்ன இன்ன காலத்தில் இன்ன இன்ன கிரகங்கள் இன்ன இன்ன கிரகங்களைப் பார்ப்பதாலும் இந்த ஜாதகன் இன்ன இன்ன  காரியம் செய்து இத்தனை தடவை சிறைக்குப் போவான் என்பதாக ஒரு சரி யான பிறந்த காலத்தைக் கண்டு பிடிக்கப் பட்ட ஜாதகன் ஒருவனுக்குச் சரியான கெட்டிக்கார ஜோசியன் ஒருவன் பலன் சொல்லுகின்றான் என்பதாக வைத்துக் கொள்வோம். இவற்றுள் இந்த ஜாதகன் இன்ன வேளையில் இன்னாரைக் கொன்று  ஜெயிலுக்குப் போவான் என்று இருந்தால் அந்தக் கொல்லப்பட்டவனுடைய ஜாதகத் திலும் இன்ன வேளையில் இன்னாரால் கொல்லப்பட்டுச் சாவான் என்று இருந்தா லொழிய ஒருக் காலமும் பலன் சரியாய் இருக்கவே முடியாது என்பது  உறுதியான தாகும். இந்த இரண்டு ஜாதகர்களுடைய பலனும் இருவருக்கும் தெரிந்து விட்ட தாகவே வைத்துக் கொண்டாலும் இவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டாவது தப்பித்துக் கொள்ள முடியுமா? என்றால் ஒரு காலமும் முடியவே முடியாது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் தப்பித்துக் கொண் டால் ஜோதிடம் பொய்யாய் விடும், அன்றி யும் ஒரு சமயம் தப்பித்துக் கொள்வதாகவே வைத்துக் கொண்டால் அந்த இருவர்கள் ஜாதகத் திலும் இந்தச் சங்கதி தெரிந்து இருவரும் ஜாக்கிரதையாயிருப்பதின் மூலம் இரு வருக்கும் அந்த காலத்தில் அந்த சம்பவங் களால் கொலையோ சிறை வாசமோ கண்டிப்பாய் ஏற்படாது என்று தான் அந்த ஜாதகத்தின் முடிவு இருந்தாக வேண்டும். அப்படியிருக்குமானால் இந்த விஷயத்தை அவ்விருவரும் தெரிந்து ஜாக்கிரதை யாயிருந்தாலும் தெரியாமல் கவலையற்றே அஜாக்கிரதையாயிருந்தாலும் இருவருக் கும் கொலையும் சிறை வாசமும் கிடைக்க முடியவே முடியாது என்பதிலும் சந்தேக மில்லை. ஏனெனில் ஜாதகத்தில்  ஏற்க னவே இருக்கின்றபடி நடந்துதானே தீரும்.
இதற்குச் சாந்தி தோஷ பரிகாரம் என்பவைகள் செய்வதன் மூலமாவது ஏதாவது பலனை  மாற்றி விட முடியுமா? என்பதையும் யோசித்துப் பார்க்கலாம். அதாவது இன்ன கிரகம் இன்ன வீட்டில் இருப்பதால் இன்ன கெடுதியான பலன் ஏற்படும். ஆதலால் இன்ன தோஷ பரிகார சாந்தியும் இன்ன கிரக தேவதைக்கு  இத்தனை நாள் அர்ச்சனையும் செய்தால் நிவர்த்தியாகும் என்று ஜோசியன் சொல் வானானால் அல்லது ஜாதகத்தில் இருக்கு மானால் இந்த சாந்தியின் மூலமாகவோ அர்ச்சனையின் மூலமாகவோ அந்த கிர கங்களை அந்த காலத்தில் அந்த வீட்டை விட்டு மாற்ற முடியுமா? அல்லது அவைகள் மாறுமா? என்பதைக் கவனிக்க வேண்டும். அது மாத்திரமில்லாமல் இம் மாதிரி சாந்தியோ பரிகாரமோ செய்வதன் மூலம் தப்பித்துக் கொள்வான் என்றும் அதில் இருந்தாக வேண்டாமா? அப்படிக்கில்லாத பட்சம் எந்தவித சாந்தியாலும் தோஷம் பரிகாரமாக முடியாது. முடிந்தால் ஜோசியம் பொய் என்றே தீர்மானமாகி விடும்.
நிற்க, முடிவாக எந்த காரணத்தைக் கொண்டாவது ஜோசியம் நிஜம் என்றாகி விட்டால் எந்த மனிதன் மீதும் எந்தக் குற்றமும் சொல்வதற்கு இடமுண்டா?
ஜாதகப்பலன்படி நடவடிக்கைகள் நடந்தால் அதற்கு ஜாதகன் மீது குற்றம் சொல்லுவது மடமையும் யோக்கியப் பொறுப்பற்றத் தன்மையும் ஆகாதா? என்று கேட்கின்றோம். ஒரு மனிதனுக்கு இன்ன காலத்தில் திருடரால் பொருள் நஷ்டம் ஏற்படும் என்று இருந்தால் அதே நேரத்தில் மற்றொரு மனிதனுக்குத் திருட்டுத் தொழில்  பொருள் லாபம் கிடைக்கும் என்று ஜாதகப் பலன் இருந்துதான் ஆக வேண்டும். அது மாத்திரமல்லாமல் திருட்டு கொடுத்த வனுக்குப் பணம் கொடுத்து யார் யார் நஷ்ட மடைந்தார்களோ அவர்கள் ஜாதகத்திலும் இன்ன காலத்தில் இன்னாருக்குப் பணம் கொடுத்து அது திருட்டுப் போய் அதனால் நஷ்டமடைய வேண்டும் என்று இருந்தேயாக வேண்டும். அதுபோலவே திருடினவனி டமிருந்து பணம் வாங்கியவர்களுக்கும் இன்ன காலத்தில்  இன்னான் இன்னாரிடம் திருடுவதால் இன்ன இன்னா ருக்கு லாபம் வரும் என்று அவர்கள் ஜாதகப் பலனும் இருந்தாக வேண்டும். ஆகவே இந்தப்படி எல்லாம் ஜோசிய உண்மை இருந்துவிட்டால் பிறகு கடவுள் செயல் எங்கே? மோட்ச  நரகம் எங்கே? தலைவிதி எங்கே? முன் ஜென்ம வினைப் பயன் எங்கே? இவைகளுக்கு வேலை ஏது? என்பதைப்பற்றி யோசித்தால் இவை அவ்வளவும் பொய்யாகவே முடியும்.
இவைகளுக்கெல்லாம் நேரமும் இடமும் சம்பாதித்து மெய்ப்படுத்தக் குழப்பு வதாக வைத்துக் கொண்டாலும் கண்டிப்பாக  ஒரு மனிதனின் நடவடிக்கைகளுக்கு  அந்த மனிதனுடைய பொறுப்பையாவது அடி யோடு விட்டுத்தானாக வேண்டும். இனியும் இதைப்பற்றிய விபரங்கள் மற்றொரு சமயம் விரிப்போம்.

- குடிஅரசு - தலையங்கம் - 06.07.1930
-விடுதலை,21.6.15