பக்கங்கள்

செவ்வாய், 9 மே, 2017

ஏழு புதிய கிரகங்களும் வக்கிரங்களும்!

நாசா’ விஞ்ஞானிகள் புதிதாக ஏழு கிரங்கங்களைக் கண்டுபிடித்துள்ளனர் என்பது இந்த ஆண்டின் வியக்கத்தகுந்த செய்தியாகும்!

அஷ்டகிரகங்கள், நவக்கிரகங்கள் என்று கூறி மூடநம்பிக்கைச் சேற்றில் புதைந்து திக்குமுக்காடும் திசையறியாத மனிதர்கள் _ பக்தி வியாபாரிகள், ஜோதிடக் கிறுக்கர்கள் இனி என்ன செய்யப் போகிறார்கள்?

புதிதாக இனி பழைய பஞ்சாங்கத்தை வீசி எறிந்துவிட்டுப் புதிய “வியாபாரத்தை’’ “கம்ப்பூட்டர் ஜோசியம்’’ என்று துவக்கி வியாபாரம் செய்வதுபோல் புதிய பெயர் ஒன்றைக் கொடுத்து மூடத்தனத்தை மூலதனமாக்கிப் பிழைக்கப் போகிறார்களா?

மதத்திற்கு நேர் எதிர்முரணான அறிவியலையே தங்கள் வசதிக்கு ஏற்ப திருப்பிக் கொண்ட, “வித்தைக்காரர்கள்’’ அல்லவா இவர்கள்? அவர்களுக்கா சொல்லிக்கொடுக்க வேண்டும்?

நிலவுக்குச் சுற்றுலா அழைத்துப் போக ஆட்தேர்வு நடைபெற்று வரும் செய்தியும் மறுபுறம் வந்து மனித குலத்தைத் திகைக்க வைக்கிறது! இத்தகைய அறிவு வளர்ச்சியான காலகட்டத்தில், நம் நாட்டில் பில்லி, சூன்யம், ஜோதிடம். அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட வாஸ்து சாஸ்திரம், கேரள ஜோதிடர்கள் இத்தியாதி தகவல்களுக்கும் பஞ்சமே இல்லை.

இந்திய அரசியல் சட்டத்தில் (Article 51A), அறிவியல் மனப்பாங்கு, ஏன், எதற்கென்று கேள்வி கேட்டல், மனிதநேயம், சீர்திருத்தச் சிந்தனை வளர்ப்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமை என்று வற்புறுத்தப்பட்டும், அதுபற்றி ஆட்சியாளரும், நீதிமன்றங்களும், சட்ட, நாடாளு மன்றங்களும், கவனத்தில் கொண்டு தடுக்க முன்வருவதே இல்லை!

பற்பல துறைகளில் சட்டத்தை அமல்படுத்த வேண்டிய நேரங்களில், அவைகளே சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தக் காரணிகளாக கைகட்டி, வாய்ப்பொத்தி நிற்கும் அவல நிலை!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பார்க்காத ஜோசியமா? நாள் நட்சத்திரச் சடங்கில் வேண்டாத கோயில் உண்டா? அவர்களின் அமைச்சர்கள் உட்பட போடாத மொட்டை உண்டா? செய்யாத (அதுவும் அப்போலோ ஆஸ்பத்திரி வாயிலில்) யாகம் உண்டா? தூக்காத பால் குடங்கள் உண்டா? தின்னாத மண் சோறு உண்டா? மஞ்சள் புடவை கட்டி உருளாத தரை உண்டா?

இவ்வளவும் பயன் தந்தனவா? அவர் மரணத்திற்குப் பின்னும் அலங்கோலம் தொடர்கிறதே!

எம்.ஜி.ஆர். உடல்நிலைக் குறைவு ஏற்பட்டவுடன், பிரார்த்தனை மோசடி என்று பேசியது உரையாக பல பதிப்புகள் வந்ததே.

மறைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நலம்பெற்று மீண்டு, நீண்ட காலம் வாழவேண்டும் என்ற நல்லெண்ணமும் விருப்பமும் மற்ற ஆதரவாளர்களைப் போல, நமக்கும் மனிதாபிமான அடிப்படையில் உண்டு.

அதற்காக மருத்துவர்களையும் அதுவும் வெளிநாட்டிலிருந்து தனி சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் டாக்டரையும் வரவழைத்து விட்டு, அப்போலோ மருத்துவமனை முன் யாகம் என்றால் உலகத்தார் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?

வெட்கம் பிடுங்கித் தின்கிறதே! இன்னொரு பக்கத்தில் புதிய புதிய கார்ப்பரேட் சாமியார்கள் “பாபாக்கள்’’ யோகி போன்றவர்களின் பலத்த மோசடி, ஊரார் நிலத்தை வெல்லம்போல் விழுங்குவதைச் சட்டமும் மத்திய அரசும் வேடிக்கைப் பார்க்கும், வேதனைப் பொங்கும் நிலை.
பாபா ராம்தேவ்களும், ரவிசங்கர் என்ற பார்ப்பனரும், நடிகர் திலகத்தை மிஞ்சும்  ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ அறிவுரை கூறும் ஒப்பனை ஆதியோகி ஈஷா ஜக்கி போன்ற சாமியார்களை ஊக்கப்படுத்தும் பிரதமர் மோடிகளின் ராஜ்ய பரிபாலனம் இங்கே.

உச்சநீதிமன்ற அபராதம், உயர்நீதிமன்ற வழக்கு என்பதைப் பற்றிப் பொருட்படுத்தாமல்  ‘உலகமே சிவன் வசம்’ என்று கூறும் பச்சை ஹிந்துமதப் பிரச்சாரம்.

இதற்குப் பெயர் மதச்சார்பற்ற, சோஷலிச, முழு இறையாண்மை பெற்ற குடியரசு ஆட்சியாம்!
என்னே விசித்திரம்? என்று கலையும் இந்த இரட்டை வேடம்?

    கி.வீரமணி,
ஆசிரியர் ‘உண்மை’16-31.3.17

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

குருப்பெயர்ச்சியும், குழப்பங்களும்


குரு பகவான் ஒவ்வொரு ராசியிலும் ஓராண்டு காலம் தங்கியிருப்பாராம். 12 ராசிகளையும் அவர் கடந்து வர 12 ஆண்டுகள் ஆகுமாம். குருபகவான் வரும் ஜூன் 13ஆம் தேதி மாலை சரியாக 5.57 மணிக்கு கடகராசிக்கு பெயர்ச்சி ஆகிறாராம். இன்னொரு தினசரி நாளிதழ் அதே தேதியில் மாலை 6.03 மணிக்கு ஷிப்ட் ஆகிறார் என குறிப்பிடுகிறது. திருக்கணித பஞ்சாங்கமோ ஜூன் மாதம் 19ஆம் தேதி தான் குருப்பெயர்ச்சி நடக்கும் என்று கணித்துள்ளதாம். எனவே, குருபகவான் ஷிப்ட் ஆகிறார் என குறிப்பிடுகிறது. திருக்கணித பஞ்சாங்கமோ ஜூன் மாதம் 19ஆம் தேதி தான் குருப்பெயர்ச்சி நடக்கும் என்று கணித்துள்ளதாம். எனவே குருபகவான் ஷிப்ட் ஆகும். தேதியையும், நேரத்தையும் பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப எடுத்துக் கொள்ளலாம் போலிருக்கிறது.
தினமலர் நாளிதழ் குரு பக வானுக்கு தனியாக குரு பயோ டேட்டா வெளியிட்டுள்ளது. இதில் குரு பகவானின் மனைவி தாரை, பிள்ளைகள் பரத்வாஜர், கசன் என்று விவரம் குறிப்பிட்டி ருந்தாலும் பெற்றோர் பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற முக்கிய குறிப்புகள் இடம் பெறவில்லை. பகவான்கள் பயோடேட்டா அரை குறையாகத்தான் இருக்கும் போலி ருக்கிறது. குரு பகவான் பெரும் பாலும் எல்லா ராசியினருக்கும் நன்மைகள் செய்யவே விரும்புவா ராம். கெடு பலன்களை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டா லும் அது நமக்கு படிப்பினையைத் தருவதற்காகத்தான் இருக்குமாம். ஏதோ குரு பகவான் அடுத்த தேர்தலில் நிற்பதற்கு ஆதரவு கேட்பது போல் உள்ளது. மேலும் குரு பகவான் சஞ்சரிக்கும் வீடு குருவிற்கு உச்ச வீடாம். இவர் தங்கிய மற்ற வீடுகள் நிலை என்னவென்று தெரியவில்லை.
தினசரி, வார இதழ்கள் பெரும் பாலானவை ராசி பலன்களையும் அதற்கான பரிகாரங்களையும் வெளியிடுவதில் நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு வெளியிடுகின்றன. ஒரு குறிப்பிட்ட ராசியில் தனக்கு பலன்கள் சரியாக இல்லையே என்று வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால்  அதே நாளில் வெளியாகும் வேறு நாளிதழில் அதே ராசிக்கு சாதகமான பலன்கள் தாராளமாக இருக்கும். ஒரு சில ராசிக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும் என்று குறிப்பிட்டிருக் கும். ஆனால் இன்று இந்த ராசிக்கு வாகன விபத்து உண்டாகும் என்று மட்டும் சொல்வதில்லை. இன்று நாள்தோறும் நடக்கும் வாகன விபத்துகளில் பாதிக்கும், உயிரையும் இழக்கும் நபர்கள் எந்த ராசியிலும் சேராதவர்கள் போலிருக்கிறது.
குருப் பெயர்ச்சிக்கு ஒவ்வொரு ராசிக்கும் உரிய பலன்களைக் குறிப்பிட்டு அலுத்துப் போய் 100-க்கு இவ்வளவு மதிப்பெண்கள் என்று போட ஆரம்பித்து விட் டார்கள். ஒரு நாளிதழில் (தினமலர்) மேச ராசிக்கு 100க்கு 55 மதிப் பெண்கள் தரப்பட்டுள்ளது. அதே மேச ராசிக்கு வேறொரு நாளிதழ் (தினத்தந்தி) 65 மதிப்பெண்கள் வழங்க உள்ளது. எந்த ராசிக்கும் பெயில் மார்க் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  எந்த ராசிக்கு எது சரியான மதிப்பெண் என்பதை சீனியர் சோதிடர் மறு மதிப்பீடு செய்து அறிவிக்க வேண்டுமோ என் னவோ தெரியவில்லை. இவர்கள் வெளியிடும் ராசி பலன்கள் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமா? ஆசியா கண்டத்தில் உள்ளவர்களுக்கா? அல்லது உலக மக்கள் அனைவருக்குமா? என்றெல் லாம் கேட்க முடியாது. ஒபாமா முதல் ஒசாமா பின்லேடன் வரை அனைவருக்கும் பொருந்தும் என்றுகூட குறிப்பிடுவார்கள்.
குறிப்பிட்ட ராசியில் ஏதாவது குறையாக குறிப்பிட்டிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. குறைகளை நிவர்த்தி செய்வதற்கான பரிகாரங்களையும் பக்தர்கள் மனம் நோகாமல் சொல்லி விடுவார்கள். முன்பெல்லாம் பரிகாரம் செய்ய திரு நள்ளாறு சென்று சனி பகவானை வழிபடுங்கள் அல்லது புதுக் கோட்டை மாவட்டம் வேந்தன் பட்டிக்கும், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டிக்கும் செல்லுங் கள் என்பார்கள். ஆனால், முச் சந்தியில் இருக்கும் லோக்கல் சாமி களை பரிகாரத்திற்கு பரிந்துரை செய்ய மாட்டார்கள். முச்சந்தி கோயில்களுக்கு எத்தனை கும்பா பிஷேகம் நடத்தினாலும் பரிகாரம் செய்யும் சக்தி லோக்கல் சாமி களுக்கு குறைவுதான் போலிருக் கிறது. பரிகாரம் செய்தும் பலன் இல்லை என்று பக்தர்கள் கருதி விடக் கூடாது என்பதற்காகவே இப்பொழுதெல்லாம் ஏழைகளுக்கு, முதியோர்களுக்கு, ஊனமுற்றவர் களுக்கு உதவி செய்யுங்கள் என்று சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். குருபகவான் வேறு ராசிக்கு மாறுவதால் இந்த ஆண்டு மழை அதிகரிக்குமா? டெல்டா சாகு படிக்காக இந்த ஆண்டு மேட்டூர் நீர் மட்டம் உயருமா? இந்திய பாகிஸ்தான் பிரச்சினை தீருமா? இலங்கை தமிழர் பிரச்சினையில் இனியாவது முன்னேற்றம் இருக் குமா? குருவின் சாதாரணப் பார் வையில் இவையெல்லாம் சாத்திய மில்லாமல் போனாலும்கூட சோதி டர்கள் குறிப்பிடுகின்ற குருவின் வக்கிரப் பார்வையால் தீவிர வாதிகள் ஒழிந்து விடுவார்களா என்றெல்லாம் கேட்டு விடாதீர்கள். எது எக்கேடு கெட்டாலும் குருவின் பெயர்ச்சி என்று சொல்லி சோதிட வியாபாரிகளும், நாளிதழ்களும் குறி, ஜோதிட மூடநம்பிக்கையை வளர்ப் பதில் குறியாக உள்ளனர்.
- கீழ்வேளூர் வெற்றிச்செல்வன்
-விடுதலை ஞா.ம.,14.6.14

ஆஸ்திரேலியா சென்றுள்ள குருப்பெயர்ச்சி?



நேசனல் ஜியோகிராபிக் என்ற அறிவியல் பத்திரி  கையின் புகைப்படக்கலைஞர் அமித் காம்ளே என்ற இந் தியர் எடுத்த படம்.  இந்த படத்தில் பால்வெளி மண் டலம் தெளிவாகத்தெரிகிறது. நமது புவியின் தென் அட் சரேகைக்கு கீழே இருப்பதால் ஆஸ்திரேலியாப் பகுதி வான வெளியில் அழகிய பால் வெளிமண்டலத்தின் குறுக்கு வெட்டுத்தோற்றம் தான் தெரியும். நிலநடுக்கோட்டிற்கு அரு கில் உள்ள இந்திய வான வெளிபோல் விண்மீன் மண்டலங்கள் தெரியாது. ஆஸ்திரேலியா பழங்குடி யினர் இங்குள்ள வான மண்டல கற்பனை விலங்கு களை (இராசி) படைக்க வில்லை, அவர்கள் வித்தியாச மாக பால்வெளிமண்டல வெளிச்சத்தில் உள்ள எல் லைப்பகுதிகளை ஒன்றி ணைத்து கங்காரு. பிளாடிபஸ் ஈமு போன்ற உருவங்களை கற்பனையில் கண்டனர்.
ஆனால் மெத்தப்படித்து ஆஸ்திரேலியா சென்று பல்வேறு பெரிய பதவிகளில் இருக்கும் படிப்பாளிகளோ ஆஸ்திரேலியா சென்று அங்கேயும் குருப்பெயர்ச்சி விழா கொண்டாடுகிறார்கள். நமது ஊர் வானில் சில விண்மீன் குடும்பத்தில் இருந்து வேறு ஒரு குடும் பத்திற்குச் செல்லும் போது அது குருப்பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி என்று கதைவிட்டு அதில் கூடபணம் பார்ப் பார்கள், ஒரு விண்மீன் குழு மத்தில் உள்ள விண்மீன்கள் ஒவ்வோன்றிற்கும் உள்ள தொலைவு ஆயிரக்கணக்கான ஒளியாண்டுகள் ஆகும் படத்தில் கண்ட இப்படி பல ஆயிரம் ஒளியாண்டுகள் தூரம் உள்ள விண்மீன்கள்  நாம் காணும் போது அருக ருகே  தெரியும் சில வடிவங் களாக நாமே கற்பனை செய்துகொள்கிறோம், இதில் கோள்களுக்கும் இந்த விண்மீன் குழுமங்களுக்கும் முற்றிலும் தொடர்பில்லை. இது பற்றி படித்திருந்தும், வானில் விண்மீன் குழுமமே தெரியாத ஒரு நாட்டிற்கு சென்று அங்கேயும் போய் நான் குருப்பெயர்ச்சி பூசை செய்வேன், சனிப்பெயர்ச்சி பூசை செய்வேன் என்று சொன்னால் அவர்கள் படிப் பிற்கு மரியாதை தருகிறார் களா? அல்லது அவர்களின் படிப்புத்திறமையை மாத்திரம் கொண்டு அவர்களை பணிக்கு அழைத்த ஆஸ்திரேலிய நிறு வனங்களை கேலி செய் கிறார்களா? முழுமையான் சிந்தனை செலுத்தி படித்தவர்கள் இல் லாத மூடநம்பிக்கையை தூக்கிக் கொண்டு சுமக்கமாட்டார்கள்.
-விடுதலை ஞா.ம.,23.8.14

புதன், 11 ஜனவரி, 2017

கிளி சோதிடம்




(டாக்டர் ஆபிரகாம் கோவூர் எழுதிய ‘Begone Godmen’ என்ற நூலிலிருந்து இக்கட்டுரைப் பகுதியை தமிழாக்கித் தருபவர் செல்வமகள்)

1966ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவூர் தன் மனைவியுடன் திருச்சியில் ஒரு முக்கிய சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு சோதிடரின், பெயர்ப் பலகை அவரைக் கவர்ந்தது. வாதத்திற்கு இடம் தருகின்ற இயல்புக்குப் புறம்பான நிகழ்ச்சிகளை ஆராய்ந்து உண்மை தேடுவதில் கோவூர் அக்கறை கொண்டவர்.

எனவே அவர் சோதிடரிடம் சென்றார். அங்கே தாடி வளர்த்த முதியவர் ஒருவர் தரையில் சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தார். அவருடைய மார்பிலெல்லாம் திருநீற்று பூச்சு காணப்பட்டது. அவருடைய நெற்றி யில் நாமம் அவரை ஒரு வைணவர் என்று காட்டியது. அவருக்கு முன் னால் பழைய ஓலைச் சுவடிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அவருக்குப் பக்கத்தில் ஒரு கூண்டில் ஒரு பச்சைக்கிளி இருந்தது. 1,2,3... என்று எழுதப்பட்ட அட்டைகள் நூற்றுக்கணக்கில் அங்கே தரையில் சிதறிக் கிடந்தன.

சோதிடருடன் கோவூர் நீண்ட நேரம் உரையாடினார். சோதிடரின் தொழில் பற்றிய செய்திகள் பலவற் றைத் தெரிந்துகொண்டார். இந்தப் பழைய ஓலைச் சுவடிகள் அனைத்தும் என்னுடைய மூதாதையர் இடமிருந்து எனக்கு வழி வழி உடைமையாக கிடைத்தன. இந்த ஓலைகளுள் சிலவற்றின் ஓரங்களில் ஒடிந்திருக்கின்றன. இவை அனைத்தும் பழங்கால முனிவர்களால் எழுதப் பட்டனவாகும்.

இந்த உலகில் இதற்கு முன்பு பிறந்தவர்கள், இப்பொழுது வாழ்பவர்கள், இனிமேல் பிறக்கப் போகிறவர்கள் ஆகிய அனைவருடைய சோதிடக் குறிப்புகளும் இங்கே என்னிடம் உள்ளன.

இந்த அடுக்கிலுள்ள ஓலைகள் ஒன்றில் உங்களுடைய முந்திய பிறப்பு , இப்போதைய வாழ்வு. இனி வரப்போகும் பிறப்பு ஆகியவற்றைப் பற்றிய சோதிடக் குறிப்புகள் காணப்படலாம். உங்களுடைய பிறந்த நாளைக் கொண்டு அல்லது கிளியின் உதவி கொண்டு உங்களுடைய சோதிடக் குறிப்பைக் கண்டெடுக்கலாம் என்று சோதிடர் கோவூரிடம் கூறினார்.

சிறிது பணம் கொடுத்தால் உங்களுடைய சோதிடக் குறிப்பு உள்ள ஓலையை எடுத்துக் காட்டுகிறேன் என்று சோதிடர் கூறினார்.

கோவூர் ஒரு ரூபாய் கொடுத்தார். சோதிடர் திருப்தி அடையவில்லை. எனினும் எண்கள் எழுதப்பட்ட அட்டைகளின் ஊடே கிளியை திறந்து விட்டார். 37 என்ற எண் உள்ள அட்டையை கிளி தன் அலகில் எடுத்துக் கொண்டு வந்தது.

சோதிடர் அந்த அட்டையை தன் கையில் வாங்கினார். உடனே கிளிக்கு ஒரு நெல் தானியத்தைப் பரிசாகக் கொடுத்தார். (அல்லது) ஒவ்வொரு முறை அட்டை எடுக்கும்போதும் ஒவ்வொரு நெல் கிடைக்கும் என்று கிளிக்கு  உண்டாக்கப்பட்டிருந்த நம்பிக் கையைக் கிளி இழந்துவிடாமல் இருக்கவேண்டும் என்பதற்காகக் கொடுத்தார் என்றும் நாம் சொல்லலாம்.

கிளியை மீண்டும் கூண்டில் அடைத் தார். அட்டையில் இருந்த 37 என்ற எண்ணை பார்த்தார். கோவூரின் சோதிடக் குறிப்பு அடங்கியிருந்த ஓலையை எடுத்தார். கோவூர் அந்த ஓலையை வாங்கிப் பார்த்தார். அது தமிழில் எழுதப்பட்டிருந்தது. கோவூ ருக்குத் தமிழ் வாசிக்கத் தெரியாது. சோதிடர் அதைப் படித்துக் காட்டி விளக்கம் சொல்ல தயாரானார்.

ஆனால் கோவூர் அந்த ஓலையை மீண்டும் பழையபடி ஓலை அடுக்குக்குள் வைத்து விடச் சொல்லி திருப்பித் தந்துவிட்டார். மீண்டும் கோவூர் ஒரு ரூபாய் கொடுத்தார். மறுபடியும் கிளியை திறந்து விடச் சொன்னார். சோதிடர் மீண்டும் திறந்துவிடத் துணியவில்லை.

தயக்கம் காட்டினார். ஆயினும் கோவூர் விடவில்லை. மீண்டும் மீண்டும் வற்புறுத்தி பலவாறு எடுத்துச் சொல்லியும் சோதிடரை இணங்க வைத்துவிட்டார். இந்த தடவை 109 என்ற எண் உள்ள அட்டையைக் கிளி எடுத்து வந்தது!

இப்படியாக திருச்சி சோதிடரின் ஓலை வாசிப்பு வேலை முடிவு பெற்றது!! (சோதிடம் உண்மையாக இருக்குமானால் எத்தனை தடவை எடுத்தாலும் கிளி ஒரே எண் உள்ள அட்டையையே எடுக்க வேண்டும். இங்கே இந்தக் கிளி ஒரே மனிதருக்கு இரண்டு தடவையிலும் வெவ்வேறு அட்டைகளை எடுத்து விட்டது.சோதிடர் பாடு பரிதாபத்திற்குரியதாகி விட்டது.) சோதிடர்கள் அனைவரும் ஏமாற்றுப் பேர்வழிகள் ஆவார்கள்.

இறந்து போனவர், வாழ்கின்றவர், இனி பிறக்க போகின்றவர் ஆகிய அனைவரின் சோதிடக் குறிப்புகளும் - பழங்கால முனிவர்களால் எழுதப்பட்டதாக சொல்லப்படும் சோதிடக் குறிப்புகள் அனைத்தும் - சப்த ரிஷி வாக்கியம் என்று சொல்லப்படுகிற ஓலைகள் அனைத்தும் தம்மிடம் இருப்பதாக சொல்கிறவர்கள் அனைவரும் மோசடியாளர்கள் ஆவார்கள்.

தந்தை பெரியார் பொன்மொழி


தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால் தமிழ் நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும், நாகரிகத்தையும் மறந்தான். தமிழன் தன்னை இந்து என்று கருதியதால் தனது மானத்தையும், ஞானத்தையும், பகுத்தறிவையும், உரிமையையும் இழந்தான்.
-விடுதலை,18.7.14

சனி, 7 ஜனவரி, 2017

தாலியை அறுத்தெறிய வேண்டும்


13-7-1930, குடிஅரசிலிருந்து...
பெண்கள் முன்னேற்றத்தில் கவலை உள்ளவர்கள்  பெண்களைப் படிக்க வைக்கும் முன் இந்தக் கழுத்துக் கயிற்றைத் (தாலியை) அறுத்தெறியும் வேலையையே முக்கியமாய் செய்யவேண்டுமென்று  சொல்லுவேன்.
நிற்க, இதுவரை மணமக்களுக்கு ஆசீர்வாதமோ வாழ்த்தோ  என்பது மண மக்கள் நிறைய அதாவது 16 பிள்ளைகள் பெற்க வேண்டுமென்று சொல்லுவார்கள்.
ஆனால் நான் மணமக்களுக்குச் சொல்லு வதென்ன வென்றால் அவர்கள் தயவு செய்து பிள்ளைகள் பெறக்கூடாது என்பதும், மிக்க அவசியமென்று தோன்றி னால் ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் கூடாது என்றும் அதுவும் இன்னும் அய்ந்து ஆறு வருடம் பொறுத்துத்தான் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளுகின் றேன்.
அன்றியும் அப்படிப் பெறும் குழந்தைகளையும் தாய்மார்கள் குரங்குக் குட்டிகள்போல் சதா தூக்கிக் கொண்டு திரிந்து போகின்ற இடங்களுக் கெல்லாம் அழைத்துப் போய் அழ வைத்துக் கொண்டு கூட்டமும் நடவாமல் தங் களுக்கும் திருப்தியில்லாமல் சபையோருக் கும் வெறுப்புத் தோன்றும் படியாய் செய் யாமல் குழந்தைகளை ஆயம்மாள் வைத்து வளர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
அவைகளுக்கு ஒழுங்கும் அவசிய மான  கட்டுப்பாடும்  பழக்கிக் கொடுக்க வேண்டும்.  இந்தக் கூட்டத்தில் நான் பேசமுடியாதபடி எத்தனைக் குழந்தைகள் அழுகின்றது பாருங்கள். அவற்றின் தாயார் முகங்கள் எவ்வளவு வாட்டத்துடன் வெட்கப்படுகின்றது பாருங்கள்.
அந்தத் தாய்மாரும் தகப்பன்மாரும் இந்தக் கூட்டத்தில் ஒருவரையொருவர் பார்த்து வெறுப்பதைத் தவிர அவர்களுக்கு இங்கு வேறு வேலையே இல்லாமல் இருக்கின்றது. இன்பமும் அன்பும் என்பது சுதந்திரத்தோடு இருக்க வேண்டுமே அல்லாது நிபந்தனையோடும் தனக்கு இஷ்டமில்லாத சவுகரியமில்லாத  கஷ்டத் தைச் சகித்துக் கொண்டு இருப்பதாய் இருக் கவே முடியாது.
ஆகவே இப்போதைய குழந்தை இன்பம் என்பது ஒருக்காலமும் உண்மையான இன்பமாகாது. ஆகையால் அவைகளை மாற்றிவிட வேண்டும். தவிர அதிக நகை போடாமலும் தாலி கட்டாமலும் மூடச் சடங்குகள் இல்லாமலும் மாத்திரம் நடைபெற்ற திருமணம் சுயமரியாதைத் திருமணமாகி விடாது.
பெண்ணின் பெற்றோர் இப்பெண் ணுக்குத் தங்கள் சொத்தில் ஒரு பாகம் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். புருஷர் களைப் போலவே பெண்களுக்கும் சொத் துரிமை உண்டு; தொழில் உரிமை உண்டு, என்கின்ற கொள்கை ஏற்படாவிட்டால் எப்படி அவர்கள் சுயமரியாதை உடைய வர்களாவார்கள்? ஆகையால் அவர் களுக்குச் சொத்துரிமையும் அவசியமான தாகும். தவிர பெண் களுக்கு இப்போது பொது நல சேவை என்னவென்றால் எப்படியாவது ஒவ் வொரு விதவையையும் ஒவ்வொரு புருஷனுடன் வாழச் செய்ய வேண்டும். அதுவே அவர்கள் இப்போது செய்ய வேண்டியது.
தவிர பெண்களும் புருஷர்களைப் போலவே தினமுமோ அல்லது வாரத்திற்கு ஒன்று இரண்டு நாளோ  ஒரு பொது இடத்தில் கூடி மகிழ்ச்சியாய்  பேசி விளை யாட வேண்டும். பத்திரிக்கைகளைப் படிக்க வேண்டும். படிக்காத பெண்களுக்குப் படித்த வர்கள் படித்துக் காட்ட வேண்டும்.
வீட்டு வேலை செய்வதுதான் தங்கள் கடமை என்பதை மறந்து விட வேண்டும். புருஷனுக்குத் தலைவியாய் இருப்பதும் குடும்பத்துக்கு எஜமானியாய் இருப்பதும் தங்கள் கடமை என்று நினைத்து அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டும். இந்த உணர்ச்சியோடேயே பெண்மக்களை வளர்த்து அவர்களுக்குத் தக்க பயிற்சி கொடுக்க வேண்டும்.
-விடுதலை25.11.16

பிறந்தகாலம் என்பதை ஆதாரமாக வைத்து பலன் சொல்ல முடியுமா?



6-7-1930, குடிஅரசிலிருந்து...
பிறந்த காலம் என்பது வயிற்றுக்குள் இருக்கும்போது ஜீவன் (உயிர்) ஏற்பட்ட காலமா? அல்லது வயிற்றிலிருந்து 7, 8, 9, 10 மாதங்களில் எப்பொழுதானாலும் பிறக்கும் காலமா? அப்படி பிறக்கும் காலத்தில் தலை வெளியில் தெரியும் காலமா? அல்லது ஒரு நாள் அரைநாள் அக்குழந்தை கீழே விழாமல் கஷ்டப்படும் காலத்தில் தலை வெளியாகி நிலத்தில் பட்டுக் கால் நிலத்தில் விழாமல் தாய் சரீரத்தில் பட்டுக் கொண்டிருக்கும் காலமா?
அல்லது கால் தலையெல்லாம் மருத்துவச்சிக் கையில் விழுந்த நேரமா? அல்லது மருத்துவச்சி கையிலிருந்து கீழே விழுந்த நேரமா? என்பனவாகிய கேள்விகள் ஒரு புறமிருக்க ஜீவனுடைய சரீரமெல்லாம் பூமியில் விழுந்த நேரம் என்பதாக வைத்துக் கொண்டே பார்ப்போமானாலும் அந்த நேரத்தைச் சரியாக எப்படி கண்டு பிடிக்க முடியும்? என்பதை யோசிப்போம்.
குழந்தை கீழே விழுந்ததும் அது உயிருடனிருக்கிறதா இல்லையா? ஆணா பெண்ணா என்பன போன்றவை களைப் பார்க்க சிறிது நேரமாவது செல்லும். பிறகு அந்த சேதியைக் கொண்டு வந்து வெளியில் இருக்கும் ஆண்களிடம் சொல்ல சிறிது நேரமாவது செல்லும். அந்த சேதியைக் கேட்டவன் நேரத்தைக் குறிக்க அங்கேயே அவனுக்குக் கடிகாரம் வேண்டும்.
அந்தக் கடிகாரம் சரியான மணியா? என்பது தெரிய வேண்டும். கடிகாரமில்லாவிட்டால் வானத்தைப் பார்த்து நேரம் கண்டுபிடிப்பதாயிருந்தால் அதற்குப் பிடிக்கும் நேரம் முதலியவை அல்லது அக்கம் பக்கம் கடிகார நேரம், அதுவுமில்லாவிட்டால் உத்தேச சுமார் நேரம் ஆகியவைகளின் தாமதங்களும் பிசகுகளும் எப்படி நேராமல் இருக்க முடியும்?
இவை ஒரு புறமிருக்க அந்த நேரத்தால் பலன் சொல்லுவதனால் அந்த நேரத்தில் உலகத்தில் பிறக்கும் ஜீவன்கள் எவ்வளவு இருக்கக்கூடும் மற்ற ஜீவன்களை எல்லாம் தள்ளிவிட்டு வெறும் மனித ஜீவனை மாத்திரம் எடுத்துக் கொண்டாலும் உலகத்தில் 170 கோடி மக்கள் இருக்கிறார்கள் என்ற கணக்குப்படி பார்ப் போமானால் சென்னை முதலிய பட்டணங்களில் சாதாரண அனுபவங்களின் படிக்கு உலகத்தில் நாள் ஒன்றுக்கு 2,26,666 (இரண்டு லட்சத்து இருபத்தாறாயிரத்து அறுநூற்று  அறுபத்தாறு) குழந்தைகள் பிறப்பதாக கணக்கு ஏற்படு கின்றது.
(இந்தக் கணக்கானது அய்ந்து லட்சம் ஜனத்தொகை  உள்ள சென்னை நகரத்திற்கு தினம் ஒன்றுக்கு 70  (எழுபது) குழந்தைகள் பிறப்பதாகக் கணக்குப் போடப்பட்டிருக் கின்றது.) இதைத் தவிர கணக்குக்கு வராத விதவைகளின் குழந்தைகள், கல்யாணம் ஆகாத பெண்களின் குழந்தைகள், புருஷன் சமீபத்தில்  இல்லாத ஸ்திரிகளின் குழந்தைகள் ஆகியவைகளைச் சேர்த்தால் இன்னமும் இந்தக் கணக்குக்கு  அதிகமாகும். இது ஒரு புறமிருக்க மேல்படி சாதாரண கணக்குப் படிக்கு பார்த்தாலே ஒரு நாளைக்கு பிறக்கும் குழந்தைகளைப் பங்கிட்டு பார்த்தால் ஒரு நிமிஷத்திற்கு சுமார் 160 குழந்தைகள் வீதம் பிறக்கிறதாக கணக்கு ஏற்படுகிறது.
இதில் 33 கோடி ஜனத்தொகை கொண்ட நமது இந்தியாவுக்கு மாத்திரம் கணக்குப் பார்த்தால் நிமிஷத்திற்கு 33 குழந்தை வீதம்  பிறக்கின்றதாக கணக்கு ஏற்படுகின்றது. ஆகவே இந்த 33 குழந்தை களுக்குமாவது ஜாதகப் பலன் ஒத்து இருக்க முடியுமா? இவைகளுக்குச் சரியான நேரம் கண்டுபிடிக்க முடியுமா? என்பதை யோசிக்க வேண்டும்.
நிமிஷக் கணக்கே இப்படி நிமிஷத்துக்கு 33 குழந் தைகள் பிறப்பதாயிருக்கும் போது ஒரு சோதிடம் சொல்லுவதற்குப் போதுமான காலமாகிய ஒரு லக்கினம் நட்சத்திரம் ஆகியவைகளின் காலத்திற்குள் எத்தனை குழந்தைகள் பிறக்கக்கூடும்? என்பதைப் பார்த்தால் இது சிறிதும் பொருத்த மற்றதென்பதாகவே காணலாம்.
-விடுதலை,25.11.16

சனி, 31 டிசம்பர், 2016

ஜோதிடம் புரியாத புதிரா?

நான் பெரும்பாலும் புத்தகங்களைப் படிப்பவன், நான் ஒரு புத்தக வியாபாரி. புத்தகங்களைப் படித்து, புரிந்து, அதை விமர்சனம் செய்பவன்.

சமீபத்தில் நடிகர் ராஜேஷ் எழுதிய ஜோதிடம் புரியாத புதிர் என்ற புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது.

ஒரு இடதுசாரி சிந்தனை உள்ளவர், மார்க்சியத்தில் பரிச்சயம், பெரியாரை நேசித்தவர். இயற்கையின் செயல்பாடு களைப் பேசக் கூடியவர் அப்படிப்பட்ட ஒருவர்  சோதிட கலையை ஓர் ஆய்வு செய்து, மக்கள் ஜோதிடத்தை நம்பக்கூடிய அளவில் எழுதியுள்ளார்.

யார் யாரையோ துணைக்கு அழைத்துள்ளார் மார்க்சியவாதிகளைக் கூட விட்டு வைக்கவில்லை. சொந்த வாழ்க்கையில் நடந்ததாக கூறி அத்த னையையும் நம்பும் ராஜேஷ் எல் லோரையும் நம்பச் சொல்கிறார்.

ஒரு கட்டுரை எழுதிவிட்டு கடைசியில் பல கேள்வி போட்டு விக்கிரமாதித்தன் கதையில் வேதாளத்தை சுமந்து செல்லும் விக்கிரமாதித்தன் நிலையில் ராஜேஷ் உள்ளார். அது கூட கதையில் ஒரு கருத்து இருந்தது.

அவர்கள் எழுதியதை கலைஞானம் என்பவர் ராஜேஷ் சோதிடக் கலையை உயர்த்தி வருகிறார் என்று பாராட்டி யுள்ளார்.

எனக்கு தெரிந்த ஒரு மார்க்சியவாதி, பெரியாரின் கொள்கையில் இளம் வயதில் வாழ்நாளைக் கழித்து ஆசிரியராகப் பரிணமித்து, குறிப்பிட்ட காலத்தில் சோதிடம் பார்க்கும் தொழிலைத் தேர்வு செய்து வாழ்கின்றார். சங்கரன் கோவில் அருகே குருவிகுளம் அதன் அருகே ராமலிங்காபுரம் கிராமத்தில் ஓகோ என்று தொழில் ஓடுகிறது.

சோதிடம் பார்க்க வருபவர்களிடம் ஏன் இங்கு வருகிறீர்கள். நாடு எப்படி உருப்படும் என்ற வார்த்தைகளால் அர்ச் சனை செய்து ஜோதிடத்தை சொல்லு கிறார். அவர் பெயர் தேவதாசன்.

எப்படி சப்தம் போட்டாலும் நீங்கள் சொல்வது எங்களுக்கு நடக்கிறது என்று சொல்லி மக்கள் பெருமையோடு பேசுகிறார்கள்.

தேவதாசன் சார் இளவயதில் பெரியார் கொள்கையில் ஈர்த்து பல எதிர்ப்புகளில் வாழ்ந்த ஓர் மாமனிதர். யாரிடமும் ஜோதி டம் பாருங்கள் என்று கூறியதில்லை. வந்த மக்களை நம்பிக்கையோடு தேற்றி அனுப் புகிறேன் என்று சிரித்துக் கொண்டே சொல்வார்.

இதைக்கூட தொலைபேசியில் அனு மதி பெற்றுத்தான் எழுதுகிறேன், வாழ்த் துக்கள் கூறினார். கஷ்டமான வாழ்வு தொடங்கும் போது மக்கள் ஜோதிடத்தை நம்புவதும், குருவி ஜோசியத்தை நம்புவதும், இரவு நேரங்களில் குறி சொல்லும் கோடாங்கி காரர்கள் கையில் பிரம்பு வைத்துக் கொண்டும் குறி சொல்வதை நம்புவதும் அதை தொழில் செய்பவர்கள் பரிகாரம் என்ற பெயரில் பல ரூபாய்களை பிடுங்கிச் செல்வதும் வாடிக்கை.

ஊருக்கு ஜோதிடம் சொல்லும் மக் களுக்கு அவர்களை பிழைப்பு நிலையை யோசிப்பதில்லை. அதைக் கேட்டால் முன் செய்த பலனால் இந்த நிலை என்று கூறி அதற்கு ஓர் காரணம்.

நாடித்துடிப்பை வைத்து மருத்துவம் பார்த்த வைத்தியம் தான் சிறப்பாக இருந்தது. அது நாடி துடிப்பை வைத்துக் கூட கணக்கிடலாம்.

பிறந்த தேதி, நேரம் என்பதை துல்லியமாக சொல்ல முடியாது. குழந்தை தாய் வயிற்றிலிருந்து பூமியில் விழும் போது அந்த பரபரப்பில் நேரம் சரியாக கணிக்க முடியாது. டாக்டர்கள் கூட 5 நிமிடம் 10 நிமிடம் கழித்துத் தான் சொல்வார்கள்.

இதை எப்படி சோதிடமாக ஏற்றுக் கொள்ள முடியுமா? நடிகர் ராஜேஷ் நடிகராகவே இருந்திருக்கலாம். இந்த ஆய்வுக்குள் வந்தது யாரைக் காப்பாற்ற என்று தெரியவில்லை.

பிராமணர்கள் மந்திரம் என்ற பெயரில் எல்லா மக்களையும் ஏமாற்றுகிறார்கள். அவர்கள் வலிய வந்து என்னை அழையுங்கள் என்று கூறவில்லை.

எவ்வளவு படித்திருந்தாலும் கல் யாணம், இழவு, கும்பாபிசேகம், இறந்த தாய், தகப்பனார்களை மேலோகம் அனுப்ப எவ்வளவு பணம் கொடுத்து அனுப்புகிறார்கள்! உலகத்தில் 90% மூட நம்பிக்கையில் உழன்று வாழ்வதைக் காணுகின்றோம்.

ஒரு பாடல் உண்டு

தலையெழுத்து, தலைஎழுத்து என்று சொல்லி தத்தளிக்கிறார்,
கடும் உழைப்பைக் கூட தலைவிதி என எண்ணி
செயல் படுகின்ற மாமேதைகளைப் பற்றி என்ன சொல்வது?
ராஜேஷ் முன்னுரையில் ஒன்னுமே புரியலே உலகத்திலே
என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது என்று கவிஞர் சந்தானத்தின் பாடலை நினைவு கூர்கிறார்.

அதை சந்திரபாபு பாடியுள்ளார்.

இது ஓர் படத்தின் சூழ்நிலைக்கு கவிஞர் எழுதியுள்ளார். இதுவே நிஜமாக ஆகிவிடுமா?

பட்டுக்கோட்டையார் எழுதிய பாடலை விதியை எண்ணி வீழ்ந்து கிடக்கும் வீணர் எல்லாம் மாறணும் வேலை செஞ்சா உயர்வோம் என்ற விபரம் மண்டையில் ஏறனும் இது அவர் வாழ்க்கையில் ஒத்துவரவில்லை என்று எழுதியுள்ளார்.

நல்ல பொழுதை எல்லாம் தூங்கிக் கழித்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்

என்ற பாடல் வரிகள் இன்றும் மக்கள் மனதில் பதிந்து விட்ட பாடல்.

இப்படி எழுதியவர் 29ஆம் வயதிலே ஏன் மறைந்தார்? விதியின் அடிப் படையிலா என்று எழுதியதைப் பார்த்து தான் குருட்டு தனமாக நம்பினால் எல் லோரும் நம்ப வேண்டும் என்ற பிற் போக்கான சிந்தனை தவிர, உயர்ந்த சிந்தனை இல்லை.

என் வாழ்க்கையில் நடந்த ஓர் நிகழ்வைக் கூறுகிறேன். என் கல்யாணத் திற்கு பெண் பார்க்கையில் ஜோதிடம் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள்.  ஓர் தீவிரமான பொதுவுடைமையாள னாகிய நான் மறுத்து விடவில்லை.

கடைசியில் நானும் எனது மைத்துனர் ராமச்சந்திரனும் ஊரின் அருகிலுள்ள சேர்ந்த மரத்தில் பார்க்கச் சென்றோம்.

சோதிடர் பலனைப் பார்த்து ஐந்து பொருத்தந்தான். சரி; இது பொருத்த மில்லை என்று கூறிவிட்டார்.

நானும் என் மைத்துனரும் ஆலோ சித்து வீட்டில் போய் எட்டுப் பொருத்தம் என்று பொய் சொல்வோம் என்று பேசி, சொல்லி கல்யாணம் நடைபெற்றது. சிறிது காலம் என் நடைமுறையில் சில கஷ்டம். நான் மக்கள் பணிக்காக சிறை சென்றேன்.

குறிப்பிட்ட சில காலத்திற்கு பிறகு நான் வாழ்க் கையைப் புரிந்து நல்ல பிள்ளைகள், நல்ல மனைவி, நல்ல மருமக்கள்மார், நல்ல பேரப்பிள்ளைகள், என் மாதி கொடுத்து வைத்தவன் யாரும் இல்லை என்பது போல  வாழ்கிறேன். நான் சைக்கிளில் சென்று 73 வயதில் சுமார் 80 கிலோ மீட்டலிரிந்து 120 கிலோ மீட்டர் பயணம் செய்து சாதனை புரிகிறேன்.

திணமனி, தி இந்து, சிவப்பு சட்டைத் தாத்தா, புத்தகத் தாத்தா என்று பாராட்டு கிறது.

மானமிகு தமிழர் தலைவர் கி.வீரமணி கையினால்  ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் புத்தக விழாவில் புத்தகர் விருது அதிலும் மூன்று பொதுவுடைமைத் தோழர்கள் வாங்கியுள்ளோம். நான் பிறந்த பலனை அனுபவிக்கின்றேன். ஜாதி இல்லை, கடவுள் இல்லை என்று பள்ளி களில் பிள்ளைகளிடம் உரக்க கூறுகிறேன்.

மாதா, பிதா, குரு தான் தெய்வம் என்று பள்ளி பிஞ்சு உள்ளங்களில் கூறி வருகின்றேன்.

உலகத்தில் எந்த விதமான கவலை இல்லாமல் சைக்கிளில் பவனி வருகின் றேன். உடலில் நோயும் இல்லை. மன நிம்மதி, பல புத்தகங்களைப் படிக்கின் றேன் பகுத்தறிவுவாதியாக வாழ் கின்றேன்.

என்னை மனிதனாக்கியது மார்க்சியம்

சிந்திக்க வைத்தது திருக்குறள்

ஜாதி, மதம், கடவுள் இல்லை என்று பெரியாரிசம் சொல்ல வைக்கிறது.

நல்லவர்களைக் தொடுங்கள்! நல்ல பலன் கிடைக்கும்

ஜீவாவை தொட்டேன் எல்லோராலும் பாராட்டப் படுகின்றேன்.

உறுதியான லட்சியம், மன தைரியம் தான் வாழ்வதற்கு ஓர் மா மருந்து, எடுத்த முடிவில் பின் வாங்கக்கூடாது. நல்ல முடிவாக இருக்க வேண்டும். கடவுளை நம்புகிறவர்கள் நிம்மதியாக இருந்ததாக சரித்திரம் இல்லை. நம்பாத நான் திருப்தியாக இருக்கிறேன். யாருக்கும் வஞ்சகம், துரோகம் எண்ணாத என்னை கடவுள் என்று இருந்தால் என்னை நேசிப்பாரே தவிர, என்னைச் சோதிக்க மாட்டார்.

- தோழர் இரா.சண்முகவேல்
நெல்லை மாவட்டம் - 627860

-விடுதலை,31.5.14