பக்கங்கள்

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

அறிவியலுக்கும் நடைமுறைக்கும் ஏற்றதா வாஸ்து?

 

மூடநம்பிக்கை : அறிவியலுக்கும் நடைமுறைக்கும் ஏற்றதா வாஸ்து?

2022 மே 16-31 2022

ஒளிமதி

ஆரியப் பார்ப்பனர்கள் சிறுபான்மையினர் என்பதால், பெரும்பான்மை மக்களை அடக்கி, அடிமைப்படுத்தி, ஆதிக்கம் செலுத்த அம்மக்-களின் மூளையில் மூடநம்பிக்கைகளைத் தொடர்ந்து புகுத்தி, மூளைச் சலவை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்படிப் புகுத்தப்பட்ட மூடநம்பிக்கைகளில் ஒன்றுதான் வாஸ்து.
ஆரியப் பார்ப்பனர்கள் புகுத்திய மூடநம்பிக்கைகள், அறிவியல் வளர்ச்சி-யினாலும், அறிவு வளர்ச்சியினாலும் மக்களால் புறக்கணிக்கப்-படும் நிலை வந்ததும், அதைத் தடுத்து, மக்களுக்குத் தொடர்ந்து அவற்றின் மீது நம்பிக்கை இருக்கும்படி செய்ய, அவர்கள் புகுத்திய மூடநம்பிக்கைகளுக்கெல்லாம் அறிவியல் அடிப்படை இருப்பதாக தற்காலத்தில் கூறி வருகின்றனர்.
அவ்வகையில் வாஸ்துவும் அறிவியல் அடிப்படையிலானது. அதுவும் ஓர் அறிவியல்-தான் என்று வாதிடுகின்றனர். எனவே, வாஸ்து அறிவியலா? அது அறிவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்டதா? சில நூற்றாண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட வாஸ்து இன்றைய உலக வளர்ச்சிக்கும், நடைமுறைக்கும் ஏற்றதா? என்பதை இனி ஆராய்வோம்.
அஸ்திவாரம் இல்லாத வாஸ்து:
வாஸ்து சாஸ்திரம் கட்டடக் கலை சார்ந்தது என்கிறார்கள். மேல் கட்டுமானம் பற்றிச் சொல்லுகின்ற வாஸ்து சாஸ்திரத்தில் கட்டடத்தின் மிக முக்கியமான அஸ்திவார அமைப்பு, ஆழங்கள் அமைப்பு பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. அஸ்திவாரம் இல்லாமல் வீடு ஏது? அஸ்திவாரம் இல்லாத கட்டடத்-திற்கு வாஸ்து பூமி பூஜை போடலாமா? கட்டடக் கலை ஒரு முழுமையான அறிவியலாக வளர்ந்துள்ள இந்த நவீன உலகில் வாஸ்துவை நம்பி அஸ்திவாரம் இல்லாமல் பூஜை போட்டுக் காட்டுவார்களா? அஸ்திவாரம் போட்டுக் கட்டப்படும் கட்டடங்கள் அனைத்தும் வாஸ்துவுக்கு எதிரானதுதானே?
வாஸ்து உருவான காலத்தில் அஸ்திவாரம் எடுத்து வீடு கட்டும் முறை இல்லை. பழைய ஊர்களில் பழைய மண்சுவர் வீடுகளுக்கு பெரும்பாலும் அஸ்திவாரம் இருக்காது. மாறாக, அடிப்பாகம் அகன்றும் மேல் பாகம் குறுகியும் இருக்கும்! குறுக்குச் சுவரும் சேர்ந்து இருக்கும். கட்டட அறிவு வளராத காலத்தில் உருவாக்கப்-பட்ட வாஸ்துவை இக்காலத்தில் ஏற்க முடியுமா?

இக்காலத் தேவைகள் வாஸ்துவில் உண்டா?
இன்றைய நவீன காலத் தேவைகளான _ மேல்நிலைத் தொட்டி, கீழ்நிலைத் தொட்டி, செப்டிக் டேங்க், கழிவறை, அடுக்கு மாடிக் கட்டடங்கள், பாலங்கள், அணைகள், மேம்பாலங்கள், பாதாளக் கட்டமைப்புகள், குளிர்பதன அமைப்பு முறை, கட்டடங்களுக்கு வர்ணம் பூசுதல், மின் கட்டமைப்பு ஏற்படுத்துதல், குடிநீர் குழாய்க் கட்டமைப்பு, எரிவாயு கட்டமைப்பு, எதிர் ஒலி கேட்காத உள்ளமைப்பு போன்றவை பற்றி எந்தக் குறிப்பாவது வாஸ்துவில் உண்டா? வாஸ்து உருவான அக்காலச் சூழலில் இத்தகைய தேவைகள் _ வளர்ச்சிகள் இல்லையே!
ஆனால், இன்றைய நவீனத் தேவைகள் அனைத்துக்கும் வாஸ்துப்படி வல்லுநர்கள் வழிகாட்டுகின்றனர். தங்கள் வருமானம் பெருக்க எல்லாவற்றுக்கும் தீர்வும் பரிகாரமும் கூறுகிறார்கள். வாஸ்து வல்லுநர்கள் ஒரே மாதிரி பரிந்துரையும், பரிகாரமும் சொல்வதில்லை. பல வாஸ்து மேதைகளின் பரிந்துரைப்படி வீடுகளின் கட்டமைப்பில் மாற்றங்கள் செய்து செய்து நிலைகுலைந்து போனவர்களின் சோகக் கதைகள்தான் ஏராளம்.
இதிகாசக் காலம் தொட்டு இன்று வரை வாஸ்துவை நம்பி கெட்டுப் போனவர்களின் பட்டியல் சொன்னால், ‘அது விதிப்பயன் யாராலும் அதை தடுக்க முடியாது’ என்று நழுவுகின்றனர். வாஸ்துவைவிட விதி கர்மா தான் வலுவானது என்றால், வாஸ்துவை நாடி ஏன் போக வேண்டும்? வாஸ்துப்படி பரிகாரம் காண முடியும் என்பது ஏமாற்றுதானே! வாஸ்து வழிமுறைகள் நம்மை வாழ வைப்பதில்லை. வாஸ்து, சோதிடர்களை மட்டுமே வாழ வைக்கும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
வாஸ்து, கடவுள் நம்பிக்கைக்கும் விதி நம்பிக்கைக்கும் எதிரானது. கடவுள் அமைத்த விதிப்படி வாழ்க்கை என்றால், வாயிற்படியையும், சன்னலையும் மாற்றினால் வாழ்க்கை மாறும் என்பது கடவுளையும் விதியையும் மறுப்பதாகத்தானே பொருள்? எனவே, கடவுளை நம்புகின்றவன் வாஸ்துவை நம்பக் கூடாது!

தேவைக்கும் வசதிக்கும் ஏற்பவே வீடு வேண்டும்
1. நல்ல காற்றோட்டம்
2. நல்ல சூரிய வெளிச்சம்
3. போதுமான தண்ணீர் வசதி
4. போதுமான கழிவு வெளியேற்றும் வசதி
இவை அடிப்படைத் தேவைகள்.
இன்று காற்றும், நீரும், மண்ணும் மாசுபடுத்தப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் மாசுபடாத நிலைதான் மிக மிக முக்கியம். அத்தகைய இடம் தேடி வீட்டு மனை வாங்குவதும், வீடு கட்டுவதும்தான் அறிவுடைமை. காற்றும், நீரும், மண்ணும் மாசுபடாத சூழலில் நாம் கட்டடம் கட்ட வேண்டும். மாறாக, வாஸ்துப்படியாக என்று நலக்கேடாக வீடு கட்டக் கூடாது.
உலக மயமாக்கல் தாராள மயமாக்கல், தனியார் மயமாக்கல், சிக்கனச் செலவு, வாக்கு அரசியல், ஆடம்பர ஆர்ப்பாட்டம் என்று ஆகிவிட்ட நிலையில், வேலையின்மை, வருவாய் இன்மை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று எத்தனையோ இன்றைய உலகில் எதிர்கொள்ள வேண்டிய நிலையில், அதற்கேற்ப சிந்தித்து தீர்வு கண்டு, நல்வாழ்வை உருவாக்குவதே அறிவுடைமை! மாறாக, வாஸ்து எல்லாவற்றிற்கும் தீர்வு என்று எண்ணுவதும் வாஸ்துவைப் பின்பற்றுவதும் மடமை.
வயிற்று வலிக்கு எது காரணம் என்று கண்டு சிகிச்சை அளிக்க வேண்டும். மாறாக, கட்டிலை மாற்றி போட்டுப் படுப்பதும், தலையணையை மாற்றிப் போட்டுப் படுப்பதும் வயிற்று வலியைத் தீர்க்காது. எனவே, வாஸ்து என்ற மடமையைப் புறந்தள்ளி, அறிவியல் அடிப்படையில் வீடு அமைப்பதே சரியான செயல் ஆகும்.
(தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக