பக்கங்கள்

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

வாஸ்து ஒரு மோசடி! வாழ்க்கை அனுபவங்களோடு ஓர் அலசல்

- பொறியாளர் ஜே.என்.தாமோரன்
பயத்தின் காரணமாகத்தான் மக்கள், வாஸ்த்துவைப் பார்க்கிறார்கள். என் முப்பத்தைந்து வருட அனுபவத்தில், இளைய வயதினர்கள்தான் வாஸ்த்துவைப் பற்றி அதிகம் பயப்படுகிறார்கள். இவர்கள் வீடுகட்டும் போதும், வியாபார இடம் மற்றும் தொழிற்சாலைகள் கட்டும்போதும், வாஸ்த்துவிற்கு, தேவையில்லாமல் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

கீழ்க்கண்ட உதாரணங்களைப் படித்தால், வாஸ்த்துவைப் பற்றிய மக்களின் தேவையற்ற பயம் விலகும்! உண்மை புரியும்.
எடுத்துக்காட்டு -1:
ஷான்தி நகர் காலனி, அய்தராபாத் நகரத்தில், 1960 முதல் 1965 வரையான காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. அந்த சமயத்தில், வீடுகட்டியவர்கள் யாரும், வாஸ்த்துவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதிகமான வீடுகள் வாஸ்த்துவுக்கு எதிர்விதமாகவே கட்டப்பட்டன. லக்ஷ்மண ராவ் என்னும் நண்பர் 1975ஆம் ஆண்டு, எங்கள் வீட்டிற்கு, எதிர்வீட்டை விலைக்கு வாங்கினார். அவர் அந்த வீட்டில், வாஸ்த்து பண்டிதர் சொன்ன அறிவுரைப்படி, மாற்றங்கள் செய்தார். வடகிழக்கு மூலையிலிருந்த கார் ஷெட்டை, இடித்துவிட்டு அங்கு கேட்டை வைத்தார். மற்றும், குடிதண்ணீரை தேக்குவதற்கு நிலஅடியில் ஒரு தொட்டி கட்டினார். தென்கிழக்கு மூலையில், அடுப்பறையைக் கட்டினார்.
அவர் 1982ஆம் ஆண்டு இரத்தப் புற்று நோயால், அவதியுற்று இறந்துவிட்டார். அப்போது என் மாமியார், என்ன சொன்னாரென்றால், வாஸ்த்துவைப் பார்க்காமல் வீட்டைக் கட்டிய பக்தவச்சலு நாயுடு, சென்னையில் வசிக்கிறார். அவருக்கு சுமார் 85 வயதிருக்கும். அவர் கட்டிய வீட்டை வாங்கி, வாஸ்த்துவைப் பார்த்து, மாற்றங்கள் செய்த லஷ்மணராவ், தன் அய்ம்பதாவது வயதிலேயே இறந்துவிட்டார். வாஸ்த்துவைப் பார்த்ததன் பயனென்ன என்று கேட்டார்?
எடுத்துக்காட்டு -2:
1980ஆம் வருடம், நான் வேறொருவர் தொடங்கி, நடத்த முடியாமல்போன ஒரு கம்பெனியை எடுத்து நடத்த முடிவு செய்தேன். 1982ஆம் ஆண்டும், 1984ஆம் ஆண்டும், எங்கள் வீட்டில், இரு தற்கொலைகள் நடந்தன. முதல் தற்கொலை, எங்கள் சமையல்காரனுடையது. அடுத்தது, ஒரு வெளிநாட்டுக்காரருடையது. இரண்டாவது தற்கொலை நடந்ததும், நண்பர்கள் சொன்னார்கள். எங்கள் வீட்டு வாஸ்த்து சரியில்லையென்று. அதன் காரணமாகத்தான் இந்தத் தற்கொலைகள் நடந்தனவென்று நண்பர்களில் ஒருவர், வாஸ்த்து பண்டிதர் ஒருவரை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தார். அந்த பண்டிதர் நாங்கள் வீட்டில் செய்ய வேண்டிய மாற்றங்களைப் பற்றி சொன்னார். நாங்கள் இதைப்பற்றி, எங்கள் மாமியாரிடம் சொன்னோம். ஏனெனில், நாங்கள் வாழ்ந்து வந்த வீட்டைக் கட்டியவர், எங்கள் மாமனார். வாஸ்த்து பண்டிதர் சொன்ன அறிவுரையைக் கேட்ட பிறகுதான் என் மாமியார், லஷ்மணராவ் விஷயத்தில் வாஸ்த்து பண்டிதர் அறிவுரை எப்படி வேலை செய்யவில்லையென்பதை நினைவுபடுத்தினார்.
அவர் அப்படி சொல்லியும், நான் எடுத்துக்கொண்ட தொழில் நடக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வாஸ்த்து பண்டிதர் சொன்ன மாற்றங்களைச் செய்தோம்.
வடகிழக்கு மூலையிலிருந்த, கார் ஷெட்டையும், அதற்கு மேலிருந்த ஒரு அறையையும் இடித்து தரைமட்டமாக்கினோம். அதே மூலையில் குடி தண்ணீரைத் தேக்கி வைப்பதற்கு ஒரு தொட்டியைக் கட்டினோம். தென்மேற்கு மூலையிலிருந்த கதவை மூடிவிட்டு, அங்கிருந்த தண்ணீர்த் தொட்டியையும் மூடிவிட்டோம்.
மேற்சொன்ன மாற்றங்களைச் செய்த பிறகும், எங்கள் தொழிலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நான் யோசித்துப் பார்த்ததில் எனக்குப் புரிந்த உண்மை, ஒரு தொழிலை ஆரம்பிக்குமுன், நாம் செய்ய வேண்டிய வீட்டு வேலைகள் நிறைய இருக்கின்றன. யாரோ ஒருவர் சொல்கிறார் எனறு நம்பி, எந்த புது தொழிலிலும் இறங்கக் கூடாது. நமக்கு நடக்கும் நஷ்டத்திற்கும், வாஸ்த்துவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்பது உண்மை.
எடுத்துக்காட்டு -3:
என் சொந்த ஊர் அரக்கோணம். அங்கே என் அண்ணன், எங்கள் அனைவர் சார்பிலும், ஒரு கல்யாண மண்டபத்தைக் கட்டினார். அவர் அதைக் கட்டியது, 1986ஆம் வருடம், அவர் வாஸ்த்துவைப் பற்றிக் கவலைப்படவில்லை. கட்டிமுடித்த பிறகு, அந்த மண்டபம், நூறு சதவீதம், வாஸ்த்துக்கு எதிர்மறையாகத்தான் இருக்கிறது. ஆனால், எங்களுக்கிருக்கும் பொதுச் சொத்துக்களில், கல்யாண மண்டபம்தான், அதிக வருமானம் தருகிறது.
வாஸ்த்து பிரகாரம், கிழக்குப் பக்கம், மேற்குப் பக்கத்தைவிட அதிக வெற்றிடம் ஒதுக்க வேண்டும். ஆனால், இப்போது இருப்பது, மேற்குப் பக்கம், அதிக வெற்றிடம் இருக்கிறது. வடக்குப் பக்கம், தெற்குப் பக்கத்தைக் காட்டிலும் அதிக வெற்றிடம் இருக்க வேண்டும். அது அப்படியில்லை. வடகிழக்கு மூலையில் அடுப்பைக் கட்டியிருக்கிறார்கள். ஆனால், அது தென்கிழக்கு மூலையிலிருக்க வேண்டும். இத்தனை வாஸ்த்து தவறுகள் செய்திருந்தும், அந்த கல்யாண மண்டபம் லாபகரமாக நடக்கிறது.
மேற்சொன்ன காரணங்களால், நான் வாஸ்த்து பார்ப்பது, தேவையற்றது என வரையறுத்துக் கூறுகிறேன். ஸீ
-உண்மை,1-16.4.16

திங்கள், 6 ஜூன், 2016

ஜோதிடப் புரட்டை நம்பாதீர்!


வாஸ்து நிபுணரால் லட்சக்கணக்கில் ஏமாந்தவர் நீதிமன்றம் சென்றார்
ரெய்ச்சூர்(கர்னாடகா) மார்ச் 17_ வாஸ்து நிபு ணரின் ஆலோசனையின் பேரில் புதிதாக கட்டிய வீட்டை இடித்து பல்வேறு மாற்றம் செய்தவர், எந்த ஒரு பலனும் கிட்டாததால் வாஸ்து நிபுணர்மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
நீதிமன்றமும் இவரது வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. கருநாடகா ஆந்திரா மற் றும் தமிழக செயற்கைக் கோள் தொலைக்காட்சி ஒலிபரப்புகளில் அடிக்கடி சர்லா வஸ்து என்ற வாஸ்து நிபுணரின் விளம் பரம் தொடர்ந்து வரும், இந்த நிகழ்ச்சியை சந்திர சேகர் குருஜி என்பவர் நடத்தி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வரும் வழக்குரைஞரான மகா தேவ் துனியால் என்பவர் 2013-ஆம் ஆண்டு இவரைத் தொடர்பு கொண்டு தான் நிம்மதி இழந்து தவிப்ப தாகவும் தனது வருவாய் முழுவதும் செலவழிந்து விடுவதாகவும், இதனால் கடனாளி ஆகிவிட்டேன் என்றும் கூறி சுகமான வாழ்விற்கு வழிகாட்டுமாறு கூறினார். இவர் சமீபத்தில் தான் புதிதாக வீடு கட்டி இருந்தார். வீட்டை பார் வையிடவந்த சந்திரசேகர் இவரிடம் ஆரம்பத்தில் 11 ஆயிரத்திற்கு மேல் முன் பணமாக பெற்று, வீட்டில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று கூறிச் சென்றவர். சில நாள் களுக்குப் பிறகு கணினியில் செய்யப்பட்ட சில வரை படங்களைக் கொடுத்து இதே போல் உனது வீட் டில் மாற்றம் செய்தால் நீ செல்வந்த ராவாய் என்று கூறி மேலும் சில ஆயி ரங்களை ஆலோசனைத் தொகையாக வாங்கிக் கொண்டார். இதனை அடுத்து மகாதேவ் புதிதாக கட்டிய வீட்டில் மீண்டும் சில லட்சங்கள் செலவு செய்து வாஸ்து நிபுணர் கூறியது போன்ற மாற்றங் களைச் செய்தார்.
நம்பி ஏமாந்த பரிதாபம்!
வாஸ்துவின் படி மாற் றம் செய்து ஒராண்டைக்  கடந்துவிட்ட நிலையில் மேலும் அதிக கடனாளி யாகி விட்டார். மேலும் அவரது குடும்பத்தில் பல் வேறு பிரச்சினைகள் தோன் றியது. இதனால் அவர் விஜயபுரா மாவட்ட நீதி மன்றத்தில் வாஸ்து நிபுணர் மீது மோசடி மற்றும் பொய்கூறி ஏமாற்றி பணம் பெறும் குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தொடர்ந்தார் வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இது நுகர் வோர் தொடர்பான வழக்கு என்பது நுகர்வோர் நீதி மன்றத்திற்கு மாற்றியது. நுகர்வோர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
நுகர்வோர் நீதிமன்றத் தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கு தொடர்பாக வழக்குரைஞர் பி.எஸ்.அனந்தபூர் கூறியதாவது:
தொலைக்காட்சி மற் றும் பத்திரிகைகளில் வியா பாரம் மற்றும் ஆலோ சனை தொடர்பாக விளம் பரம் தருபவர்கள் நுகர் வோர் சட்டப்பிரிவின் படியுள்ள விதிகளின் கீழ் அவர்கள் செயல்படவேண் டும், இவர்களின் நடவடிக் கைகளால் ஏமாற்றப்பட்ட வர்கள், நுகர்வோர் நீதி மன்றத்தை அணுகலாம். மகாதேவ் தொடர்ந்த வழக் கின்படி வாஸ்து நிபுணர் மீது நம்பிக்கைத் துரோகம் மற்றும் நுகர்வோரை ஏமாற்றி பணம் பறித்தல் போன்ற குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
பேட்டி
இது தொடர்பாக ஏமாற் றப்பட்ட மகாதேவ் கன் னடப் பத்திரிகை ஒன்றிற் குப் பேட்டியளித்த போது கூறியதாவது:
சில ஆண்டுகளுக்கு முன்பு நான் சொந்தமாக வீடு கட்டினேன்; வீடு கட் டியதில் பொருளாதாரப் பிரச்சினை ஏற்பட்டது, இப்பிரச்சினை தொடர் பாக நான் வீட்டில் நிம்மதி இழந்து விட்டேன். அதே நேரத்தில் பணம் கொடுத் தவர்கள் மீண்டும் திரும்பத் தரக்கோரி தொந்தரவு செய் தனர். ஒரு முறை தொலைக் காட்சியில் சாரல் வாஸ்து என்ற ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தேன். அந்த நிகழ்ச் சியை நடத்துபவர் சந்திர சேகர குருஜி என்பவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது நிலை பற்றிக் கூறி, நான் புதிதாக கட்டிய வீட்டில் ஏதேனும் பிரச்சினை இருக்குமா? என்று ஆலோசனை கேட் டேன். அவரும் என்னு டைய வீட்டிற்கு வந்து அனைத்து இடங்களையும் பார்வையிட்டார்.
பணத்தைக் கறந்தார்
பிறகு ஹுப்லியிலுள்ள அவரது ஆள் ஒரு வர் என்னிடம் வந்து ரூ 11,600 பணமாகப் பெற்றுக்கொண் டார். சில நாள்கள் கழித்து கணினியில் பிரிண்ட் செய் யப்பட்ட ஒருவரை படத்தை என்னிடம் கொடுத்து வீட்டை இதில் உள்ளது போல் மாற்றினால் வாழ்க்கை வளம்பெறும் என்று சந் திரசேகர் குருஜி கூறினார். இதற்கும் ஆலோசனைக் கட்டணம் என்று கூறி 7 ஆயிரத்தை வாங்கிக் கொண் டார். கையில் பணம் இல் லாத நிலையிலும் சில லட்சங்களை மேலும் சில ரிடம் கடன் வாங்கி வீட்டை அவர் வரைபடத்தில் காட் டியது போன்று பல்வேறு மாற்றங்களைச் செய்தேன்.
ஏமாறாதீர்! ஏமாறாதீர்!
இதன் பிறகு சுமார் 2 ஆண்டுகள் ஆகியும் எந்த ஒரு மாற்றமும் ஏற்பட வில்லை. இவர் வரை படத்தில் காட்டியது போல் வீட்டை மாற்றியமைக்க ரூ.4.5- லட்சம் வரை செலவு செய்தேன். வீட்டுச் சுவரை இடித்து பழைய நிலையில் இருந்த கதவை வேறு திசை யில் மாற்றி வைத்தேன். மேலும் படுக்கை அறையில் இருந்த அட்டாச் பாத் ரூமை வேறு இடத்தில் மாற் றினேன். ஆனால், வாஸ்து நிபுணர் கூறியதுபோல் எதுவுமே நடக்கவில்லை.
மேலும் ஏற்கெனவே இருந்த கடன்சுமை அதிக மாகி புதிதாக கட்டிய வீட்டை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். எனது இந்த நிலைக்கு சந்திர சேகர்தான்  முழுக்காரண மாகும். இந்த நிலையில் இவரது நிகழ்ச்சி மீண்டும் மீண்டும் தொலைக்காட்சி களில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. என்னைப்போல் இன்னும் எத்தனை பேர் இவரால் ஏமாற்றப்படுள்ள னர் என்று எனக்குத் தெரி யாது. இருப்பினும் இனி எவரும் இவரிடமும் இது போன்று வாஸ்து ஜோதி டம் என்று ஏமாற்றும் நபர் கள் பிடியில் யாரும் சிக்கக் கூடாது என்ற முடி வில் நான் இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நீதி மன்றம் சென்றுள்ளேன். நீதிமன்றமும் எனது வழக் கைகையில் எடுத்துள்ளது. என்று கூறினார்.
உதயவாஹினி (கன்னடா)\
தி இந்து (ஆங்கிலம்)
-விடுதலை,17.3.16

வெள்ளி, 13 மே, 2016

வாஸ்துவுக்குப் பின்புறத்தில் ஜாதி இருக்கிறது!


அறிவியல் முன்னேற்றத் தினால், பல தொழில்கள் வளர்ச்சி யடைந்துள்ளன. அவற்றில் ஒன்று, கட்டட கட்டுமானப்பணி, பல கட்டுமானப் பொருட்கள், தொழில் நுட்பங்கள், புதிய சாதனங்கள் ஆகியவை தோன்றி சாதனைகள் பல, ஒன்றை ஒன்று மிஞ்சி நிகழ்த்தப்பட்டுள்ளன. இருப்பினும் வாஸ்து முறைப்படி வீடு கட்டுதல் என்ற வழக்கமும் வளர்ந்து கொண்டிருக்கிறது.
இது கல்வி அறிவு இல்லாத பாமர மக்களிடையே மட்டுமின்றி படித் தவர்களிடையேயும் கூட பரவி யுள்ளது. இதற்கு அடிப்படைக் காரணம், மூட நம்பிக்கையும், பயமும், பேராசையும் ஆகும். எந்த அறிவுப் பூர்வ ஆதாரமும் இல்லாத, பகுத்தறிவுக்குப் பொருந்தாத பல கோட்பாடுகள்  இங்கு நிலவு கின்றன.
எடுத்துக்காட்டாக, மனை அளவு 8அடி இருந்தால் அரசு பரிபாலனம் என்றும் 9அடி இருந்தால் செல்வம் குறையும் என்றும் சொல்லப்படுகிறது. இதே போன்று 11அடி இருந்தால், புத்திரப்பேறு அதிகம் என்றும் 12 அடி இருந்தால் மலடாவர் என்று பயமுறுத்துகிறது. 15அடி இருந் தால் தரித்திரம், தாழ்ச்சி என்றும் 16அடி இருந்தால் செல்வம் கொழிக்கும் என்றும் கூறுகிறது.
இந்த ஒரு அடி வேறுபாடு ஏன், எப்படி இந்த நன்மை, தீமை களுக்குக் காரணமாக அமைய முடியும் என்று பகுத்தறிவோடு சிந்தித்தால்தான் இவை மக்களை பயமுறுத்துவதற்காகக் கூறப்பட் டவை என்று தெளிவாகும்.
அறையின் நீளத்திற்கும் தரித் திரத்திற்கும் என்ன சம்பந்தம்?
இதேபோல் அறையின் நீளமும், அகலமும் பல நன்மை தீமைகளுக் குக் காரணமாக விளங்கும் என்றும் கூறுகிறது. அறையின் நீளம், அகலம், 19அடி இருந்தால் தரித்திரம், புத்திரபீடை என்றும், 20அடி இருந்தால் இன்பமயம் என்றும் கூறுகிறது. இது 25அடி இருந்தால் மனைவியின் மரணம் என்றும், 26அடி இருந்தால் செல்வம் பெருகும் எனவும் சொல் லப்படுகிறது.
இங்கும் இந்த ஒரு அடி வேறுபாடு இந்த மாற்றங் களை ஏற்படுத்தும் என்பது பகுத் தறிவுக்குப் புறம்பான ஒன்றாகும். இதே போன்று ஒரு வீட்டை வாஸ்து சாஸ்திரப்படி அமைக்கா விட்டால், இந்த எஜமானன், எஞ்சினீயர், காண்ட்ராக்டர், கொத்து மேஸ்திரி, தச்சு மேஸ்திரி ஆகிய அய்வரின் வாழ்விலும் பாதிப்பு ஏற்படும் எனவும் அச்சுறுத்துகிறது.
இந்த சாத்திரம், அடுத்து ஏற்படும் அய்யப்பாடு, ஏன் இந்த அச்சுறுத்தும் கோட் பாடுகள் கூறப்படுகின்றன என்ப தாகும். இதை சற்று சிந்தித்தால் எப்படி சாதகம், சோசியம் போன் றவை பேராசை, பயம், மூடநம் பிக்கை ஆகியவற்றைக் கொண்ட மக்களை ஏமாற்றி பிழைப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றதோ, அதேபோல், வாஸ்துவும் அதில் கூறப்படும் அச்சுறுத்தும் கோட் பாடுகளும் மக்களை ஏமாற்றிப் பிழைப்பதற்குப் பயன்படுத்தப்படு கின்றது என்பது தெளிவாகும்.
ஜாதி இதன் பின்னணி! மற்ற தொழில் நுட்பத் துறை களுக்குக் கொடுக்கப்படாத சாஸ்திர அந்தஸ்து ஏன் இந்த வாஸ்துவுக்கு மட்டும் கொடுக்கப் பட்டது என்று ஆராய்வோம். ஜாதி முறையை நிலைநாட்டவும் ஜாதியின் அடிப்படையில் சூழ்ச்சி யாக சில நியதிகள் செயல்படுத் தப்படவும் இந்த வாஸ்து வழி செய்தது.
அ) பொன்னிறமான மண்ணில் -_ இனிப்பு ருசியும், தாமரை மலரின் வாடையும் இருந்தால், அந்தணர் கள் இதில் வீடு கட்டலாம்.
ஆ) சிவந்த நிறமும், கார்ப்பு ருசியும், குதினாயின் வாடையுள்ள மனையில் சத்திரியர்களும்,
இ) பச்சை நிறமும், புளிப்பு ருசியும் வாடையுமுள்ள மனையில் வைசியர்களும்
ஈ) கருப்பு நிறமும், கசப்பு ருசியும், தானிய வாடையுமுள்ள மனையில் மற்ற இனத்தவர்களும் (சூத்திரர்) வீடு கட்ட வேண்டும்.
இதேபோல், அந்தணர் தென்திசை ஆயர்மேற்றிசை
வந்திடு வணிகர்நல்வடக்கு வான்திசை
தொந்தமில் சூத்திரர் தோன்றுங்கீழ்திசை
பிந்திய நடுவது பிரமன்தானமே
என்று ஜாதியின் அடிப்படை யில் வீடுகட்டும் இடத்தை நிர்ண யம் செய்தது, வாஸ்து.
இவ்வாறு ஜாதி முறையை நிலைநாட்டவும், அதன் மூலம் பல வசதிகளை பெறவும், வழி செய்ததால், இக் கலை சாஸ்திர அந்தஸ்தை பெற் றது என்று ஊகிக்கலாம்.
இந்த வாஸ்து முறையைப் பின்பற்றாமல் கட்டப்பட்ட கட்டடங்களின் உரிமையாளர்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள் என்பதும், இம்முறையைப் பின் பற்றி கட்டப்பட்ட கட்டடங் களின் உரிமையாளர்கள் பலர் பல இன்னல்களுக்கு ஆளானார்கள் என்பதும், இம்முறையைப் பின் பற்றி கட்டப்பட்ட கட்டடங் களின் உரிமையாளர்கள் பலர் பல இன்னல்களுக்கு ஆளானார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரிந் ததே.
ஆனால், இந்த வாஸ்து முறையைச் சொல்லி, மற்றவர்களை ஏமாற்றி வாழ்பவர்கள், கட்டடக் கலைகூறும் சில நல்ல கருத் துக்களையும் சேர்த்துக் கூறுவது, நச்சுப் பொருளை, இனிப்பு மேலு றையுடன் கொடுப்பதற்கு இணை யாகும் அல்லவா?
முனைவர் நல். இராமச்சந்திரன், பேரா. எல்.ஜே. சுப்ரமணியம்
-விடுதலை ஞா.ம.7.2.15

சனி, 13 பிப்ரவரி, 2016

இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது மூடநம்பிக்கைகள் ஜோதிடம் போன்றவைதான்!


நோபல் அறிஞர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் சாட்டையடி!

மைசூரு, டிச.13-_ இந்தியாவின் வளர்ச்சிக்கு தடை போடுவது மூட நம்பிக்கை என்றார் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ராமகிருஷ்ண வெங்கட்ராமன். மைசூரு பல்கலைக் கழகத்தின் சார்பில் மைசூருவில்   நடந்த நோபல் பரிசு நூற்றாண்டு தொடர்சொற்பொழிவு-4-இல் பங்கேற்று 'யாருக்கும் சொந்தமில்லா உலகம்: சான்றுகள் மற்றும் நவீன அறிவியல்' என்ற தலைப் பில் அவர் பேசியதாவது:
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய அய்ரோப்பா நாடுகள் முன்னேறியுள்ள தற்கு நவீன அறிவியல் பயன்பாடுதானே தவிர, அது விபத்தால் நேர்ந்த தல்ல. நவீன அறிவியல் நடைமுறைகளை பின் பற்றி அமெரிக்காவும், மேற்கத்திய அய்ரோப்பிய நாடுகளும் முன்னேறிக் கொண்டிருக்க, பிற நாடுகள் பின் தங்கிவிட் டன. மூடநம்பிக்கைகள், ஜோதிடம் போன்ற அடிப்படை ஆதா
ரங்கள் இல்லாத பல வழக்கங் கள் இந்தியாவின் முன் னேற்றத்தை தடுத்து வருகின்றன.
ஜோதிடமும் ஹோமி யோபதியும் மனரீதியான நம்பிக்கையால் செயல் படுகின்றன. ஜோதிடம், குத்துமதிப்பாக கூறப்படும் ஆலோசனைகளால் ஆனது. அவரவர் வீட்டை தூய்மையாகவும் வெளிச் சமாகவும் வைப்பதற்கு ஜோதிட ஆலோசனைகள் தேவையில்லை. இந்தி யர்கள் மூடநம்பிக்கை களில் இருந்து விடுபட வேண்டும் அல்லது குறையவேண்டும். இந்தியர்கள் எதையும் ஆராய்ந்து நோக்கும் பகுத்தறிவாளர்களாக மாற வேண்டும். மேற்கத்திய நாடுகளில் விண்கலங்கள் விண்ணில் ஏவப்படுவதற்கு முந்தைய கடைசி நிமிடங்களில் முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளில் ஈடுபடு வார்கள்.
இந்தியாவின் வர லாற்று சிறப்பு வாய்ந்த மங்கள்யான் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டப் போது, அது வெற்றிகர மாக விண்ணில் ஏவுவ தற்காக அப்போதைய இந்திய விண்வெளி ஆராய்ச் சிக்கழக (இஸ்ரோ) தலை வர் கே.ராதாகிருஷ்ணன் திருப்பதிக்கு சென்று பிரார்த்தனை செய்தார். இது எனக்கு மிகுந்த ஆச் சரியத்தை ஏற்படுத்தியது.
மங்கள்யான் விண் கலத்தை ஏவுவதற்கு பொருத்தமான நாளாக செவ்வாய்க்கிழமையையும் தேர்ந்தெடுத்தனர். இது போன்ற நடவடிக்கைகள் மேற்கத்தியநாடுகளில் காணமுடியாதது. மக்களி டையே உயிரியல் சார்ந்த அடிப்படை புரிதல் இல்லை. ஆண் குழந்தையை ஈன்றெடுக்காததற்கு தாயை குறைசொல்லும் மூடநம்பிக்கை இந்தி யாவில் உள்ளது. இதை எப்படிஏற்றுக்கொள்ள முடியும்?
2009 ஆம் ஆண்டில் சூரியகிரகணம் ஏற்பட்ட போது அதனால் ஏற்படும் விளைவுகளை தவிர்க்க கர்நாடக அரசு சார்பில் கோயில்களில் பூஜை நடத்த தாராளமாக நிதி ஒதுக்கப்பட்டது. விண்வெளி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ள கர்நா டகத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது ஆச்சரியமளித்தது.
ஒருபக்கம் அதிநவீன தொழில்நுட்பமும், மறுபக்கமும் மூடநம்பிக் கையும் இந்தியாவில் குவிந்துள்ளன. தவறான நம்பிக்கைகள், ஜோதிடம் போன்றவற்றின் எதிர் வினையால் தான் உண் மையான அறிவியல் மலர்ந்தது. மனிதர்களி டையே தாக்கத்தை ஏற் படுத்துவதாக ஜோதிடர் கள் கருதியதன் விளை வால் கோள்கள், நட்சத் திரங்கள் குறித்த அறிவி யல் ஆராய்ச்சிகள் தொடங் கின. மாறிக்கொண்டே இருக்கும் அறிவியலைப் போல அல்லாமல் ஜோதி டம் வளர்ச்சியில்லாமல் உறைந்துபோயுள்ளது என்றார் அவர்.
-விடுதலை,13.12.15

வியாழன், 10 டிசம்பர், 2015

ஜோதிட நிகழ்ச்சிகளுக்கு கருநாடகாவில் தடை

பலே, பலே, பாராட்டத்தக்க முடிவு
ஜோதிட நிகழ்ச்சிகளுக்கு கருநாடகாவில் தடை

கருநாடக முதல்வர் சித்தாராமய்யா அறிவிப்பு

பெங்களூரு, டிச.10_ கருநாடக மாநிலத்தில் தொலைக்காட்சிகளில் ஜோதிட நிகழ்ச்சிகள் வாயிலாக  அறிவியலுக்குப் புறம்பான மூடநம்பிக்கை கள் மக்களிடையே பரவி வருகின்றன. அதற்கு முடிவு கட்டும்வகையில் அம்மாநில அரசு திட்ட மிட்டு வருகிறது.
தொலைக்காட்சிகளில் ஜோதிட நிகழ்ச்சிகளின் மூலமாக  மக்கள்  மூடநம் பிக்கைகளுக்கு அடிமையா வதை அறிந்து, கடவுள் கவலையற்றவராக அறி யப்பட்ட முதலமைச்சர் சித்தாராமய்யா அந்த நிகழ்ச்சிகளுக்கு தடை செய்ய முன்வந்துள்ளார்.  மாநிலத்தில் ஏற்கெனவே மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சட்டத்தை கொண்டுவரும்வகையில், இதுபோன்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மூத்த அமைச்சர் ஒருவர் கூறுகையில், ஜோ திடம் சார்ந்த தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் இப்போது மிகவும் கவ லைக்குரியனவாக உள்ளன. ஆட்சேபத்துக்குரிய கருத் துகளைக் கூறுவதும், அதன்மூலம் அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதும் பரவி வருகின்றன. தொடக்கத் தில் ராசியைக் கேட்டு அதற்கு இலவசமாக ஜோதிடத்தை கூறிவந் தார்கள். இப்போது தொலைக்காட்சி அலை வரிசைகளின் டிஆர்பி ரேட் என்கிற நிகழ்ச்சி பார்வையாளர்கள் எண் ணிக்கையைப் பெருக்கு வதற்காக இயற்கை அழி வுகள், சந்தனக் கடத்தல்கள், அரசியல் வாய்ப்புகள் உள்ளிட்ட பலவற்றை இணைத்துக்கொண்டார்கள். அண்மைக்கால நிகழ்வு களை, பிரச்சினைகளை இணைத்துக்கொண்டு நிகழ்ச்சியை ஜோதிடத்தின் அடிப்டையில் நடத்தத் தொடங்கிவிட்டார்கள். இதுபோன்ற ஜோதிடத் தின் அடிப்படையிலான நிகழ்ச்சிகள் மக்களை அறிவியலுக்கும், அறிவுக் கும் புறம்பான  வாழ்வுக்கு வழிகாட்டுபவையாக அமைந்துவிடுகின்றன. 2005ஆம் ஆண்டுகளில் ஆறு தொலைக்காட்சி அலைவரிசைகளாக இருந்தவை இப்போது 20 தொலைக்காட்சி அலை வரிசைகளாக இயங்கி வருகின்றன. அவற்றில் சில காலை 6 மணிமுதல் காலை 10.30 மணி முடிய அலைவரிசை ஒளிபரப்பை ஜோதிடர்களிடம் விற் பனை செய்துள்ளன. புகழ் மற்றும் பணம் பெறுவ தற்காக செய்ய வேண்டிய கணிப்புகளைக் கூறுவது, பூஜைகள்குறித்து விளக் குவது என்று அந்த நிகழ்ச் சிகள் இருக்கின்றன என்றார்.
பேராசிரியர் கே.எஸ்.பகவான்
பேராசிரியர் கே.எஸ். பகவான் கூறுகையில், ஜோதிடர்கள் ஜோதிடவி யலை, வானவியல் என்றும் அறிவியல் என்றும் கூறி வருகிறார்கள். சமூகத்தில் மக்களிடையே உள்ள பல்வேறு நிலைகளைக் கொண்டு அதனடிப்படை யில் ஜோதிடர்கள் கணிப் புகளைக் கூறி உளவியல் ரீதியாக அச்சத்தை ஏற்ப டுத்துகிறார்கள்.  எந்த ஜோதிடராவது சென்னை வெள்ளம்குறித்து கூறி னாரா? ஜோதிடத்தை அரசு தடை செய்வது சரி யானதே. நான் முழுமை யாக ஆதரிக்கிறேன்.
கே.எஸ். சிவராமு
கருநாடக மாநில பிற்படுத்தப்பட்டவர்கள் நல அமைப்பின் தலைவர் கே.எஸ். சிவராமு கூறு கையில், ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் வாழ்வில் எப்படியாவது நல்ல நிலை ஏற்படுமா? என்று ஜோதி டர்களை நாடுகிறார்கள். ஆகவேதான் அவர்களில் பலரும் அதுபோன்ற ஜோதிட நிகழ்ச்சிகளை பார்க்கிறார்கள். ஆனால்,  பல தகவல்களின் அடிப் படையில் ஜோதிடம் என்பது ஓர் ஏமாற்று வேலை என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. அதிலும் வருத்தத்துக்குரியது என்ன வெனில், பெண்கள் உட் பட ஏராளமானவர்கள் அந்த நிகழ்ச்சிகளைப் பார்ப்பதுடன், ஜோதி டர்கள் கூறுவதை கண் மூடித்தனமாக பின்பற் றுகிறார்கள் என்பதுதான்.
கே.என்.சோமாயாஜி
ஜோதிடராக உள்ள கே.என்.சோமாயாஜி என்பவர் கூறுகையில், நான் முதல்வரின் முடிவை பாராட்டுகிறேன். தாங் களாகவே ஜோதிடர்கள் என்று கூறிக் கொள் பவர்கள் தொலைக் காட்சி களின்  மூலமாக மக்களை மோசமாக வழிநடத்து கிறார்கள். ஜோதிடத்தால் உறுதியாக எதையும் கூறமுடியாது. மாறிமாறி நிகழ்பவற்றை கூறும். வேத அறிவியல் சிலரால் தவ றாகப் பயன்படுத்தப்படு கிறது.  ஜோதிடத்தின்மூல மாக தளர்ச்சியடைந்த ஒருவரை ஊக்கப்படுத்த லாமே தவிர ஊழை மாற்ற முடியாது. தொலைக்காட்சி களும்கூட எளிதில் ஏமாறக் கூடிய மக்களை மேலும் முட்டாளாக்குகின்றன என்பதுதான் கெட்ட வாய்ப்பாகும் என்றார்.
நிரஞ்சன் பாபு
ஜோதிடம்சார்ந்த இணைய பத்திரிகையாசிரி யர் நிரஞ்சன் பாபு என்பவர் கூறுகையில், 5000 ஆண்டு களாக ஜோதிடம் இருந்து வருகிறது. இந்த தடையை நான் ஆதரிக்கிறேன். அதே நேரத்தில், ஜோதிடத்தை கடைப்பிடிப்பதற்கும் தடை என்று விரிவுபடுத்தக் கூடாது. தொலைக்காட்சி களில் ஜோதிடர்களின் கணிப்புகள், ஆடை அலங் காரங்கள், தலையிலிருந்து உடல்முழுவதும் கண்ணைப் பறிக்கும்படியாக ஜொலிக் கின்ற நகைககள் ஆகியவை வேடிக்கையாக இருக்கின் றன. இயற்கை பேரிடர் கள்குறித்த கணிப்பில் மக்களிடம் அச்சத்தை உருவாக்கி வருகிறார்கள். மக்களை ஜோதிட தொலைக் காட்சிகள் தவறாக வழி நடத்துகின்றன என்று குறிப்பிட்டார்.
5000 முதல் 50000 அறுவடை
நகரில் உள்ள பிரபல மான ரத்தினக்கல் வியா பாரி ஒருவர் கூறுகையில், வாரத்தில் இரண்டு முதல் மூன்று பேர் எங்களிடம் வருகிறார்கள். தொலைக்காட்சிகளில் ஜோதிடர்கள் கூறுகின்ற கல்குறித்து கேட் கிறார்கள். இதுபோன்ற வாடிக்கையாளர்களில் பிரபலமான நட்சத் திரங்கள், அரசியல் வாதிகள் வருகிறார்கள். தொலைக்காட்சிகளின் மூலமாக இலவசமாக ஆலோசனைகள் வழங்கப்படுவதாகக் கூறப் பட்டாலும், நிகழ்ச்சிக்குப் பின்னர் அடுத்த நிமிடத் திலேயே அவர்களிட மிருந்து ஆலோசனைக் கட்டணமாக ரூபாய் 5 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை பெற்றுக் கொள்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
வரவேற்பு
அடிப்படையே இல் லாத போலியான கணிப்பு களை வழங்கும் ஜோதி டம் சார்ந்த நிகழ்ச்சி களுக்கு தடைபோடக் கூடிய அரசின் திட்டம் வரவேற்கத்தக்கது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் மக்களை உளவியல்ரீதியில் அச்சமூட்டி, பார்வையா ளர்களிடம் பின்னர் அதற்கான தீர்வுகளைக் கூறுவதாக கூறுகின்றன. இந்த நிகழ்ச்சிகள்மூலமாக ஜோதிடர்களாக கூறிக் கொள்பவர்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தாருக்கு பணம் கொழிக்கின்றது. இந் நிகழ்ச்சிகளை தடைசெய்ய அரசு எடுத்துள்ள முடிவு  பாராட்டுக்குரியது. பார பட்சமின்றி இதைக் கண்டிப்பாக செய்திடவும் வேண்டும். மூடநம்பிக் கைக்கு எதிரான சட் டத்தைக் கொண்டு வரு வதற்கான ஒளிக்கீற்றாக இது அமையும். சிலர் இதில் குழப்பம் விளை விக்கும் கருத்துகளை கூறினாலும், தளர்ந்திடக் கூடாது. எவ்வித பாரபட்ச மும் இன்றி, அரசியல் கண்ணோட்டமின்றி, சிறு பான்மையர் வாக்குவங்கி நோக்கமின்றி அமைந்திட வேண்டும் என்று டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து வெளியிட்டுள்ளது.
-விடுதலை,10.12.15

திங்கள், 16 நவம்பர், 2015

சோதிடந்தனையிகழ்!


-சு.அறிவுக்கரசு
’விதியே வாழி! விநாயகா வாழி! பதியே வாழி! பக்தி வாழி! என்றெல்லாம் பாடிய பாரதியார், ஆத்திச்சூடியில் சோதிடந்தனை இகழ் எனக் கூறினார். இராசகோபாலாச்-சாரியாரும்கூட சோதிடம் ஒரு மூடநம்பிக்கையே என்றார். நம் வீட்டு எருமை, கன்று ஈந்த நேரத்தைக் குறித்துக் கொடுத்தால்கூட, ஜோதிடன் ஜாதகம் கணித்துக் கொடுப்பானே தவிர, இது எருமை சோதிடம் என்று கூறமாட்டான் என்றார் தந்தை பெரியார்.
அண்ணனின் ஜாதகத்தையும் தங்கையின் ஜாதகத்தையும் தந்து, பொருத்தம் பாருங்கள் என்று கூறினால், பத்துக்கு எட்டரைப் பொருத்தம் இருக்கிறது என்றுதான் சோதிடன் கூறுவானே தவிர, உடன் பிறந்தவர்களின் ஜாதகம் இவை என எந்த ஜோசியனும் கூறுவது இல்லை. ஆகவேதான் அதனை இகழ வேண்டும் என்றனர்.
மாறாக, அதனைப் பாடமாக்கி, கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் கற்பிக்கின்றனர் என்றால்... இந்தக் கொடுமை அரங்கேற்றப்பட்டது, பி.ஜே.பி. ஆட்சி ஆறாண்டுக் காலம் நடந்தபோது!
ஆர்.எஸ்.எஸ்.காரரான முரளி மனோகர் ஜோஷி கல்வித்துறையைக் கவனித்த அமைச்சராக இருந்தபோது மேடையை அமைத்தார். இந்த அறிவியல் படித்தால் பி.எஸ்.சி. பட்டம் வழங்கப்படும் என ஆணை பிறப்பித்தார். எல்லாரும் எதிர்த்தனர். இது எப்படி அறிவியலாகும் எனக் கேட்டனர்.
பதில் கூற முடியாத முரளி மனோகர் ஜோஷி பணிந்து பேசினார். பி.ஏ. பட்டம் தரப்படும் அதுவும் ஒரு கலை என்ற காரணத்தினால் என்றார். மேல்நாட்டார் ஒருவர் கொலைகூட ஒரு கலைதான் எனக் கூறினார் அல்லவா? கொலை ஒரு கலை அப்பா! என்று மந்திரிகுமாரி திரைப்படத்தில் எஸ்.ஏ.நடராஜன் என்ற நடிகர் கூறும் வசனத்தை கலைஞர் மு.க. எழுதியதைப் படம் பார்த்தவர்கள் நினைவில் வைத்திருப்பர்.
அதுபோல சோதிடத்தைப் புளுகுக்கலை எனக் கூறினாரோ? இந்தக் கலையைக் கற்றுத் தந்தால் பல்கலைக்கழக மான்யக் குழு (U.G.C.) நிதி கூடுதலாக வழங்கும் என்று தேன் தடவினார். பல்கலைக் கழகங்கள் சில ஈக்களாகச் சிக்கின. அதில் ஒன்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்!
நாள், நட்சத்திரம் பார்த்து பிரும்மரிஷி வசிட்டன் ஜோதிடம் கூறியவாறு, ராமன் பட்டாபிஷேகம் நடைபெறவில்லை; காட்டுக்கு அனுப்பப்பட்டான். அக்மார்க் முத்திரை குத்தும் அருகதை பெற்றவன் வசிஷ்டன். அவன் கணித்ததே கவிழ்ந்து போனது கைகேயியால்!
முறைப்படியும் வழக்கப்படியும் ஜாதகப்படியும் அண்ணன் நாடாள முடியாது, தம்பிதான் நாடாள்வான் என்றான் ஜோதிடன். தம்பி துறவு மேற்கொண்டான். அண்ணன் ஆட்சியில் அமர்ந்தான். நிமித்தகன் சொன்னதை மாற்றிக் காட்டினான் சிலப்பதிகாரத்தில்! செங்குட்டுவன் சேரனானதை இளங்கோ அடிகள் அப்படித்தான் பாடினார்! சோதிடத்தைப் பொய் எனக் காட்டி இகழ்ந்த செய்திகளை ஏராளம் சுட்டிக்காட்டலாம்!
கேரளப் பகுத்தறிவாளர் ஏ.டி.கோவூர் 1969இல் விடுத்த அறைகூவலை ஏற்று, சோதிடம் அறிவியல் என்பதை எண்பித்துக்-காட்ட எவரும் முன்வரவில்லையே! பெங்களூர் நகரில் எட்டுக் கூட்டங்களில் பேசி இந்த அறைகூவலை 1978இல் புதுப்பித்தார் கோவூர். இங்கிலீஷில் ஜோசியம் கூறி, ஏடு நடத்திவந்த உலகப் புகழ்(!) பி.வி.ராமன் என்பவர்கூட பெங்களூர்க்காரர்தான். அறைகூவலை ஏற்கவில்லையே!
வைத்தீசுவரன் கோவில் என்ற ஊரில் நாடி ஜோதிடம் கூறிவந்த பூசமுத்து என்பவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்து கணக்கில் காட்டப்படாத பல இலட்ச ரூபாய்த் தொகையை அள்ளிப் போனார்கள்.
பசிக்காமலிருக்க வரம் தருவேன், எனக்குப் பழைய சோறு பிச்சை போடுங்கள் என்று ஒருவன் சொன்னதைப் போல என்பார் தந்தை பெரியார். அதைப் போல ஊருக்கு ஜோசியம் சொன்ன ஆள், தனக்கு வருவதை உணரவில்லையே!
காந்தியாரும் இந்திரா காந்தியும் சுடப்பட்டுச் சாவார்கள் என்று எந்த ஜோதிடனும் கூறவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆபிரகாம் லிங்கனும், கென்னடியும் கொலை செய்யப்படுவார்கள் என்று அமெரிக்க நாட்டு ஜோதிடனும்கூடக் கூறவில்லையே! அங்கேயும்-கூட ஜோசியர்களும் சோதிடமும் இருக்கின்றன. முட்டாள்தனம் உலகுக்கே சொந்தம் என்றார் தந்தை பெரியார்.
வானவியல் (Astronomy) என்பது வேறு. சோதிடம் (Astrology) என்பது வேறு. முன்னது அறிவியல். பின்னது பொய்யியல். நோபல் பரிசு பெற்ற பல அறிவியலாளர் வெளிப்படையாக அறிவித்த பிறகும் அங்கேயே பலருக்கு அறிவு வரவில்லை எனும்போது, இந்தியாவில் எப்படி....?
வானவெளியில் ஒன்பது கிரகங்கள் மட்டுமே உள்ளனவா? ஹம்ஃப்ரி என்று பெயர் வைக்கப்பட்ட பத்தாம் கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூரியனைச் சுற்றிவர 204 நாள்கள் ஆகிறது என்பது உட்படப் பலவற்றையும் கண்டறிந்து உள்ளனர்! இது ஜாதகத்தில் இடம் பெறவில்லை! ராகு, கேது, என்பவை ஆங்கில ஜோசியத்தில் இடம்பெறவில்லையே!
சூரியனைக் கிரகம் என்கிறது சோதிடம். அது நட்சத்திரம் என்பது அறிவியல்! சூரியன் ஏழிலிருந்து ஒன்பதாம் வீட்டுக்குப் போகிறார், ஆறிலிருந்து நாலுக்கு நடக்கிறார் என்கிறது சோதிடம். சூரியன் நகர்வதோ, சுற்றுவதோ இல்லை. நிலையாக நின்று எரிகிறது என்கிறது அறிவியல். பின் எப்படி சோதிடம் அறிவியல்?
சந்திரன் கோள் அன்று! துணைக் கோள்தான். ஆனால், அதனைக் கோள் என்றே கணக்குப் போடுகிறது சோதிடம்! பூமிக்கு ஒரு சந்திரன், செவ்வாய்க்கோளுக்கு இரண்டு சந்திரன், வியாழனுக்கு 16, சனிக்கு 22, யுரேனசுக்கு 15, நெப்டியூன் கோளுக்கு 3 என நூற்றுக்கும் மேற்பட்ட சந்திரன்கள் வானவெளியில் உண்டு. எந்தச் சந்திரன் சோதிடத்தில் சேர்த்தி? நாம் கண்ணால் காணும் சந்திரனை மட்டும் சேர்த்தால் போதுமா?
பூமி ஒரு கோள் (கிரகம்)! பூமியை சோதிடத்தில் கிரகமாகக் கணக்கில் சேர்க்கவில்லையே!
கோள்களின் பார்வை படுகிறது என்கிறது சோதிடம்! எட்டாம் வீட்டில் இருந்துகொண்டு சூரியன் பார்க்கிறான் என்கிறார்கள். அனுகூலப் பார்வை, வக்கிரப் பார்வை என்று பார்வையோ பலவிதம் என்கிறார்கள். பூமியிலிருந்து 15 கோடி கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் சூரியன்! 195 நாடுகளுக்கும் ஒரே சாயையும் ஒரே கிரணங்களையும் பதிவு செய்கிறது. நாடே இல்லாத, ஆளே இல்லாத துருவப் பகுதிகளிலும் சூரியக் காற்று சுமூகமாகவே வீசுகிறது. இந்த நிலையில் சூரியப் பார்வையில் வேறுபாடாம்! எப்படி அறிவியலாகும்?
உலகில் அரசியல் நிலையை சுக்கிரன் முடிவு செய்கிறதாம். போர்களைச் செவ்வாய் உண்டாக்குகிறதாம்! தர்மச் செயல்களுக்கு குருவாம்! அதர்மச் செயல்களுக்கு சுக்கிரன், செவ்வாய், ராகு கிரகங்களாம்!
நாடு பிடிக்கும் வெறியும், பேராசைகளும் உலகில் இதுவரை ஏற்பட்ட போர்களுக்குக் காரணிகள். அலெக்சான்டர், செங்கிஸ்கான், தொடங்கி பிஸ்மார்க், முசோலினி, டோஜோ, இட்லர் ஈறாகப் பல சர்வாதிகாரிகளின் மன வக்கிரங்கள், நாடு பிடிக்கும் பேராசைகள் போன்றவையே அரசியலையும் போர்களையும் ஆட்டிப் படைத்தன என்பதே உண்மை! நபர்களின் வக்கரிப்புகளுக்கு நாடு எப்படிப் பொறுப்பு? நாட்டின் ஜாதகம் எப்படிப் பொறுப்பு ஆக முடியும்?
மனிதர்களின் பிறந்த நேரம், கிரக நிலை இதனை வைத்து ஜாதகம் என்று கூறுகிறார்கள்! நாடுகளுக்கு எது பிறந்த நேரம்? இந்தியா எப்போது ஜனித்தது? 1947 ஆகஸ்ட் 15ஆம் நாளிலா? நள்ளிரவு 12-_01க்கு அல்லவா? இவர்களது பஞ்சாங்கம் 30 நாழிகைக்கு மட்டும்தானே கணித்து வைத்திருக்கிறார்கள்!
சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை உள்ள 12 மணிநேர, 30 நாழிகைக்கு மட்டும்தானே! உதயமோ, அஸ்தமனமோ சூரியனுக்குக் கிடையாது. அது, தோற்றப் பிழை! ஆனால், அதனடிப்படையில் எதையோ பிதற்றுவது அறிவியலா?
எவ்வளவோ வாதங்கள் உள. என்றாலும் ஈராயிரம், மூவாயிரம் ஆண்டுகளாக சோதிடப் பித்தலாட்டம் உலகில் இருக்கிறது. தமிழர் பிரித்த நானிலங்களில் மருத நிலத்துக்கு உரித்தான பரத்தமை உலகின் இரண்டாம் மூத்த தொழில் என்கிறார்கள். அப்படியானால் உலகின் மூத்த முதல் தொழில்? சோதிடம்!
சோதிடர்களை நற்செய்தி கூறுவோர் (Soothe Sayers) என்கின்றனர் ஆங்கிலேயர்கள்! இங்கோ, இந்தியாவிலோ, சோதிடர்கள்தாம் எல்லாமுமே! அத்தகைய மடமை ஒழிய வேண்டும். ஒழிக்கப்பட வேண்டும். கல்விச் சாலைகள் அறிவை வளர்க்க வேண்டும்.
பகுத்தறிவைப் பயன்படுத்திட படிப்போரை ஊக்குவிக்க வேண்டும். சிலகோடி நிதிக்காகப் பகுத்தறிவைப் பாழ்படுத்தும் பாடத் திட்டங்களை ஏற்கக் கூடாது, மறுதலித்திட வேண்டும்! அந்த நாளும் வந்திடாதோ?
-உண்மை இதழ்,15-28.2.15