(டாக்டர் ஆபிரகாம் கோவூர் எழுதிய ‘Begone Godmen’ என்ற நூலிலிருந்து இக்கட்டுரைப் பகுதியை தமிழாக்கித் தருபவர் செல்வமகள்)
1966ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவூர் தன் மனைவியுடன் திருச்சியில் ஒரு முக்கிய சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு சோதிடரின், பெயர்ப் பலகை அவரைக் கவர்ந்தது. வாதத்திற்கு இடம் தருகின்ற இயல்புக்குப் புறம்பான நிகழ்ச்சிகளை ஆராய்ந்து உண்மை தேடுவதில் கோவூர் அக்கறை கொண்டவர்.
எனவே அவர் சோதிடரிடம் சென்றார். அங்கே தாடி வளர்த்த முதியவர் ஒருவர் தரையில் சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தார். அவருடைய மார்பிலெல்லாம் திருநீற்று பூச்சு காணப்பட்டது. அவருடைய நெற்றி யில் நாமம் அவரை ஒரு வைணவர் என்று காட்டியது. அவருக்கு முன் னால் பழைய ஓலைச் சுவடிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அவருக்குப் பக்கத்தில் ஒரு கூண்டில் ஒரு பச்சைக்கிளி இருந்தது. 1,2,3... என்று எழுதப்பட்ட அட்டைகள் நூற்றுக்கணக்கில் அங்கே தரையில் சிதறிக் கிடந்தன.
சோதிடருடன் கோவூர் நீண்ட நேரம் உரையாடினார். சோதிடரின் தொழில் பற்றிய செய்திகள் பலவற் றைத் தெரிந்துகொண்டார். இந்தப் பழைய ஓலைச் சுவடிகள் அனைத்தும் என்னுடைய மூதாதையர் இடமிருந்து எனக்கு வழி வழி உடைமையாக கிடைத்தன. இந்த ஓலைகளுள் சிலவற்றின் ஓரங்களில் ஒடிந்திருக்கின்றன. இவை அனைத்தும் பழங்கால முனிவர்களால் எழுதப் பட்டனவாகும்.
இந்த உலகில் இதற்கு முன்பு பிறந்தவர்கள், இப்பொழுது வாழ்பவர்கள், இனிமேல் பிறக்கப் போகிறவர்கள் ஆகிய அனைவருடைய சோதிடக் குறிப்புகளும் இங்கே என்னிடம் உள்ளன.
இந்த அடுக்கிலுள்ள ஓலைகள் ஒன்றில் உங்களுடைய முந்திய பிறப்பு , இப்போதைய வாழ்வு. இனி வரப்போகும் பிறப்பு ஆகியவற்றைப் பற்றிய சோதிடக் குறிப்புகள் காணப்படலாம். உங்களுடைய பிறந்த நாளைக் கொண்டு அல்லது கிளியின் உதவி கொண்டு உங்களுடைய சோதிடக் குறிப்பைக் கண்டெடுக்கலாம் என்று சோதிடர் கோவூரிடம் கூறினார்.
சிறிது பணம் கொடுத்தால் உங்களுடைய சோதிடக் குறிப்பு உள்ள ஓலையை எடுத்துக் காட்டுகிறேன் என்று சோதிடர் கூறினார்.
கோவூர் ஒரு ரூபாய் கொடுத்தார். சோதிடர் திருப்தி அடையவில்லை. எனினும் எண்கள் எழுதப்பட்ட அட்டைகளின் ஊடே கிளியை திறந்து விட்டார். 37 என்ற எண் உள்ள அட்டையை கிளி தன் அலகில் எடுத்துக் கொண்டு வந்தது.
சோதிடர் அந்த அட்டையை தன் கையில் வாங்கினார். உடனே கிளிக்கு ஒரு நெல் தானியத்தைப் பரிசாகக் கொடுத்தார். (அல்லது) ஒவ்வொரு முறை அட்டை எடுக்கும்போதும் ஒவ்வொரு நெல் கிடைக்கும் என்று கிளிக்கு உண்டாக்கப்பட்டிருந்த நம்பிக் கையைக் கிளி இழந்துவிடாமல் இருக்கவேண்டும் என்பதற்காகக் கொடுத்தார் என்றும் நாம் சொல்லலாம்.
கிளியை மீண்டும் கூண்டில் அடைத் தார். அட்டையில் இருந்த 37 என்ற எண்ணை பார்த்தார். கோவூரின் சோதிடக் குறிப்பு அடங்கியிருந்த ஓலையை எடுத்தார். கோவூர் அந்த ஓலையை வாங்கிப் பார்த்தார். அது தமிழில் எழுதப்பட்டிருந்தது. கோவூ ருக்குத் தமிழ் வாசிக்கத் தெரியாது. சோதிடர் அதைப் படித்துக் காட்டி விளக்கம் சொல்ல தயாரானார்.
ஆனால் கோவூர் அந்த ஓலையை மீண்டும் பழையபடி ஓலை அடுக்குக்குள் வைத்து விடச் சொல்லி திருப்பித் தந்துவிட்டார். மீண்டும் கோவூர் ஒரு ரூபாய் கொடுத்தார். மறுபடியும் கிளியை திறந்து விடச் சொன்னார். சோதிடர் மீண்டும் திறந்துவிடத் துணியவில்லை.
தயக்கம் காட்டினார். ஆயினும் கோவூர் விடவில்லை. மீண்டும் மீண்டும் வற்புறுத்தி பலவாறு எடுத்துச் சொல்லியும் சோதிடரை இணங்க வைத்துவிட்டார். இந்த தடவை 109 என்ற எண் உள்ள அட்டையைக் கிளி எடுத்து வந்தது!
இப்படியாக திருச்சி சோதிடரின் ஓலை வாசிப்பு வேலை முடிவு பெற்றது!! (சோதிடம் உண்மையாக இருக்குமானால் எத்தனை தடவை எடுத்தாலும் கிளி ஒரே எண் உள்ள அட்டையையே எடுக்க வேண்டும். இங்கே இந்தக் கிளி ஒரே மனிதருக்கு இரண்டு தடவையிலும் வெவ்வேறு அட்டைகளை எடுத்து விட்டது.சோதிடர் பாடு பரிதாபத்திற்குரியதாகி விட்டது.) சோதிடர்கள் அனைவரும் ஏமாற்றுப் பேர்வழிகள் ஆவார்கள்.
இறந்து போனவர், வாழ்கின்றவர், இனி பிறக்க போகின்றவர் ஆகிய அனைவரின் சோதிடக் குறிப்புகளும் - பழங்கால முனிவர்களால் எழுதப்பட்டதாக சொல்லப்படும் சோதிடக் குறிப்புகள் அனைத்தும் - சப்த ரிஷி வாக்கியம் என்று சொல்லப்படுகிற ஓலைகள் அனைத்தும் தம்மிடம் இருப்பதாக சொல்கிறவர்கள் அனைவரும் மோசடியாளர்கள் ஆவார்கள்.
தந்தை பெரியார் பொன்மொழி
தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால் தமிழ் நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும், நாகரிகத்தையும் மறந்தான். தமிழன் தன்னை இந்து என்று கருதியதால் தனது மானத்தையும், ஞானத்தையும், பகுத்தறிவையும், உரிமையையும் இழந்தான்.
-விடுதலை,18.7.14