பக்கங்கள்

சனி, 15 ஏப்ரல், 2023

வர்ணாஸ்ரமத்தை வலுப்படுத்தும் வாஸ்து

 

மே 1-15,2022

ஒளிமதி

இதிகாச காலத்தில் வாழ்ந்ததாகச் சொல்லப்படுபவர் மாபெரும் கட்டடக் கலைஞர் மாயா என்பவர். அவர்தான் அந்நாள்களில் வாஸ்துப்படி அரண்மனைகள், மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் கட்டியவர் என்பர். மகாபாரதத்தில் வரும் அஸ்தினாபுரத்தில் அரண்மனையைக் கட்டியவர் அவர்தான் என்று கூறுவர். பாண்டவர்களும், கவுரவர்களும் அமைதியாக _ இன்பமாக வாழ்வதற்காக அரண்மனை கட்டினார். அரண்மனை கட்டி முடித்து பாண்டவர்கள் ஒரு மாதம் கூட அங்கு வாழவில்லை; வனவாசம் சென்றனர். கவுரவர்களாவது வாழ்ந்தார்களா என்றால் அதுவும் இல்லை. குருச்சேத்திர யுத்தம் நடந்தது. அரண்மனையில் வாழ்ந்த அத்தனை கவுரவர்களும் போரில் மாண்டு போனார்கள். வாஸ்து சாஸ்திரப்படி, மாயா கட்டிய மாளிகையில் பாண்டவரும் வாழ முடியவில்லை, கவுரவர்களும் வாழ முடியவில்லை. அயோத்தி மாநகரமும் மாயா உருவாக்கியதுதான் என்பர். அதில் ராமர் பட்டாபிஷேகத்திற்கு என ஒரு மாளிகை கட்டினார். அந்த மாளிகையில் ராமர் ஒரு மணி நேரம்கூட தங்க முடியவில்லை. தம்பி லட்சுமணனுடனும், மனைவி சீதையுடனும் ராமர் 14 ஆண்டு காட்டுக்குச் சென்றுவிட்டார்.

தேவ _ அசுரர்கள் மாயாவை வெறுத்தனர்.  மாபெரும் சிற்பி புகலிடம் தேடி தெற்கே ஓடிவந்தார். விந்திய மலையைத் தாண்டி வந்தார். திரிபுரிகள் என்னும் மூன்று நகர்களைக் கட்டினார் என்கின்றனர். ஆனால், அந்த நகரங்கள் இருந்ததற்கான தடயமே இன்று காணப் படவில்லை. அது மட்டுமல்ல, அவர் மகள்தான் மண்டோதரி. ராவணன் மனைவி. அவனுக்கும் அவர்தான் இலங்கையில் மாபெரும் அரண்மனை கட்டித் தந்தார். அந்த மாவீரன் இராவணனும் தனது ஆள்பெரும் படையோடு தோற்று வீழ்ந்தான், மாண்டான்.

வாஸ்து பயன் தரவில்லை என்பதற்கு இராமாயணமும், மகாபாரதமுமே சான்று.

ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ், இரண்டாவது முறை தேர்தலுக்கு நிற்பதற்கு முன்னால் நிரந்தர முதல்வர் ஆகிவிட எண்ணினார். ஆந்திரத்தில் தலைசிறந்த வாஸ்து மேதையை அழைத்து, முதல்வர் மாளிகைக்குச் செல்லும் பாதையை மாற்றி அமைத்தார். அதற்கு மக்கள் பணம் ரூ. 1 கோடிக்கு மேல் செலவும் ஆனது. அந்தப் பாதை வழியாக மாளிகை சென்ற குடியேறிய ஒரு வாரத்திலேயே முதல்வர் பதவி பறிபோனது. சொந்த மருமகன் சந்திரபாபு நாயுடுவாலேயே பதவியையும் இழந்தார் என்.டி.ராமாராவ்!

பெங்களூரில் மிகப் புகழ் பெற்ற வாஸ்து மேதை பி.என்.ரெட்டி என்பவர், பல அடுக்குமாடி ஒன்றை முற்றிலும் வாஸ்து சாஸ்திரப்படி பல கோடி செலவில் கட்டி முடித்தார். திறப்பு விழா நடப்பதற்கு முன்பே அக்கட்டடம் இடிந்து தரை மட்டம் ஆனது. இந்திய முன்னாள் பிரதமர் தேவகவுடா பிரதமர் ஆன பின்னாலே தொடர்ந்து பதவியில் நீடிக்க விரும்பினார். வாஸ்து மேதைகள் அறிவுரைப்படி வீட்டுப் படியை மாற்றி அமைத்தார். அடுத்த மாதமே அவர் வகித்த பிரதமர் பதவி பறிபோனது.

இன்றைய சமூகத்தின் முதுகெலும்பான _ உழைக்கும் மக்கள் எங்கு மனையிடம் இருக்கின்றதோ, மனைப்பட்டா இலவசமாகக் கிடைக்கின்றதோ அங்கெல்லாம் இரவோடு இரவாகக் குடியேறுகின்றனர். அவர்கள் யாரும் வாஸ்து பார்த்து வீடு அமைப்பதில்லை. என்றாலும், கெட்டழியாது நன்றாகத்தான் வாழ்கிறார்கள்!

வாஸ்து சாஸ்திரம் வர்ணாசிரம தருமத்தை வலியுறுத்த உருவானது; நால்வகை வர்ண அடிப்படையில் மனை இடம் தேர்வு செய்ய நிலத்தை வகைப்படுத்துகின்றது. ஒவ்வொரு வர்ணத்திற்கும் உரிய உத்தமமான நிலம் எது என்று வாஸ்து சாஸ்திரம் பாகுபாடு செய்கின்றது.

வருணத்திற்கேற்ற மனை

வர்ணம்           ஊரில் மனை இடம்

               இருக்க வேண்டிய திசை

ஆரியப் பார்ப்பனர்   –              ஊரின் தெற்கே         

சத்திரியர்       –              ஊரின் மேற்கே

வைசியர்        –              ஊரின் வடக்கே

சூத்திரன்         –              ஊரின் கிழக்கே

மண்ணின் நிறம்

ஆரியப் பார்ப்பனர்   –              பொன்னிற மண்       

சத்திரியர்       –              சிவந்த மண்

வைசியர்        –              பச்சைநிற மண்

சூத்திரன்         –              கருப்புநிற மண்

மண்ணின் சுவை

ஆரியப் பார்ப்பனர்   –              இனிப்பு           

சத்திரியர்       –              காரம்

வைசியர்        –              புளிப்பு

சூத்திரன்         –              கசப்பு

வர்ணத்திற்கேற்ப வாசல்

ஆரியப் பார்ப்பனர்   –              வடக்கு            

சத்திரியர்       –              கிழக்கு

வைசியர்        –              தெற்கு

சூத்திரன்         –              மேற்கு

மேலே குறிப்பிட்டபடி, நால்வர்ணத்தினரும், குறிப்பிட்ட சுவை, நிறம் உடைய மண்ணில் ஊரின் குறிப்பிட்ட திசையில் மனையிடம் தேர்வு செய்து, குறிப்பிட்ட திசை நோக்கி தலைவாசலை வைத்திட வேண்டுமென்கிறது வாஸ்து சாஸ்திரம்.

இது சாஸ்திரமா? சதியா? பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பித்து சமத்துவத்தை ஒழிக்கும் சதியே வாஸ்து!

வாஸ்து சாஸ்திரம் வர்ணாஸ்ரமத்தை நிலைநிறுத்த உருவாக்கப்பட்டது. மக்களைப் பிரித்து ஜாதியக் கட்டமைப்பாக உருவாக்க வாஸ்து ஒரு கருவி.

இன்று எல்லா மக்களிடையேயும் வர்ண வழியும் ஜாதி வழியும் பிரிக்க முடியாதபடி எண்ணற்ற மாற்றங்கள் உருவாகிவிட்டன. ஒரே குடும்பத்தில் புரோகிதர், வணிகர், தொழில் முனைவோர், கருத்தாலும் கரத்தாலும் உழைப்போர் என உருவாகிவிட்ட நிலை. தந்தை புரோகிதர், மகன்களில் ஒருவர் வணிகர், ஒருவர் தொழில் முனைவர், ஒருவர் ஆசிரியர், ஒரு தொழில் பணியாளர் என ஆகிவிட்ட நிலை. ஒரே குடும்பத்தில் பல்வேறு தொழில் சார்ந்த நிலை என்றால் சமூக முழுமையும் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.

அப்படிப்பட்ட, இன்றைய சூழலில் சாஸ்திர அடிப்படையிலான வர்ணாசிரம முறையே,  வழக்கொழிந்து வருகிறது. வர்ணாஸ்ரமமே சட்ட விரோதம். அப்படியிருக்க, வர்ண அடிப்படையில் மனை இடம் தேர்வு செய்வது எப்படி? குடி அமர்த்துவது எப்படி?

சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள ஆரிய பார்ப்பனர்களுக்கும் சத்திரியர்களுக்கும், வலுவான நிலை உள்ள நிலங்கள் _ முறையே பொன்னிறம், சிவப்பு நிறம், பச்சை நிற மனை நிலங்களைத் தேர்வு செய்கின்றனர். ஆனால், உழைக்கிற தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மழைக் காலத்தில் சேரும் சகதியும் உள்ள உவர் நிலம்.

இத்தகைய மனைத் தேர்வு அநீதி அல்லவா? இதற்குப் பெயர் சாஸ்திரமா? நம்புபவர் அறிவுடையவரா? மண்ணின் சுவையில்கூட உயர் வர்ண இன மக்களுக்கு, இனிப்பு, காரம், புளிப்பு என வைத்து கீழ்வர்ண மக்களுக்கு கசப்பு தேர்வு செய்யச் சொல்வது கொடுமை-யிலும் கொடுமை அல்லவா?

ஒரே ஊரில் தெற்கே பொன்னிற மண்ணும், மேற்கே சிவந்த மண்ணும், வடக்கே பச்சை நிற மண்ணும், கிழக்கே கருப்பு நிற மண்ணும் எங்காவது அமையுமா? பெரும்பாலும் ஒரே நிற மண் (அ) இருவகை மண்ணோ தான் இருக்க முடியும். வர்ண அடிப்படையில் மண் தேர்வு என்பது நடைமுறை சாத்தியமில்லாதது.

மனை இடம் அமைப்பு முறை

எங்கே மழை பெய்தாலும் வடகிழக்கு மூலையில் வடிநிலை அமைவதாக இருக்க வேண்டும் என்கின்றனர். இதன் மூலம் மேல் வர்ண மக்களுக்கு எந்த மழை புயல் வந்தாலும் பாதிப்பு இல்லாத இடத்தில் மனை; கீழ் குடிமக்களுக்கு எல்லாத் தொல்லைகளும் ஏற்பட வாய்ப்புள்ள மனை. அநீதியிலும் அநீதியல்லவா?  இப்படிக் கூறும் வாஸ்து ஒரு சாஸ்திரமா?

(தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக