நாசா’ விஞ்ஞானிகள் புதிதாக ஏழு கிரங்கங்களைக் கண்டுபிடித்துள்ளனர் என்பது இந்த ஆண்டின் வியக்கத்தகுந்த செய்தியாகும்!
அஷ்டகிரகங்கள், நவக்கிரகங்கள் என்று கூறி மூடநம்பிக்கைச் சேற்றில் புதைந்து திக்குமுக்காடும் திசையறியாத மனிதர்கள் _ பக்தி வியாபாரிகள், ஜோதிடக் கிறுக்கர்கள் இனி என்ன செய்யப் போகிறார்கள்?
புதிதாக இனி பழைய பஞ்சாங்கத்தை வீசி எறிந்துவிட்டுப் புதிய “வியாபாரத்தை’’ “கம்ப்பூட்டர் ஜோசியம்’’ என்று துவக்கி வியாபாரம் செய்வதுபோல் புதிய பெயர் ஒன்றைக் கொடுத்து மூடத்தனத்தை மூலதனமாக்கிப் பிழைக்கப் போகிறார்களா?
மதத்திற்கு நேர் எதிர்முரணான அறிவியலையே தங்கள் வசதிக்கு ஏற்ப திருப்பிக் கொண்ட, “வித்தைக்காரர்கள்’’ அல்லவா இவர்கள்? அவர்களுக்கா சொல்லிக்கொடுக்க வேண்டும்?
நிலவுக்குச் சுற்றுலா அழைத்துப் போக ஆட்தேர்வு நடைபெற்று வரும் செய்தியும் மறுபுறம் வந்து மனித குலத்தைத் திகைக்க வைக்கிறது! இத்தகைய அறிவு வளர்ச்சியான காலகட்டத்தில், நம் நாட்டில் பில்லி, சூன்யம், ஜோதிடம். அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட வாஸ்து சாஸ்திரம், கேரள ஜோதிடர்கள் இத்தியாதி தகவல்களுக்கும் பஞ்சமே இல்லை.
இந்திய அரசியல் சட்டத்தில் (Article 51A), அறிவியல் மனப்பாங்கு, ஏன், எதற்கென்று கேள்வி கேட்டல், மனிதநேயம், சீர்திருத்தச் சிந்தனை வளர்ப்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமை என்று வற்புறுத்தப்பட்டும், அதுபற்றி ஆட்சியாளரும், நீதிமன்றங்களும், சட்ட, நாடாளு மன்றங்களும், கவனத்தில் கொண்டு தடுக்க முன்வருவதே இல்லை!
பற்பல துறைகளில் சட்டத்தை அமல்படுத்த வேண்டிய நேரங்களில், அவைகளே சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தக் காரணிகளாக கைகட்டி, வாய்ப்பொத்தி நிற்கும் அவல நிலை!
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பார்க்காத ஜோசியமா? நாள் நட்சத்திரச் சடங்கில் வேண்டாத கோயில் உண்டா? அவர்களின் அமைச்சர்கள் உட்பட போடாத மொட்டை உண்டா? செய்யாத (அதுவும் அப்போலோ ஆஸ்பத்திரி வாயிலில்) யாகம் உண்டா? தூக்காத பால் குடங்கள் உண்டா? தின்னாத மண் சோறு உண்டா? மஞ்சள் புடவை கட்டி உருளாத தரை உண்டா?
இவ்வளவும் பயன் தந்தனவா? அவர் மரணத்திற்குப் பின்னும் அலங்கோலம் தொடர்கிறதே!
எம்.ஜி.ஆர். உடல்நிலைக் குறைவு ஏற்பட்டவுடன், பிரார்த்தனை மோசடி என்று பேசியது உரையாக பல பதிப்புகள் வந்ததே.
மறைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நலம்பெற்று மீண்டு, நீண்ட காலம் வாழவேண்டும் என்ற நல்லெண்ணமும் விருப்பமும் மற்ற ஆதரவாளர்களைப் போல, நமக்கும் மனிதாபிமான அடிப்படையில் உண்டு.
அதற்காக மருத்துவர்களையும் அதுவும் வெளிநாட்டிலிருந்து தனி சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் டாக்டரையும் வரவழைத்து விட்டு, அப்போலோ மருத்துவமனை முன் யாகம் என்றால் உலகத்தார் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?
வெட்கம் பிடுங்கித் தின்கிறதே! இன்னொரு பக்கத்தில் புதிய புதிய கார்ப்பரேட் சாமியார்கள் “பாபாக்கள்’’ யோகி போன்றவர்களின் பலத்த மோசடி, ஊரார் நிலத்தை வெல்லம்போல் விழுங்குவதைச் சட்டமும் மத்திய அரசும் வேடிக்கைப் பார்க்கும், வேதனைப் பொங்கும் நிலை.
பாபா ராம்தேவ்களும், ரவிசங்கர் என்ற பார்ப்பனரும், நடிகர் திலகத்தை மிஞ்சும் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ அறிவுரை கூறும் ஒப்பனை ஆதியோகி ஈஷா ஜக்கி போன்ற சாமியார்களை ஊக்கப்படுத்தும் பிரதமர் மோடிகளின் ராஜ்ய பரிபாலனம் இங்கே.
உச்சநீதிமன்ற அபராதம், உயர்நீதிமன்ற வழக்கு என்பதைப் பற்றிப் பொருட்படுத்தாமல் ‘உலகமே சிவன் வசம்’ என்று கூறும் பச்சை ஹிந்துமதப் பிரச்சாரம்.
இதற்குப் பெயர் மதச்சார்பற்ற, சோஷலிச, முழு இறையாண்மை பெற்ற குடியரசு ஆட்சியாம்!
என்னே விசித்திரம்? என்று கலையும் இந்த இரட்டை வேடம்?
கி.வீரமணி,
ஆசிரியர் ‘உண்மை’16-31.3.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக