பக்கங்கள்

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

வாஸ்து ஒரு மோசடி! வாழ்க்கை அனுபவங்களோடு ஓர் அலசல்

- பொறியாளர் ஜே.என்.தாமோரன்
பயத்தின் காரணமாகத்தான் மக்கள், வாஸ்த்துவைப் பார்க்கிறார்கள். என் முப்பத்தைந்து வருட அனுபவத்தில், இளைய வயதினர்கள்தான் வாஸ்த்துவைப் பற்றி அதிகம் பயப்படுகிறார்கள். இவர்கள் வீடுகட்டும் போதும், வியாபார இடம் மற்றும் தொழிற்சாலைகள் கட்டும்போதும், வாஸ்த்துவிற்கு, தேவையில்லாமல் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

கீழ்க்கண்ட உதாரணங்களைப் படித்தால், வாஸ்த்துவைப் பற்றிய மக்களின் தேவையற்ற பயம் விலகும்! உண்மை புரியும்.
எடுத்துக்காட்டு -1:
ஷான்தி நகர் காலனி, அய்தராபாத் நகரத்தில், 1960 முதல் 1965 வரையான காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. அந்த சமயத்தில், வீடுகட்டியவர்கள் யாரும், வாஸ்த்துவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதிகமான வீடுகள் வாஸ்த்துவுக்கு எதிர்விதமாகவே கட்டப்பட்டன. லக்ஷ்மண ராவ் என்னும் நண்பர் 1975ஆம் ஆண்டு, எங்கள் வீட்டிற்கு, எதிர்வீட்டை விலைக்கு வாங்கினார். அவர் அந்த வீட்டில், வாஸ்த்து பண்டிதர் சொன்ன அறிவுரைப்படி, மாற்றங்கள் செய்தார். வடகிழக்கு மூலையிலிருந்த கார் ஷெட்டை, இடித்துவிட்டு அங்கு கேட்டை வைத்தார். மற்றும், குடிதண்ணீரை தேக்குவதற்கு நிலஅடியில் ஒரு தொட்டி கட்டினார். தென்கிழக்கு மூலையில், அடுப்பறையைக் கட்டினார்.
அவர் 1982ஆம் ஆண்டு இரத்தப் புற்று நோயால், அவதியுற்று இறந்துவிட்டார். அப்போது என் மாமியார், என்ன சொன்னாரென்றால், வாஸ்த்துவைப் பார்க்காமல் வீட்டைக் கட்டிய பக்தவச்சலு நாயுடு, சென்னையில் வசிக்கிறார். அவருக்கு சுமார் 85 வயதிருக்கும். அவர் கட்டிய வீட்டை வாங்கி, வாஸ்த்துவைப் பார்த்து, மாற்றங்கள் செய்த லஷ்மணராவ், தன் அய்ம்பதாவது வயதிலேயே இறந்துவிட்டார். வாஸ்த்துவைப் பார்த்ததன் பயனென்ன என்று கேட்டார்?
எடுத்துக்காட்டு -2:
1980ஆம் வருடம், நான் வேறொருவர் தொடங்கி, நடத்த முடியாமல்போன ஒரு கம்பெனியை எடுத்து நடத்த முடிவு செய்தேன். 1982ஆம் ஆண்டும், 1984ஆம் ஆண்டும், எங்கள் வீட்டில், இரு தற்கொலைகள் நடந்தன. முதல் தற்கொலை, எங்கள் சமையல்காரனுடையது. அடுத்தது, ஒரு வெளிநாட்டுக்காரருடையது. இரண்டாவது தற்கொலை நடந்ததும், நண்பர்கள் சொன்னார்கள். எங்கள் வீட்டு வாஸ்த்து சரியில்லையென்று. அதன் காரணமாகத்தான் இந்தத் தற்கொலைகள் நடந்தனவென்று நண்பர்களில் ஒருவர், வாஸ்த்து பண்டிதர் ஒருவரை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தார். அந்த பண்டிதர் நாங்கள் வீட்டில் செய்ய வேண்டிய மாற்றங்களைப் பற்றி சொன்னார். நாங்கள் இதைப்பற்றி, எங்கள் மாமியாரிடம் சொன்னோம். ஏனெனில், நாங்கள் வாழ்ந்து வந்த வீட்டைக் கட்டியவர், எங்கள் மாமனார். வாஸ்த்து பண்டிதர் சொன்ன அறிவுரையைக் கேட்ட பிறகுதான் என் மாமியார், லஷ்மணராவ் விஷயத்தில் வாஸ்த்து பண்டிதர் அறிவுரை எப்படி வேலை செய்யவில்லையென்பதை நினைவுபடுத்தினார்.
அவர் அப்படி சொல்லியும், நான் எடுத்துக்கொண்ட தொழில் நடக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வாஸ்த்து பண்டிதர் சொன்ன மாற்றங்களைச் செய்தோம்.
வடகிழக்கு மூலையிலிருந்த, கார் ஷெட்டையும், அதற்கு மேலிருந்த ஒரு அறையையும் இடித்து தரைமட்டமாக்கினோம். அதே மூலையில் குடி தண்ணீரைத் தேக்கி வைப்பதற்கு ஒரு தொட்டியைக் கட்டினோம். தென்மேற்கு மூலையிலிருந்த கதவை மூடிவிட்டு, அங்கிருந்த தண்ணீர்த் தொட்டியையும் மூடிவிட்டோம்.
மேற்சொன்ன மாற்றங்களைச் செய்த பிறகும், எங்கள் தொழிலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நான் யோசித்துப் பார்த்ததில் எனக்குப் புரிந்த உண்மை, ஒரு தொழிலை ஆரம்பிக்குமுன், நாம் செய்ய வேண்டிய வீட்டு வேலைகள் நிறைய இருக்கின்றன. யாரோ ஒருவர் சொல்கிறார் எனறு நம்பி, எந்த புது தொழிலிலும் இறங்கக் கூடாது. நமக்கு நடக்கும் நஷ்டத்திற்கும், வாஸ்த்துவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்பது உண்மை.
எடுத்துக்காட்டு -3:
என் சொந்த ஊர் அரக்கோணம். அங்கே என் அண்ணன், எங்கள் அனைவர் சார்பிலும், ஒரு கல்யாண மண்டபத்தைக் கட்டினார். அவர் அதைக் கட்டியது, 1986ஆம் வருடம், அவர் வாஸ்த்துவைப் பற்றிக் கவலைப்படவில்லை. கட்டிமுடித்த பிறகு, அந்த மண்டபம், நூறு சதவீதம், வாஸ்த்துக்கு எதிர்மறையாகத்தான் இருக்கிறது. ஆனால், எங்களுக்கிருக்கும் பொதுச் சொத்துக்களில், கல்யாண மண்டபம்தான், அதிக வருமானம் தருகிறது.
வாஸ்த்து பிரகாரம், கிழக்குப் பக்கம், மேற்குப் பக்கத்தைவிட அதிக வெற்றிடம் ஒதுக்க வேண்டும். ஆனால், இப்போது இருப்பது, மேற்குப் பக்கம், அதிக வெற்றிடம் இருக்கிறது. வடக்குப் பக்கம், தெற்குப் பக்கத்தைக் காட்டிலும் அதிக வெற்றிடம் இருக்க வேண்டும். அது அப்படியில்லை. வடகிழக்கு மூலையில் அடுப்பைக் கட்டியிருக்கிறார்கள். ஆனால், அது தென்கிழக்கு மூலையிலிருக்க வேண்டும். இத்தனை வாஸ்த்து தவறுகள் செய்திருந்தும், அந்த கல்யாண மண்டபம் லாபகரமாக நடக்கிறது.
மேற்சொன்ன காரணங்களால், நான் வாஸ்த்து பார்ப்பது, தேவையற்றது என வரையறுத்துக் கூறுகிறேன். ஸீ
-உண்மை,1-16.4.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக