மூடநம்பிக்கை : ஜோதிடம் உண்மையா?
ஒளிமதி
உலகில் நடைபெறுகின்ற மோசடிகள் அனைத்தும் மனிதனிடமுள்ள பலவீனத்தை அடிப்படையாக வைத்தே செய்யப்படுகின்றன. அவ்வாறே ஜோதிட மோசடியும் மனிதனின் இயல்பறிந்து செய்யப்படுகிறது.
மறைக்கப்படுகின்ற எந்தவொன்றையும் காண வேண்டும் என்கிற ஆசை எழுவது மனிதனுக்கு இயல்பு.
எனவே, நடக்கப் போவதை அறிவிக்கிறேன் என்று யாராவது கூறியவுடன் ஆவலோடு அங்குச் செல்கிறான். அதற்காகச் செலவிடவும் தயாராக இருக்கிறான். இந்த மனநிலையைப் பயன்படுத்திக் காசு பறிக்கக் கையாளப்படுகின்ற யுக்தியே ஜோதிடம்.
இவ்வாறு நாம் கூறியவுடன், “ஜோதிடம் என்பது மூடநம்பிக்கைகளைப் போல அல்ல; இது அறிவியல் சார்ந்தது. கிரகங்களின் இயக்கத்திற்கும் மனித நடவடிக்கைகளுக்கும் சம்பந்தம் உண்டு. அந்த அடிப்படையில் கணிக்கப்படுவதே ஜோதிடம்’’ என்று சிலர் கூறுகின்றனர்.
எனவே, கிரகங்களின் இயக்கத்திற்கும் மனித வாழ்க்கை அமைவதற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்பதை முதலில் ஆராய வேண்டும்.
ஒரு குழந்தை பிறக்கும்போது, அமைந்துள்ள கிரகங்களின் நிலைக்கேற்பவே. அக்குழந்தையின் வாழ்க்கை அமைகிறது என்பதே ஜோதிடத்தின் அடிப்படைத் தத்துவம்.
இத்தத்துவம் சரியென்றால் ஜோதிடம் என்பது சரி _ உண்மை; இத்தத்துவம் தவறு என்றால் ஜோதிடம் என்பதும் தவறு _ பொய்.
ஒரு குழந்தை பிறக்கும்போது இருக்கின்ற கிரகங்களின் நிலைக்கு ஏற்பவே. அக்குழந்தை-யின் வாழ்க்கை அமையும் என்றால், அதே நேரத்தில் பிறக்கின்ற அத்தனை குழந்தைகளின் வாழ்க்கையும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் அல்லவா? ஆனால், அவ்வாறு இருக்கிறதா என்றால் இல்லை.
ஒரு நொடிப்பொழுதில் உலகில் நூற்றுக்-கணக்கான குழந்தைகள் பிறக்கின்றன. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கின்ற குழந்தை இறந்தால், ஜோதிடத் தத்துவப்படி. அந்த நேரத்தில் பிறக்கின்ற அத்தனை குழந்தைகளும் பிறந்தவுடன் இறந்து போக வேண்டும். ஆனால், அவ்வாறு இறந்து போகின்றனவா? இல்லையே!
பிறக்கின்ற நேரத்தில் இருக்கின்ற கிரக நிலைக்கேற்பவே வாழ்நாள் அமையும் என்றால், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பிறக்கின்ற நாய், பன்றி, ஈ, கொசு, யானை, சிங்கம் இவற்றின் வாழ்க்கைகூட ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும். இருக்கின்றதா? இல்லையே!
பிறக்கின்ற இடத்தையும் பார்க்க வேண்டும் என்று சிலர் கூறுவர். அப்படியே பார்த்தாலும் ஒரு குறிப்பிட்ட நாட்டில் பிறக்கின்ற அத்தனை குழந்தைகளும் ஒரே மாதிரி வாழ்கின்றனவா? இல்லையே!
எனவே, ஜோதிடத்தின் அடிப்படைத் தத்துவமே பொய் என்பது புரிகிறதல்லவா? அடிப்படையே பொய் என்றால், அதன் மீது புனையப்படும் மற்ற ஜோதிட அளப்புகள் அனைத்தும் அசல் பொய்தானே?
மேலும், கிரகங்களின் இயக்கத்திற்கும், மனித வாழ்க்கை அமைவதற்கும் தொடர்பு இருப்பதாகவும், அதனடிப்படையில் கணிக்கப்-படும் ஜோதிடம் அறிவியல் சார்ந்தது என்றும் நம்பப்படுவது எவ்வளவு அறியாமை!
“நாயாய்ப் பிறந்தாலும் நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும்!’’ என்று, பிறக்கின்ற நேரத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் எவ்வளவு பிதற்றலானது! நன்றாகச் சிந்திக்க வேண்டும்.
அறிவியல் உண்மைப்படி சூரியன் இடம் பெயராமல் ஒரே இடத்தில் தன்னைத்தானே சுழற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால், ஜோதிடம் சூரியன் இடம் பெயர்வதாகக் கூறுகிறது. அப்படியிருக்க ஜோதிடத்தின் அடிப்படையே தவறு. அறிவியலுக்கு முரண். எனவே, ஜோதிடம் அறிவியல் அல்லவே.
மேலும் இப்போது புதுப்புது கிரகங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அப்படியிருக்க 9 கிரகங்களை மட்டும் வைத்து ஜோதிடம் சொல்வது எப்படிச் சரியாகும்? ஆக கிரகங்கள் எல்லாவற்றையும் கணக்கில் கொள்ளாத ஜோதிடம் மோசடியல்லவா? பொய் அல்லவா?
இனி, ஜோதிடத் தத்துவப்படியே, ஜோதிடக் கணிப்பு சரியா என்பதை ஆராய்வோம்.
பிறந்த நேரம் எது?
பிறந்த நேரத்தை வைத்தே ஜோதிடம் கணிக்கப்படுவதால் ஜோதிடத்திற்கு அடிப்படை பிறந்த நேரமேயாகும். ஆனால், பிறந்த நேரம் எது என்பதில் தெளிவு இருக்கிறதா?
குழந்தைக்கான ‘கரு’ உருவான (பிறந்த) நேரமா? பிறக்கும் குழந்தையின் தலை வெளியில் தெரியும் நேரமா? குழந்தை முழுவதும் வெளியில் வந்த நேரமா? அல்லது தொப்புள் கொடி துண்டிக்கப்பட்டுத் தாயின் தொடர்பு துண்டிக்கப்பட்ட நேரமா? அறுவைச் சிகிச்சையெனில், வயிற்றைப் பிளந்து வெளியே எடுத்த நேரமா? அப்படி பிளந்து எடுப்பது இயற்கைக்கு முரண் என்பதால் அதற்கு ஜாதகம் பொருந்தி வராதே! அப்படிப்பட்ட குழந்தைகள் தானே இன்று அதிகம். அக்குழந்தைகளுக்கு ஜாதகம் கிடையாதா?
குறைப் பிரசவத்தில் (மிஸீநீuதீணீtவீஷீஸீ) கருவியில் வைத்திருக்கிறார்களே அதில் பிறந்த நேரம் எது? தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட நேரமா? அல்லது கருவியை விட்டு வெளியே எடுக்கும் நேரமா?
எது?
லக்கினம் மற்றும் நட்சத்திரக் கணக்கு:
ஜோதிடம் என்பது நேரம், கிழமை, தேதி, மாதம், வருடம், லக்கினம், நட்சத்திரம் ஆகியவற்றைக் கொண்டே கணக்கிடப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட லக்கினத்தில் நட்சத்திரத்-தில் நாட்டில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பிறக்கின்றன.
ஒரு லக்கினத்திற்கு 4லு முதல் 5லு நாழிகை வரை கால அளவு. ஒரு நட்சத்திரத்திற்கு 60 நாழிகை.
உதாரணமாக விருச்சிக லக்கினத்திற்கு 5ரு நாழிகை அதாவது 126 நிமிடம். சுமார் இரண்டு மணி நேரம். அந்த இரண்டு மணி நேரத்தில் நாட்டில் எத்தனை நூறு குழந்தைகள் பிறக்கும். அந்தக் குழந்தைகள் எல்லாவற்றிற்கும் வாழ்வு ஒரே மாதிரியாக அமையுமா? அமைவ-தில்லையே!
அந்த நேரத்தில் பிறந்த ஒரு சில குழந்தைகள் இறந்து, மற்ற குழந்தைகள் உயிருடன் இருந்தாலே ஜோதிடம் பொய்-யென்றாகி விடும் அல்லவா?
முரண்பாடான நம்பிக்கை:
பிறக்கின்ற நேரத்தில், கிரகங்கள் இருக்கின்ற நிலைக்கேற்பத்தான் வாழ்க்கை என்றால், கடவுளுக்கும், விதிக்கும், பூர்வ ஜென்ம பலன்களுக்கும் என்ன வேலை?
பிறந்த நேரக் கிரக நிலைக்கேற்பத்தான் வாழ்வு என்றால், நாம் பிறந்தபோதே நமது வாழ்வு இப்படித்தான் என்று தீர்மானம் ஆகிவிடுகிறது. பிறகு கடவுள் பிரார்த்தனை ஏன்? கணக்கற்ற முயற்சிகள் ஏன்? இவற்றால் அதை மாற்ற முடியுமா?
பிறந்தபோதே நம் வாழ்வு இப்படித்தான் அமையப் போகிறது என்று தீர்மானம் ஆகிவிட்ட பிறகு, ஒவ்வொரு கட்டத்திலும் நேரங்காலம் பார்த்து ஏன் காரியம் செய்ய வேண்டும்? இராகு காலம், எமகண்டம், அஷ்டமி, நவமி இவை ஏன் பார்க்க வேண்டும்?
இவற்றைப் பார்த்து நடந்தால் நமது வாழ்வு மாறி விடுமா? மாறிவிடும் என்றால், பிறந்த நேரத்தின்படி வாழ்வு அமையும் என்ற ஜோதிட நம்பிக்கை தவறாகி விடாதா?
கிரகத்தின் நிலைக்கேற்ப வாழ்வு அமையும் என்றால் விதியை நம்பக் கூடாது; பூர்வ ஜென்ம பலனை நம்பக் கூடாது; கடவுளை நம்பக் கூடாது.
காரணம், கிரக நிலைப்படிதான் வாழ்வு என்றால் கடவுளுக்கு நம் வாழ்வில் என்ன பங்கு? ஒன்றும் இல்லையே!
(தொடரும்…)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக