• Viduthalai
கேரள எல்லை நகரமான களியக்காவிளையில் வசிப்பவர் கிரிஸ்மா, இவருக்குத் திருமணம் செய்ய பெற்றோர் ஜாதகம் பார்த்தனர். அப்போது இவரது ஜாதகத்தின் படி திருமணம் செய்த உடனே கணவர் இறந்து விடுவார், இதனால் வாழா வெட்டியாக வாழவேண்டும் என்று அவரது ஜாதகத்தில் குறிப்பிட்டுள்ளதாக ஜோதிடர் கூறினார். மேலும் இரண்டாவது திருமணம் செய்தால் அந்தக் கணவருக்கு ஆயுள் கூடும் என்றும் ஜாதகத்தில் உள்ளதாகக் கூறியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு ராணுவ வீரர் ஒருவரைத் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்திருந்தனர்.
தனது திருமணம் ராணுவ வீரருடன் நடந்தால் அவர் ஜாதகப்படி செத்துப் போவார் என்று நினைத்த கிரிஸ்மா ஜாதகத் தில் குறிப்பிட்ட படி முதல் திருமணம் செய்து பிறகு ராணுவ வீரரைத் திருமணம் செய்ய முடிவு செய்தார். இதன் படி குமரி மாவட்ட எல்லையான பாறசாலை முறியன் கரை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன்ராஜ் (வயது 23). இவர் குமரிமாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ. 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இவரை தேர்ந்தெடுத்து காதலிப்பதாக கூறி அவரைப் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
சில நாள்களுக்குப் பின்பு கோவில் ஒன்றில் தனக்கு தாலிகட்டி தன்னை மனைவியாக ஏற்றுக் கொள் என்று கூறினார். இதனை அடுத்து அந்த இளைஞரும் கிரிஸ்மாவிற்குத் தாலிகட்டி குங்குமம் வைத்தார். தனக்குத் திருமணம் முடிந்துவிட்டது என்று நினைத்த அவர், தன் வீட்டிற்குச் சென்றுவருவதாக கூறினார். பின்னர் கடந்த 14ஆம் தேதி கிரிஸ்மா தனது கணவர் ஷாரோன்ராஜை குடும்ப நண்பர் ஒருவர் விருந்திற்கு அழைத்ததாகக் கூறி அழைத்துச் சென்றார்.
விருந்தின் போது அவருக்கு பழச்சாறு மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு கஷாயம் கொடுத் துள்ளார். பின்னர் மீண்டும் அவரை வீட்டிற்கு அனுப்பி விட்டார். இந்த நிலையில் வீட்டிற்கு வந்த அவர் கடுமையான வயிறு வலிப்பதாகக் கூறியதை அடுத்து அவரை பாறசாலை அரசு மருத்துவ மனையில் சேர்த்தார்கள்.
அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி ஷாரோன்ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி ஷாரோன்ராஜின் பெற்றோர் பாறசாலை காவல் துறையில் புகார் கொடுத்தனர். அதில் தனது மகன் ஷாரோன் ராஜை அவரது காதலி குடும்பத் தினர் திட்டமிட்டுக் கொன்று விட்டதாக கூறியிருந்தனர்.
மேலும் ஷாரோன்ராஜின் காதலிக்கு ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகவும், அவருக்குத் திருமணம் நடந்தால் முதல் கணவர் இறந்து விடுவார் என ஜாதகத்தில் கூறப்பட்டதால், தனது மகனை திட்டமிட்டுக் கொன்று விட்டு, கிரிஷ்மாவுக்கு ராணுவ வீரர் ஒருவரைத் திருமணம் செய்து கொடுக்க நிச்சயம் செய்து இருப்பதாகவும் புகாரில் கூறினர். இந்த புகார் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய இளம்பெண்ணையும், அவருக்கு உடைந்தையாக இருந்த குடும்பத்தினரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கொலை செய்யப் பயன்படுத்திய நஞ்சு எது என்பதையும், ஜோதிடர் குறித்த விவரத்தையும் விசாரணையில் வெளிப்படுத்தினர்.
அக்டோபர் முதல்வாரம் இந்தியாவையே குலுக்கிய கேரள நரபலி நிகழ்வு அதிர்வலையை ஏற்படுத்தியது. அதுவும் செல்வந்தராகவேண்டும் என்றால் ஜோதிடத்தின்படி பெண்களை பலி கொடுத்தால் பணக்காரர் ஆகலாம் என்று மூடநடம்பிக்கையில் விளைவாகத்தான் அந்த நரபலி. அதே போல் ஜாதகத்தை நம்பி கல்லூரி மாணவனை கொலை செய்துள்ளதும் தற்போது நிகழ்ந்துள்ளது.
இவ்வளவுக்குப் பிறகும் மத மூடநம்பிக்கை களுக்கும், வழிபாட்டுக்கும், ஜோதிடத்துக்கும் முட்டுக் கொடுக்கும் மூடர்களைஎது கொண்டு சாற்றுவது?
மனிதர்களே பகுத்தறிவைப் பயன்படுத்துவீர்! மனிதராவீர்!