மந்திரம் என்றால் என்ன?
குறிப்பிட்ட சில சொற்களைச் சொன்னால் அதற்குச் சக்தியுண்டு. அது குறிப்பிட்ட சிலவற்றைச் சாதிக்கும் என்பதே மந்திரம் என்று சொல்லப்படுகிறது; நம்பப்படுகிறது.
வார்த்தைகளுக்குச் சக்தியுண்டா?
மொழியென்பதே மிகப் பிற்காலத்தில் மனிதனால் உருவாக்கப்பட்டது. அதற்கு முன் சொற்களும் இல்லை; மொழியும் இல்லை. தான் நினைக்கும் கருத்தைப் பிறருக்குச் சொல்லும் கருவியே வார்த்தைகள் _ அவற்றின் தொகுப்பே மொழி. அப்படியிருக்க அதற்கு எப்படி சக்தி வரும்; அது எப்படி ஒன்றைச் சாதிக்கும்?
நஞ்சு போக்கும் மந்திரம்?
பாம்பு கடித்தால் அல்லது தேள் கொட்டினால் உடலில் நஞ்சு ஏறிவிடும். அதை மந்திரத்தால் இறக்குகிறேன் என்று சிலர் ஏமாற்றுவர். எந்த மந்திரத்தாலும் உடலில் ஏறிய நஞ்சை இறக்க _ அகற்ற முடியாது. முறிவு மருந்தால் மட்டுமே நஞ்சை முறிக்க முடியும். பாம்பு கடித்து நஞ்சு ஏறாமல் மயங்கிக் கிடப்பவனை வேண்டுமானால் மந்திரத்தால் பிழைக்க வைத்தேன் என்று ஏமாற்றலாம். உண்மையில் நஞ்சு ஏறியவனை மந்திரத்தால் காப்பாற்ற இயலாது.
தாயத்து, முடிக்கயிறு:
அதேபோல் செப்புத் தகட்டிலே மந்திரத்தை ஏற்றிவிட்டேன்; முடிக் கயிற்றிலே மந்திரத்தை ஏற்றிவிட்டேன். அதைக் கட்டிக் கொண்டால் நோய் நீங்கும், பேய், பிசாசு அண்டாது, காரியம் வெற்றியாகும் என்று கூறி அவற்றை விற்பனை செய்து சம்பாதிக்கின்றனர்.
வார்த்தைக்கே சக்தியில்லை யென்னும்போது அதைச் செப்புத் தகட்டிலும், முடிக் கயிற்றிலும் ஏற்றியுள்ளேன் என்பது ஏமாற்று வேலையல்லவா? பித்தலாட்டம் அல்லவா?
மந்திரம் ஜெபித்தல்:
அமாவாசையில் பூசை, சுடுகாட்டில் பூசை, பிணத்தின் மீது அமர்ந்து மந்திரம் ஜெபித்தல் என்று கூறி பல பித்தலாட்டங்களைச் செய்கின்றனர். தலைப்பிள்ளை தலையில் மை இருப்பதாய் ஓர் அபாண்டப் புளுகு! எந்தத் தலையிலும் எந்த மையும் கிடையாது. மண்டையுள் மூளை மட்டுமேயுள்ளது.
மந்திர சக்தி?
மந்திரத்தால் மணலைச் சர்க்கரைக்குவேன்! எரித்த ரூபாயை மீண்டும் தருவேன் போன்ற அனைத்தும் பொய்யே! மந்திரத்தால் மணலைச் சர்க்கரையாக்க முடியும் என்றால் சர்க்கரை ஆலைகள் எதற்கு? கரும்பு விவசாயம் எதற்கு? ஒரு மந்திரவாதியை ஆற்றுமணலில் விட்டு, மணலைச் சர்க்கரையாக்கி லாரி லாரியாக வாரிக் கொள்ளலாமே! மந்திரவாதியே சர்க்கரையைக் காசு கொடுத்துத்தானே வாங்குகிறான். சிந்திக்க வேண்டாமா?
எரிந்தவற்றை மந்திரத்தால் மீண்டும் பெறலாம் என்றால் எரிந்த அனைத்தையும் திரும்பப் பெற்று விடலாமே!
இப்படிச் சிந்திக்காததால்தான் மந்திரவாதிகள் மக்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்.
பெரம்பலூரில் பித்தலாட்ட மந்திரவாதி:
அண்மையில் ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டவன் கார்த்திகேயன் என்கிற ராஜாராகவன், வாலிப வயதிலேயே ஏமாற்றுவதைத் தொடங்கிவிட்டான்.
மண்டையோடுகள், பிணங்களை வைத்து, மக்களை அச்சுறுத்தி, ஏமாற்றி ஆயிரக்கணக்கில் சம்பாதித்துள்ளான்.
தன்னிடம் மந்திரசக்தி பெறவந்த நசீமா என்ற பெண்ணை மயக்கி மனைவியாக்கிக் கொண்டான். தன் சுரண்டலுக்கு அரசியல் வாதிகளை துணைக்கு வைத்துக்கொண்டான்.
பிணத்தின் மீதமர்ந்து மந்திரம் ஜெபித்தல்:
இளம்பெண்ணின் பிணத்தின் மீது அமர்ந்து மந்திரம் ஜெபித்தால், மிகப் பெரிய சக்தி கிடைக்கும், பயன் கிடைக்கும் என்று மக்களை ஏமாற்றி ஆயிரக்கணக்கில் பணம் பறித்துள்ளான்.
மயிலாப்பூர் இடுகாட்டில் புதைக்கப்பட்ட இளம்பெண் உடலைப் பணம் கொடுத்து, தோண்டி எடுக்கச் செய்து, அதை வைத்து மந்திரம் ஜெபித்துள்ளனான்.
இவனுக்கு அரசியல் கட்சிப் பிரமுகர்கள், தமிழ் சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாது வடமாநில நடிகைகள் சிலரும் நட்பு ஆகியிருக்கிறார்கள். மேலும் புதுச்சேரி அமைச்சர்கள் மற்றும் அண்டை மாநில அரசியல் பிரமுகர்களோடும் தொடர்பில் இருந்திருக்கிறான். அதற்கு ஆதாரமாக ஒருசில சி.டி.க்கள் சிக்கியிருக்கின்றன. இதுதவிர, ஒருசில நிர்வாண பூஜைகளையும் நடத்தியிருக்கிறான். அது சம்பந்தமான சி.டி.க்களும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
2005 காலகட்டத்தில் 100 ரூபாய் பணமில்லாமல் அலைந்த இவன், சொந்த செல்போன்கூட இல்லாமல், தன்னுடைய நண்பனின் போன் நம்பரைத்தான் பயன்படுத்தியிருக்கிறான். ஆனால், இப்போது, கிட்டத்தட்ட 20-_க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த செல்போன்கள், கார், பல லட்சம் கையிருப்பு என பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருக்கிறான்.
சென்னையில் இருந்து இளம்பெண்ணின் உடலைக் கொண்டு வந்த வினோத்குமார், சைக்காலஜி படித்தவன். ஆவிகளோடு பேசுற ஆர்வத்துல கார்த்திகேயனை குருவா ஏத்துக்கிட்டு, அவன் சொல்றதை செஞ்சிருக்கான். சென்னையிலிந்து கார் மூலம் பிணத்தை பெரம்பலூர் கொண்டு வந்தது ஏன் என்று அவனிடம் நடத்திய விசாரணையின் போது இதே மாவட்டத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சி பிரமுகருக்கு எம்.எல்.ஏ. சீட் கிடைக்க ஏற்கனவே பூஜை நடத்தியதாகவும் அதன்படி எம்.எல்.ஏ. சீட் கிடைத்து வெற்றி பெற்றதாகவும் தற்போது அவர் அமைச்சராவதற்குத்தான் இந்தப் பிணத்தை வைத்து சிறப்புப் பூஜை செய்யத் திட்டமிட்டதாகவும் உண்மையை விளக்கினான்.
-உண்மை இதழ்,1-15.4.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக