பக்கங்கள்

செவ்வாய், 16 மே, 2017

ஆர்.எஸ்.எஸ். சார்பு அமைப்பின் அண்டப் புளுகு! சடங்குமூலம் சிறந்த குழந்தைகளை உருவாக்குகிறார்களாம்! கொல்கத்தா உயர்நீதிமன்றம் தடைகொல்கத்தா, மே 15 ‘கர்ப் சன்ஸ்கார் மேளா’ என்ற ஆர்.எஸ்.எஸ். சார்பு அமைப்பாக உள்ள ‘ஆரோக்ய பாரதி’ எனும் அமைப்பு மேற்கு வங்க மாநிலத்தில் நல்ல குழந்தைகளைப் பெற்றிடலாம் என்றும், அதற்கான பயிற்சி அளிக்கப்போகிறோம் என்றும் கூறி மக்களிடையே ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியது.

நல்ல குழந்தைகள் பிறக்க  பெற்றோர்களாக உள்ள எவரும் எதையும் செய்ய முன்வருவார்கள் என்கிற தன்மையை இந்துத்துவா வியாபாரத்தின் மூலதனமாக்கும் ஆர்.எஸ்.எஸ். அறிவியல் கருவி களைக் கொண்டும், முறையான மருத்துவர்களைக் கொண்டும் சிகிச்சை அளித்து, நோயின்றி வாழும் தடுப்பு முறைகளைக் கூறப்போகிறதோ என்று எவரும் தவறாக எண்ண வேண்டியதில்லை.

எப்போதும்போல், அதன் பிற்போக்குத்த னங்கள், அண்டப்புளுகு மூட்டைகளைக் கொண்டு, பழைமையான இந்து மத சடங்குகளின் பெயரால் சிறந்த குழந்தைகளை உருவாக்கிட பயிற்சி அளிக்கப்போகிறோம் என்று மூடநம்பிக்கை வியாபாரத்தைத் தொடங்கியுள்ளது. நீதிமன்றம் அதற்கு தடை விதித்ததுடன், கட்டிய பணத்தை உரியவர்களிடம் திருப்பி அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

ஆரோக்ய பாரதி அமைப்பின் சார்பில் இந்நிகழ்ச்சி குறித்த விளம்பரத்தில், முற்றிலும் பழைமையான இந்து சடங்குகளின்மூலமாக பார்ப்பதற்கு அழகான நல்ல குழந்தை, ஆண் குழந்தை, சாதிக்கும் குழந்தைகளைப் பெறலாம், குழந்தைகளை வடிவமைத்துக் கொடுக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் தொகுதி இடம்பெற்றுள்ள தெற்கு கொல்கத்தாவில் பவானிபூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மருத்துவப் பிரிவான ஆரோக்ய பாரதி ‘கர்ப் சன்ஸ்கார் மேளா’ எனும் பெயரிலான வேலைத்திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

அவ்வமைப்பு கருவில் உள்ள குழந்தைகள் குறித்ததகவல்களை,கருவிலுள்ளசிசுவின் தன்மைகள் குறித்து (இந்துமத சடங்குகளின் மூலமாக) வெளிப்படுத்துவதற்கு தம்பதிக்கு ரூ.500வீதம் கட்டணமும் வசூலித்துள்ளது.

மேற்கு வங்க மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் சார்பில் கொல்கத்தா உயர்நீதிமன் றத்தில் ஆர்.எஸ்.எஸ்-. ஆரோக்ய பாரதியின் ‘கர்ப் சன்ஸ்கார்’ திட்ட விழாவை எதிர்த்து  பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்துத்துவா அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கிளை அமைப்பான ஆரோக்ய பாரதி, ‘கர்ப் சன்ஸ்கார் மேளா’ என்கிற திட் டத்தை  செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. அதன்படி கருவில் சிசுவின் தன்மைகள்குறித்து கண்டறிந்து ‘சூப்பர் குழந்தைகளை’ உருவாக்குவ தற்காக, குழந்தைக்கான கருவை சுமக்கின்ற பெற்றோரிடமிருந்துகட்டணமாகரூ.500பெற்றுக் கொண்டு, கருவில் உள்ள சிசுகுறித்த ரகசிய தகவல்களை (இந்து மத சடங்குகள் மூலமாக)  ஆரோக்ய பாரதி எனும் அவ்வமைப்பு வெளி யிடும் என்று கூறுகிறது.

‘கர்ப் சன்ஸ்கார் மேளா’ செயல் திட்டம் என்கிற பெயரில் சொற்பொழிவாற்ற ஜாம்நகரில் உள்ள குஜராத் ஆயுர்வேத பல்கலைக்கழகத்தின் வருகைப்பேராசிரியர்டாக்டர்கரிஷ்மாநார்வின் என்பவர் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிற்குச் சென்றுள்ளார்.

‘கர்ப் சன்ஸ்கார் மேளா’ செயல் திட்டம் என்கிற பெயரில் கருவில் குழந்தைகளை உரு வாக்குவதன் மூலமாக  அறிவார்ந்த குழந்தைகளை உருவாக்க முடியும் என்று குஜராத் ஆயுர்வேத பல்கலைக்கழகத்தின் மற்றொரு பேராசிரியரான டாக்டர் ஹிதேஷ் ஜானி என்பவர் கூறுகிறார்.

ஆரோக்ய பாரதி அமைப்பின்சார்பில், கருவில் கண்காணிக்கும் சிசுக்களை (பழைமையான இந்து மத சடங்குகளின் வாயிலாக) ‘கர்ப் சன்ஸ்கார் மேளா’ என்கிற  திட்டத்தை அறிந்த கொல்கத்தா மருத்துவர்கள் அதிர்ச்சியை வெளிப் படுத்தியுள்ளார்கள்.

மேற்கு வங்க மாநில குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையம்

இத்திட்டத்தை அறிவியலுக்குப் புறம்பான பிற்போக்குத்தனமானது என்று குறிப்பிட்டு, அத்திட்டத்தை எதிர்த்து மேற்கு வங்க மாநில குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையம் கடந்த 5.5.2017 அன்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

மேற்கு வங்க மாநில முதல்வர் வீட்டைநோக்கி கல்வீச்சு

இந்து மதத்தில் உள்ள கற்பனைக் கதைகளைக் கொண்டு  வலிமையான நல்ல குழந்தையைப் பெறுவது  எப்படி என்பதை கற்பிப்பதுதான் ‘கர்ப் சன்ஸ்கார் மேளா’வின் நோக்கமாக உள்ளதாக ‘ஆரோக்ய பாரதி’ அமைப்பினர் கூறுகிறார்கள்.

ஆர்.எஸ்-.எஸ்-. கிளை அமைப்பாக உள்ள ‘ஆரோக்ய பாரதி’ அமைப்பின் செயல்திட்டத்தைத் தடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கூறிய தையடுத்து, அத்திட்டத்தை எதிர்த்து மேற்கு வங்க மாநில அரசின் குழந்தைகள் உரிமைகள் ஆணையம் வழக்கு தொடர்ந்ததால்,  மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் வீட்டைநோக்கி கல்வீச்சு நடைபெற்றுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தா நகரில்ஈகல் பாபன் பகுதியில் ஆர்.எஸ்.எஸ்-. ஆரோக்ய பாரதி அமைப்பின் ஊனத்தை ஒழிப்பது என்கிற திட்டத்தின்படி, தம்பதியருக்கு சிகிச்சை அளிக்கப்படக்கூடாது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மேலும், ஆரோக்ய பாரதியின் செயல் திட்ட விளக்கக் கூட்டத்தை நடத்த அனுமதித்து, அதைப்பதிவு செய்து, அக்காட்சிப்பதிவை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆரோக்ய பாரதி அமைப்பின் வழக்குரைஞர் பிரனாப் கோஷ் நீதிமன்ற உத்தரவை பின்பற்று வதாக கூறியுள்ளார். ஆரோக்ய பாரதியின் திட் டத்தில் 150 இணையர் சிகிச்சைக்கு பதிவு செய் துள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களைக் கொண்டு தம்பதியருக்கு சிகிச்சை அளிக்கப் படவில்லை என ‘கர்ப் சன்ஸ்கார்’ நிகழ்வை உயர்நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது.

மேற்கு வங்க மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் அனன்யா சக்ரபோர்த்தி கூறும்போது,

“இது (நீதிமன்றத்தின் கண்டனம்) குழந்தை களின் உரிமைகள் மற்றும் அறிவியலுக்கான வெற்றியாகும். அவர்கள் நடத்துகின்ற நிகழ்வானது குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதில் தம்பதியரை முற்றிலும் அறிவியலுக்கு மாறாகவும், பிற்போக் குத்தனமாகவும் வழிநடத்துவதாக உள்ளது..

இதுபோன்ற அறிவியலுக்குப் புறம்பான, பிற்போக்குத்தனமானபாகுபாடானதுகுழந் தைகள் உரிமைகளுக்கு எதிரானது மட்டுமல் லாமல், பிஎன்டிடி சட்டத்தின்படி சட்ட விரோத மானதுமாகும்’’ என்றார்.

இவ்வழக்கில் ஆரோக்யா பாரதி  அமைப்பின் வழக்குரைஞர் பிரோசி எடுல்ஜி  கூறும்போது,

‘‘குழந்தை பிறப்பில் பல்வேறு கலாச்சாரங் களுடன் பலவிதமான சடங்குகள் உள்ளன. அவற்றை பாதுகாத்திட வேண்டும். குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே ஏராளமான கலாச்சார சடங்குகள் பின்பற்றப்பட்டு வருகின்றன’’ என்றார்.

கட்டணத் தொகையை திருப்பியளிக்க உத்தரவு

இரண்டு நாள்கள் பயிற்சிக்காக 150 தம்பதி யரிடமிருந்தும் கட்டணமாகப் பெறப்பட்ட தலா ரூ.500 தொகையை மீண்டும் அவர்களிடமே ஒப்படைத்திட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேற்கு வங்க மாநில ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் ஜிஷ்ணு போஸ் கூறும்போது,

‘‘நீதிமன்ற உத்தரவுக்கு நாங்கள் மதிப்பளித்து, பேராசிரியர் நர்வானியின் சொற்பொழிவைப் பதிவு செய்து, அக்காட்சிப்பதிவை நீதிமன்றத்திடம் அளிப்போம்’’ என்றார்.

சமூக கட்டமைப்பை

சீர்குலைக்கும் ஆர்.எஸ்.எஸ்.

திரிணமுல் காங்.அமைச்சர்

பார்த்தா சட்டர்ஜி சாடல்

ஆர்.எஸ்.எஸ்-.சின் இதுபோன்ற செயல்பாடு களைக் கண்டித்துள்ள அனைத்திந்திய திரிணமுல் காங்கிரசு கட்சி நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்துக்கான நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி கூறும்போது, “நீதிமன்றத் தீர்ப்பை நாங்கள் வர வேற்கிறோம். மாநிலத்தில் சமூக கட்டமைப்பை சீர்குலைத்திட ஆர்.எஸ்.எஸ். முயன்று வருகிறது. அதனால்தான், கிடைக்கின்ற அனைத்து வாய்ப் புகளிலும் மத ரீதியிலான பிளவுகளை ஏற்படுத்தி, அறிவியலுக்கு புறம்பானவற்றை ஊக்கப்படுத்தி வருகிறது’’ என்றார்.

மத்தியில் ஆட்சிப்பொறுப்பில் இருப்பதோ ஆர்.எஸ்.எஸ்.சின்அரசியல்கட்சியாகஉள்ள பாஜக. நாடுமுழுவதற்கும் முறையாக செயல் படுத்தவேண்டிய திட்டங்களை செயல்படுத்த முனையாமல், பாஜக ஆட்சி அமைக்க முடியாத மாநிலங்களில் ஒன்றாக உள்ள மேற்கு வங்கத்தில் மட்டும் தேர்தலுக்காக அம்மாநில மக்களின் வாக்குகளை முன்னிறுத்தி, ‘கர்ப் சன்ஸ்கார்’ திட்டத்தை விளம்பர நோக்கத்துடன் மட்டுமல்லாமல், இந்துத்துவத்தை திணித்து மக்களைப் பிளவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு  ஆர்.எஸ்.எஸ்- கிளை அமைப்பாக, மருத்துவ அமைப்பாக உள்ள ‘ஆரோக்ய பாரதியை’ செயல்படுத்த முனைப்பு காட்டியுள்ளது.

சமூக ஊடகங்களில் நீதிமன்றத் தீர்ப்புக்கு வரவேற்பு

‘‘ஆரோக்யபாரதிஅமைப்பின்சார்பில் வார இறுதி நாள்களில் இரண்டுகூட்டங் கள்நடத்தப்பட்டுள்ளன.இதுவரை எந்த தம்பதி யரிடமும் சிகிச்சை மேற்கொள்ளப் படவில்லை. மேலும் பெற்றப் பணத்தைத் திருப்பி அளிக்கு மாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது மூடத்தனத்துக்கு எதிராக அறிவியலுக்குக் கிடைத்துள்ள வெற்றி’’ என்று மேற்கு வங்க மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் தலைவர் அனன்யா சட்டர்ஜி கூறுகிறார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானதும், மேற்கு வங்க மாநிலம் முழுவதும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மேற்கு வங்க மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் முயற்சியால் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி கிட்டியுள்ளது. வெட்ககரமான, மானக்கேடான, ஆணாதிக்க, பெண்ணின வெறுப்பு கொண்ட, அறிவியலுக்குப்புறம்பான செயலாக ‘ஆரோக்ய பாரதி’ அமைப்பின் கர்ப் சன்ஸ்கார் விழாவுக்கு எதிராக கொல்கத்தாவில் மேற்கு வங்க மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் முயற்சியால்  வெற்றி கிடைத்துள்ளது என்று நீதிமன்றத்தீர்ப்பை வரவேற்கும் பதிவுகள் பரவியவண்ணம் உள்ளன.
-விடுதலை,15.5.17

செவ்வாய், 9 மே, 2017

அதிர்ஷ்டக் கல் விற்றவருக்கு அபராதம் ! நீதிமன்றம் தீர்ப்பு

மன்னர்குடியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவர் தொலைக்காட்சி விளம்பரத்தைப் பார்த்து தனக்கு அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னையில் தியாகராய நகரில் உள்ள கே.பி.ஜீவல்லரியில் 13,600 ரூபாய்க்கு அதிர்ஷ்டக் கல் பொருத்திய ஒரு தங்க மோதிரம் வாங்கினார்.

ஆசை ஆசையாய் வாங்கி விலை உயர்ந்த கற்கள் பற்றி முழுமையாக அறிந்த வேறு சிலரிடம் அதிர்ஷ்டக் கல்லின் தரத்தைப் பரிசோதித்தார். அவருக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. அதிர்ச்சிதான் கிடைத்தது. ஆம்! அந்தக் கல் 300 ரூபாய் மதிப்புகூட இல்லாத சாதாரண கல். இதுபற்றி உடனே கே.பி.ஜீவல்லரியில் விபரம் கேட்டார். அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி அவரை வெளியே துரத்தி விட்டனர்.

அவர் வேறு வழியின்றி உடனே ஒரு சட்டப்பூர்வமான புகார் கடிதத்தை அனுப்பினார். இதற்கு நிறைய சமாதானங்-களைச் சொல்லி ஒரு பதில் கடிதத்தை அந்த நகைக்கடை அனுப்பியது.

பலமுறை முயற்சித்தும் பலன் இல்லாமல் போகவே தனக்கு ஏற்பட்ட பண நஷ்டம், வீண் அலைச்சல், அவமானம் இவைகளின் அடிப்படையில் நுகர்வோர் நீதிமன்றத்தில் நஷ்ட ஈடாக 1 இலட்சம் ரூபாய் கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு கே.பி.ஜீவல்லரியின் வாதம்

வழக்குப் பதிவு செய்துள்ள குணசேகரன் தங்கள் கடைக்கு வந்து அதிர்ஷ்டக் கல் பதிந்த தங்க மோதிரத்தை எல்லா வகையிலும் பரிசோதித்து விட்டு திருப்தி அடைந்த பிறகே வாங்கி உள்ளார். அவர் முழுத் திருப்தியுடன் வாங்கியதாக தங்களின் நிறுவனத்தின் (சிணீsலீ ஙிவீறீறீ) எல்லாவித நிபந்தனைகளுக்கும் ஒத்துக் கொண்டு கையெழுத்திட்டுள்ளார்.

25.7.2005 அன்று வாங்கிய புகார்தாரர் 3 மாதம் அதை உபயோகப்படுத்திவிட்டு 25.10.2005 அன்று மோதிரத்தை திருப்பிக் கொடுப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை. மேலும் தாங்கள் விற்ற ராசிக்கல் நல்ல தரமானதுதான்

என்று வாதாடினார்.

இரு தரப்பினர் வாதங்களையும் கேட்ட நீதிஅரசர் ஒரு அற்புதமான தீர்ப்பை அளித்திட்டார்.

அதாவது கே.பி.ஜீவல்லரி புகார்தாரர் முத்துகிருஷ்ணன் தங்களிடம் அதிர்ஷ்டக் கல் மோதிரம் வாங்கியதற்கு ஆதாரமாக தங்களின் கணக்குப் புத்தக ரசீதை சமர்பித்து இருக்கிறார்கள். 3 மாத கால தாமதத்திற்குப் பிறகே அதிர்ஷ்டக் கல் மோதிரம் பற்றிய புகார் மனு கொடுத்துள்ளார் என்பதையும், ஆதாரப்பூர்வமாக நிரூபித்து இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் சட்டப்படி கொடுக்க வேண்டிய முக்கியமான ஆதாரத்தைத் தரவில்லை. ஆம், அவர்கள் விற்ற அதிர்ஷ்டக் கல் தரமானதுதான் என்பதைப் பற்றி ஒரு சிறிய ஆதாரத்தைக்கூட சமர்ப்பிக்கவில்லை.

எனவே, மனுதாரரின் நியாயமான கோரிக்கையை ஏற்றுமன உளைச்சல், தேவை-யில்லாத அலைச்சல் கொடுத்த கே.பி.ஜீவல்லரி 10,000 ரூபாயை முத்துகிருஷ்ணனுக்கு நஷ்டஈடாக கொடுத்திட வேண்டும். மேலும் வழக்கு சம்பந்தமான செலவுக்கு 5000 ரூபாய் தொகையை மனுதாரருக்கு கொடுத்திட வேண்டும் என அதிரடியான, அற்புதமான தீர்ப்பை நுகர்வோர் நீதிமன்றம் அளித்தது.

இது நிச்சயம் பாதிக்கப்பட்ட திரு.முத்துக்கிருஷ்ணனுக்கு மட்டும் கிடைத்த வெற்றியல்ல. நம் எல்லோருக்கும் கிடைத்த மகத்தான வெற்றி. பொதுமக்களின் துயரங்களைப் பயன்படுத்தி அநியாயமாக ஏமாற்றி ஏப்பம் விடும் சதிகாரர்களுக்கு சரியான சம்மட்டியடி இத்தீர்ப்பு. 
-உண்மை இதழ்,16-30.4.17

மந்திரம் என்பது மாபெரும் மோசடி! 


மந்திரம் என்றால் என்ன?

குறிப்பிட்ட சில சொற்களைச் சொன்னால் அதற்குச் சக்தியுண்டு. அது குறிப்பிட்ட சிலவற்றைச் சாதிக்கும் என்பதே மந்திரம் என்று சொல்லப்படுகிறது; நம்பப்படுகிறது.

வார்த்தைகளுக்குச் சக்தியுண்டா?

மொழியென்பதே மிகப் பிற்காலத்தில் மனிதனால் உருவாக்கப்பட்டது. அதற்கு முன் சொற்களும் இல்லை; மொழியும் இல்லை. தான் நினைக்கும் கருத்தைப் பிறருக்குச் சொல்லும் கருவியே வார்த்தைகள் _ அவற்றின் தொகுப்பே மொழி. அப்படியிருக்க அதற்கு எப்படி சக்தி வரும்; அது எப்படி ஒன்றைச் சாதிக்கும்?

நஞ்சு போக்கும் மந்திரம்?

பாம்பு கடித்தால் அல்லது தேள் கொட்டினால் உடலில் நஞ்சு ஏறிவிடும். அதை மந்திரத்தால் இறக்குகிறேன் என்று சிலர் ஏமாற்றுவர். எந்த மந்திரத்தாலும் உடலில் ஏறிய நஞ்சை இறக்க _ அகற்ற முடியாது. முறிவு மருந்தால் மட்டுமே நஞ்சை முறிக்க முடியும். பாம்பு கடித்து நஞ்சு ஏறாமல் மயங்கிக் கிடப்பவனை வேண்டுமானால் மந்திரத்தால் பிழைக்க வைத்தேன் என்று ஏமாற்றலாம். உண்மையில் நஞ்சு ஏறியவனை மந்திரத்தால் காப்பாற்ற இயலாது.

தாயத்து, முடிக்கயிறு:

அதேபோல் செப்புத் தகட்டிலே மந்திரத்தை ஏற்றிவிட்டேன்; முடிக் கயிற்றிலே மந்திரத்தை ஏற்றிவிட்டேன். அதைக் கட்டிக் கொண்டால் நோய் நீங்கும், பேய், பிசாசு அண்டாது, காரியம் வெற்றியாகும் என்று கூறி அவற்றை விற்பனை செய்து சம்பாதிக்கின்றனர்.

வார்த்தைக்கே சக்தியில்லை யென்னும்போது அதைச் செப்புத் தகட்டிலும், முடிக் கயிற்றிலும் ஏற்றியுள்ளேன் என்பது ஏமாற்று வேலையல்லவா? பித்தலாட்டம் அல்லவா?

மந்திரம் ஜெபித்தல்:

அமாவாசையில் பூசை, சுடுகாட்டில் பூசை, பிணத்தின் மீது அமர்ந்து மந்திரம் ஜெபித்தல் என்று கூறி பல பித்தலாட்டங்களைச் செய்கின்றனர். தலைப்பிள்ளை தலையில் மை இருப்பதாய் ஓர் அபாண்டப் புளுகு! எந்தத் தலையிலும் எந்த மையும் கிடையாது. மண்டையுள் மூளை மட்டுமேயுள்ளது.

மந்திர சக்தி?

மந்திரத்தால் மணலைச் சர்க்கரைக்குவேன்! எரித்த ரூபாயை மீண்டும் தருவேன் போன்ற அனைத்தும் பொய்யே! மந்திரத்தால் மணலைச் சர்க்கரையாக்க முடியும் என்றால் சர்க்கரை ஆலைகள் எதற்கு? கரும்பு விவசாயம் எதற்கு? ஒரு மந்திரவாதியை ஆற்றுமணலில் விட்டு, மணலைச் சர்க்கரையாக்கி லாரி லாரியாக வாரிக் கொள்ளலாமே! மந்திரவாதியே சர்க்கரையைக் காசு கொடுத்துத்தானே வாங்குகிறான். சிந்திக்க வேண்டாமா?

எரிந்தவற்றை மந்திரத்தால் மீண்டும் பெறலாம் என்றால் எரிந்த அனைத்தையும் திரும்பப் பெற்று விடலாமே!

இப்படிச் சிந்திக்காததால்தான் மந்திரவாதிகள் மக்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்.

பெரம்பலூரில் பித்தலாட்ட மந்திரவாதி:

அண்மையில் ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டவன் கார்த்திகேயன் என்கிற ராஜாராகவன், வாலிப வயதிலேயே ஏமாற்றுவதைத் தொடங்கிவிட்டான்.

மண்டையோடுகள், பிணங்களை வைத்து, மக்களை அச்சுறுத்தி, ஏமாற்றி ஆயிரக்கணக்கில் சம்பாதித்துள்ளான்.

தன்னிடம் மந்திரசக்தி பெறவந்த நசீமா என்ற பெண்ணை மயக்கி மனைவியாக்கிக் கொண்டான். தன் சுரண்டலுக்கு அரசியல் வாதிகளை துணைக்கு வைத்துக்கொண்டான்.பிணத்தின் மீதமர்ந்து மந்திரம் ஜெபித்தல்:

இளம்பெண்ணின் பிணத்தின் மீது அமர்ந்து மந்திரம் ஜெபித்தால், மிகப் பெரிய சக்தி கிடைக்கும், பயன் கிடைக்கும் என்று மக்களை ஏமாற்றி ஆயிரக்கணக்கில் பணம் பறித்துள்ளான்.

மயிலாப்பூர் இடுகாட்டில் புதைக்கப்பட்ட இளம்பெண் உடலைப் பணம் கொடுத்து, தோண்டி எடுக்கச் செய்து, அதை வைத்து மந்திரம் ஜெபித்துள்ளனான்.

இவனுக்கு அரசியல் கட்சிப் பிரமுகர்கள்,  தமிழ் சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாது வடமாநில நடிகைகள் சிலரும் நட்பு ஆகியிருக்கிறார்கள். மேலும் புதுச்சேரி அமைச்சர்கள் மற்றும் அண்டை மாநில அரசியல் பிரமுகர்களோடும் தொடர்பில் இருந்திருக்கிறான். அதற்கு ஆதாரமாக ஒருசில சி.டி.க்கள் சிக்கியிருக்கின்றன. இதுதவிர, ஒருசில நிர்வாண பூஜைகளையும் நடத்தியிருக்கிறான். அது சம்பந்தமான சி.டி.க்களும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

2005 காலகட்டத்தில் 100 ரூபாய் பணமில்லாமல் அலைந்த இவன், சொந்த செல்போன்கூட இல்லாமல், தன்னுடைய நண்பனின் போன் நம்பரைத்தான் பயன்படுத்தியிருக்கிறான். ஆனால், இப்போது, கிட்டத்தட்ட 20-_க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த செல்போன்கள், கார், பல லட்சம் கையிருப்பு என பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருக்கிறான்.

சென்னையில் இருந்து இளம்பெண்ணின் உடலைக் கொண்டு வந்த வினோத்குமார், சைக்காலஜி படித்தவன். ஆவிகளோடு பேசுற ஆர்வத்துல கார்த்திகேயனை குருவா ஏத்துக்கிட்டு, அவன் சொல்றதை செஞ்சிருக்கான். சென்னையிலிந்து கார் மூலம் பிணத்தை பெரம்பலூர் கொண்டு வந்தது ஏன் என்று அவனிடம் நடத்திய விசாரணையின் போது இதே மாவட்டத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சி பிரமுகருக்கு எம்.எல்.ஏ. சீட் கிடைக்க ஏற்கனவே பூஜை நடத்தியதாகவும் அதன்படி எம்.எல்.ஏ. சீட் கிடைத்து வெற்றி பெற்றதாகவும் தற்போது அவர் அமைச்சராவதற்குத்தான் இந்தப் பிணத்தை வைத்து சிறப்புப் பூஜை செய்யத் திட்டமிட்டதாகவும் உண்மையை விளக்கினான்.

-உண்மை இதழ்,1-15.4.17

ஏழு புதிய கிரகங்களும் வக்கிரங்களும்!

நாசா’ விஞ்ஞானிகள் புதிதாக ஏழு கிரங்கங்களைக் கண்டுபிடித்துள்ளனர் என்பது இந்த ஆண்டின் வியக்கத்தகுந்த செய்தியாகும்!

அஷ்டகிரகங்கள், நவக்கிரகங்கள் என்று கூறி மூடநம்பிக்கைச் சேற்றில் புதைந்து திக்குமுக்காடும் திசையறியாத மனிதர்கள் _ பக்தி வியாபாரிகள், ஜோதிடக் கிறுக்கர்கள் இனி என்ன செய்யப் போகிறார்கள்?

புதிதாக இனி பழைய பஞ்சாங்கத்தை வீசி எறிந்துவிட்டுப் புதிய “வியாபாரத்தை’’ “கம்ப்பூட்டர் ஜோசியம்’’ என்று துவக்கி வியாபாரம் செய்வதுபோல் புதிய பெயர் ஒன்றைக் கொடுத்து மூடத்தனத்தை மூலதனமாக்கிப் பிழைக்கப் போகிறார்களா?

மதத்திற்கு நேர் எதிர்முரணான அறிவியலையே தங்கள் வசதிக்கு ஏற்ப திருப்பிக் கொண்ட, “வித்தைக்காரர்கள்’’ அல்லவா இவர்கள்? அவர்களுக்கா சொல்லிக்கொடுக்க வேண்டும்?

நிலவுக்குச் சுற்றுலா அழைத்துப் போக ஆட்தேர்வு நடைபெற்று வரும் செய்தியும் மறுபுறம் வந்து மனித குலத்தைத் திகைக்க வைக்கிறது! இத்தகைய அறிவு வளர்ச்சியான காலகட்டத்தில், நம் நாட்டில் பில்லி, சூன்யம், ஜோதிடம். அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட வாஸ்து சாஸ்திரம், கேரள ஜோதிடர்கள் இத்தியாதி தகவல்களுக்கும் பஞ்சமே இல்லை.

இந்திய அரசியல் சட்டத்தில் (Article 51A), அறிவியல் மனப்பாங்கு, ஏன், எதற்கென்று கேள்வி கேட்டல், மனிதநேயம், சீர்திருத்தச் சிந்தனை வளர்ப்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமை என்று வற்புறுத்தப்பட்டும், அதுபற்றி ஆட்சியாளரும், நீதிமன்றங்களும், சட்ட, நாடாளு மன்றங்களும், கவனத்தில் கொண்டு தடுக்க முன்வருவதே இல்லை!

பற்பல துறைகளில் சட்டத்தை அமல்படுத்த வேண்டிய நேரங்களில், அவைகளே சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தக் காரணிகளாக கைகட்டி, வாய்ப்பொத்தி நிற்கும் அவல நிலை!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பார்க்காத ஜோசியமா? நாள் நட்சத்திரச் சடங்கில் வேண்டாத கோயில் உண்டா? அவர்களின் அமைச்சர்கள் உட்பட போடாத மொட்டை உண்டா? செய்யாத (அதுவும் அப்போலோ ஆஸ்பத்திரி வாயிலில்) யாகம் உண்டா? தூக்காத பால் குடங்கள் உண்டா? தின்னாத மண் சோறு உண்டா? மஞ்சள் புடவை கட்டி உருளாத தரை உண்டா?

இவ்வளவும் பயன் தந்தனவா? அவர் மரணத்திற்குப் பின்னும் அலங்கோலம் தொடர்கிறதே!

எம்.ஜி.ஆர். உடல்நிலைக் குறைவு ஏற்பட்டவுடன், பிரார்த்தனை மோசடி என்று பேசியது உரையாக பல பதிப்புகள் வந்ததே.

மறைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நலம்பெற்று மீண்டு, நீண்ட காலம் வாழவேண்டும் என்ற நல்லெண்ணமும் விருப்பமும் மற்ற ஆதரவாளர்களைப் போல, நமக்கும் மனிதாபிமான அடிப்படையில் உண்டு.

அதற்காக மருத்துவர்களையும் அதுவும் வெளிநாட்டிலிருந்து தனி சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் டாக்டரையும் வரவழைத்து விட்டு, அப்போலோ மருத்துவமனை முன் யாகம் என்றால் உலகத்தார் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?

வெட்கம் பிடுங்கித் தின்கிறதே! இன்னொரு பக்கத்தில் புதிய புதிய கார்ப்பரேட் சாமியார்கள் “பாபாக்கள்’’ யோகி போன்றவர்களின் பலத்த மோசடி, ஊரார் நிலத்தை வெல்லம்போல் விழுங்குவதைச் சட்டமும் மத்திய அரசும் வேடிக்கைப் பார்க்கும், வேதனைப் பொங்கும் நிலை.
பாபா ராம்தேவ்களும், ரவிசங்கர் என்ற பார்ப்பனரும், நடிகர் திலகத்தை மிஞ்சும்  ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ அறிவுரை கூறும் ஒப்பனை ஆதியோகி ஈஷா ஜக்கி போன்ற சாமியார்களை ஊக்கப்படுத்தும் பிரதமர் மோடிகளின் ராஜ்ய பரிபாலனம் இங்கே.

உச்சநீதிமன்ற அபராதம், உயர்நீதிமன்ற வழக்கு என்பதைப் பற்றிப் பொருட்படுத்தாமல்  ‘உலகமே சிவன் வசம்’ என்று கூறும் பச்சை ஹிந்துமதப் பிரச்சாரம்.

இதற்குப் பெயர் மதச்சார்பற்ற, சோஷலிச, முழு இறையாண்மை பெற்ற குடியரசு ஆட்சியாம்!
என்னே விசித்திரம்? என்று கலையும் இந்த இரட்டை வேடம்?

    கி.வீரமணி,
ஆசிரியர் ‘உண்மை’16-31.3.17