பக்கங்கள்

திங்கள், 20 ஜூலை, 2015

ராசியும் வானியலும்


ஜோதிடத்தில் தலையாய பங்குவகிப்பது இராசி அல்லது இராசிச் சக்கரமாகும். இந்த இராசி என்பது என்ன? இதற்கும் வானியலுக்கும் என்ன தொடர்பு? இதனை முதலில் விளங்கிக் கொண்டால் ஜோதிடத்தினை அறிவியல்பூர்வமாக விளங்கிக் கொண்டால் ஜோதிடத்தினை அறிவியல்பூர்வமாக விளங்கிக்கொள்ள ஏதுவாகும். இரவு வானில் விண்மீன்கள் ஜொலிப்பதைக் கண்டு களித்திருப்பீர்கள். சற்றுக் கவனமாக நோக்கினால், விண்மீன்களும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகர்வது போன்று தோற்றமளிப்பதைக் காணலாம். மெய்யாக, பூமி சூழல்வதால்தான் இத்தோற்றம் ஏற்படுகிறது.
மேலும், சலியாது பலநாள்கள் வானத்தை உற்று நோக்கினால் சில விண்மீன்கள் மட்டும் ஏனைய விண்மீன்களிலிருந்து வேறுபட்டுத் தோற்றமளிப்பதைக் காணலாம். மேலும் விண்மீன்களின் பின்புலத்தில் இந்தக் குறிப்பிட்ட சில மட்டும் சலனிப்பதைக் காணலாம். இவைதான் கோள்கள். கிரகம் என்று வடமொழியிலும் பிளானட் என்று கிரேக்க மொழியிலும் வழங்கப்படுகிறது. பிளானட் என்றால் அலைபவன் என்று பொருள்.
விண்மீன்களை உற்றுநோக்கினால் வேறு சில தோற்றங்களையும் காணலாம். சிலசமயம் வானில் புலப்படும் முகில்களில் யானை, குதிரை என பல உருவங்கள் தென்படுவது போன்று, விண்மீன்கள் இடையே சில உருவங்களைக் கற்பனை செய்ய முடியும். சில வார இதழ்களில் புள்ளிகளை இணைத்து மறைந்துள்ள உருவங்களைக் கண்டுபிடி எனக் கூறுவதுபோல, விண்மீன் சிலவற்றை இணைத்துப் பார்த்தால் சில உருவங்களைக் காணலாம்.
இவ்வாறுதான் கரடி, நாய், மீன், மனிதத் தலை, குதிரை, வேடுவன், எருது எனப் பல உருவங்களை நமது முன்னோர்கள் கற்பனை செய்துள்ளனர். இவைகளை விண்மீன் தொகுப்பு எனக் கூறலாம். இவை கற்பனைதானே தவிர, மெய்யாக இரவு வானில் உள்ள பொருள்கள் அல்ல. கோள்கள், விண்மீன்கள் தவிர வானத்தில் காட்சி தருபவை சூரியனும் சந்திரனும்தான்.
பூமி கோள வடிவில் உள்ளதால் பூகோளம் என்கிறோம். பார்வைக்கு இரவு வான் நம் தலைமீது கவிழ்த்து வைக்கப்பட்ட தேங்காய் மூடி போன்று உள்ளது அல்லவா? கற்பனையாக இரவு வானின் தேங்காய் மூடி உருவை முழுமையாக்கினால், ஒரு பெரும் கோளம் கற்பனை செய்யலாம் அல்லவா? இதைத்தான் வான்கோளம் என்கிறோம். அதாவது, ஒரு மிக மிகப்பெரிய கோளத்தில் விண்மீன்கள் பதிந்துள்ளன எனவும், இந்தக் கோளத்தின் மய்யத்தில் சிறு எலுமிச்சைப் பழம்போல் பூமி கோளமாய் இருக்கிறது என்றும் கற்பனை செய்யலாம் அல்லவா? இவ்வாறுதான் நமது முன்னோர்களும் கற்பனை செய்தனர். இதனை, பூகோளம் என்றழைத்தனர்.
வான்கோளத்திற்கும், பூமிக்கும் இடையே கோள்கள் பூமியைச் சுற்றி வலம் வருவதாகவும் புனைவு செய்தனர். சூரியன் ஒரு நாளில் பூமியைச் சுற்றுவதால் இதனை முதல்கோள் எனவும், அதற்கு மேலே சந்திரன் என கோள்களை வரிசைப்படுத்தினர்.
சூரியன் பூமியைச் சுற்றும் பாதைக்கு, பூமியின் அச்சு 23லு பாகை சாய்வாக உள்ளது. ஆகவே, பூமியின் வட, தென் முனைகளுக்கு நேரே வான்கோள வட, தென் முனைகள் அமையாது, 23லு பாகை சாய்வாக வான்கோளத்தின் மத்திய ரேகை அமையும். வான்கோளத்தில் சூரியன் வலம் வரும் பாதை சூரிய வீதி என்றழைக்கப்படுகிறது. சூரியவீதியின் சிறப்பு என்னவெனில், கோள்கள் அனைத்தும் மற்றும் நிலவும் சூரிய வீதியைச் சார்ந்தே வான்கோளத்தில் சலனிக்கும். சூரியவீதிக்கு 80 இரண்டு பக்கமும் உள்ள பகுதியில் மட்டுமே கோள்கள் பாயும். சூரியவீதியின் இருபுறமும் 80 உள்ள வான்கோளம் பகுதியே ராசி என்று அழைக்கப்படுகிறது. வான் கோளத்தின் மத்தியப் பகுதியில் 160 அகலத்தில் 3600 வட்டமாக ராசி உள்ளது.
இந்த ராசியை 12 சம பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதியில் உள்ள விண்மீன்களைக் கற்பனையாக, சில உருவங்களைப் புனைவு செய்தனர் நமது முன்னோர். மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்ன 12 ராசிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் பூமி (1) வான்கோளத்தில் உள்ள மேஷ ராசிக்கு நேராய் உள்ளது. ஆகவே, சூரியனிலி ருந்து யாராவது பூமியைப் பார்த்தால், பூமி மேஷ ராசியில் உள்ளது போன்று தோன்றும். ஆனால், பூமியிலிருந்து பார்ப்பவருக்கு, சூரியன் துலாம் ராசி யில் உள்ளது போன்று தோன்றும். வானியலில், இதை, சூரியன் துலாமில் இருப்பதாகக் கூறுவோம்.
ஆனால், பூமி (2) என்ற இடத்தில் பூமி தனது சுற்றுப்பாதையில் அமைத்தால், சூரியனிலிருந்து பார்ப்பவருக்கு பூமி மிதுனத்திலும், பூமியிலிருந்து பார்ப்பவருக்கு சூரியன் தனுசுவிலும் உள்ளது போன்று தோன்றும்.
ஆக உள்ளபடியே ராசிகளையும், விண்மீன் தொகுப்பு (Constellations) களை நமது முன்னோர் வடிவமைத்தது, இரவு வானின் நிகழ்வுகளைச் சுட்டுவதற்குத்தான். காலப்போக்கில் இந்த உருவங்கள் தான் புராணங்கள் உருவாகி புனைவுகள் புரட்டுகள் நிலைகொண்டிருக்கும் எனக் கருதலாம். சந்திரன் இன்று இரவு எங்கே இருக்கும் என்று எப்படி விவரிப்பது. பூமியின் சூழற்சியால் சந்திரன் மேற்கு முகமாக மெல்ல மெல்ல ஒவ்வொரு நொடியும் நகரும் அல்லவா? இச்சூழலில் எப்படி விவரிப்பது. இங்குதான் ராசிகள் உதவுகின்றன. இன்று கடக ராசியில் சந்திரன் இருக்கும் என்றால் மிகத் தெளிவாக அனைவரும் விளங்கிக்கொள்ள முடியும். கடக ராசி மேற்குமுகமாக நகர்ந்தாலும் அத்துடன் சந்திரனும் இணைவாக நகரும் அல்லவா? ஆகவே விண்மீன் தொகுப்புகள் வானவியலில் கற்பனைப் பிரதேசங்கள், வான் நிகழ்வுகளை எளிதில் சுட்ட உபயோகமானவையாகத் திகழ்கின்றன. கோள்களும், சந்திர சூரியனும் ராசி மண்டலத்தில்தான் சலனிப்பவை என்பதால் விண்மீன் தொகுப்புகளிலேயே மிக முக்கியத்துவம் பெற்றதாக ராசி மண்டலமும், அதன் 12 விண்மீன் தொகுப்பும் (ராசிகளும்) திகழ்கின்றன.
உத்ராயணம் தட்சணாயனம் என்றால் என்ன?
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 ஆம் தேதி சூரியன் மேஷ ராசியில் இருக்கும். ஜூன் 21ஆம் தேதி கடக ராசியிலும், செப்டம்பர் 23 ஆம் தேதி துலாம் ராசியையும், டிசம்பர் 22 ஆம் தேதி மகர ராசியிலும் அமையும். மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23ஆம் தேதி ஆகிய இரண்டு நாள்களில் இரவு பகல் பூமி முழுவதும் சரிசமமாக இருக்கும். இந்த இரண்டு நாள்களை, சம இரவு நாள்கள் எனவும் இந்நாள்களில் வான்கோளத்தில் சூரியன் அமையும் புள்ளிகளை, சம இரவுப் புள்ளிகள் எனவும் அழைப்பர்.
மார்ச் 21ஆம் தேதிக்குப் பிறகு சூரியன் மேஷத்திலிருந்து கடகம் நோக்கி நகரும். பூமி 23லு பாகை சாய்வாக இருப்பதால், சூரிய ஒளி பூமியின் வடகோளத்தில் அதிகமாயும் தென் கோளத்தில் குறைவாகவும் விழும். வடகோளத்தில் கோடை; தென் கோளத்தில் குளிர் நிலையைப் பூமியில் தோற்றுவிக்கும். இச்சமயத்தில் நமது பார்வைக்கு, சூரியன் நேர் கிழக்காக உதிக்காது. சூரிய உதயப் புள்ளி மெல்ல மெல்ல வடக்கு நோக்கி நகரும். இச் சமயத்தில் வடகோளத்தில் உள்ளவர் களுக்குப் பகல் பொழுது நீளும். ஜூன் 21 ஆம் தேதி சூரிய உதய விலகல் வடக்கு நோக்கி உச்சத்தை அடையும். மறுபடி சூரிய உதய விலகல் வடக்கு நோக்கி உச்சத்தை அடையும். மறுபடி சூரிய உதயப் புள்ளி தெற்குநோக்கி நகரத் தொடங்கும். செப். 23 அன்று மறுபடி சமஇரவு. அன்று மார்ச் 21ஆம் தேதி உதித்தது போல, சூரியன் நேர்கிழக்கில் உதிக்கும். செப். 23 முதல் டிச. 22 வரை சூரிய உதயப்புள்ளி தெற்கு நோக்கி நகரும். டிச. 22 அன்று, உச்ச கட்டத் தெற்குப் புள்ளியில் சூரிய உதயம் அமையும். டிச. 23 முதல் சூரியன் வடக்கு நோக்கி நகரும். மறுபடி மார்ச் 21 சம இரவு நாள். அன்று நேர் கிழக் காக சூரிய உதயம் அமையும்.
அதாவது டிச. 23 முதல் ஜூன் 21 வரை சூரிய உதயப் புள்ளி வடக்கு முகமாகவும், ஜூன் 22முதல் டிச. 22 வரை தெற்குநோக்கியும் அமையும். ஆகவே, இதனைக் குறிக்க முன்னதை உத்தராயணம் எனவும் பின்னதைத் தட்சணாயனம் என்று அழைப்பர். ஆக மகரம் முதல் கடகம் வரை சூரியப் பெயர்ச்சி உத்தராயணம். சிம்மம் முதல் மறுப்பு கடகராசியை அடைவது தட்சணாயனம்.
ராசிகள் உருவானது எங்கே?
இந்திய ஜோதிடத்திலும் வானவியலிலும் பயன்படுத்தப்படும் ராசி எனும் கருத்தும், 12 ராசிகளின் பெயர்களும் பெரும்பாலும் கிரேக்க பாபிலோனியக் கொள்கைகளுக்கு ஒப்பாக இருப்பது வியப்பான சிறப்புச் செய்தி ஆகும்.
வராகமிகிரர் தனது பிரஹத் சம்ஹிதையில் கிரேக்க ஜோதிடர்கள் குறித்துக் (யவனர், மிலேச்சர் என குறிப்பிட்டு) கூறுகிறார். மேலும், பிரஹக் ஜாதகம் எனும் நூலில் ராசிகளின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. சிதம்பர அய்யர் இந்நூலினைக் குறித்துக் கூறும்போது, கிரேக்கர்கள் இந்தியர்களிடையே நீண்டகாலத் தொடர்பு இருந்திருக்க வேண்டும் எனக் கூறுவதும் கவனிக்கத்தக்கது. அதுபோன்றே வராகமிகிரர் பயன்படுத்தும் சில கலைச் சொற்கள் கிரேக்க மொழியின் திரிபு என பாலசந்திரராவ் சுட்டிக்காட்டுகிறார். மேலும், வானியல் நூல்கள் ஆசிரியர்கள் குறித்துக் கூறும்போது, பவுலிஸ், ரோமசு சித்தாந்தங்கள் எனவும் சுட்டப்படுகின்றன. பவுலிஸ் என்பது பவுலஸ் அலெக்ஸாண்டிரனஸ் என்பர் எனவும் ரோமசு என்பது ரோமபுரியைக் குறிப்பது எனவும் கூறப்படுகிறது. ஆக வானவியல் கருத்துகள் பரவியதுபோல ஜோதிடக் கருத்துகளும் இங்கும் அங்கும் உலகம் முழுவதும் பரவியிருக்கக்கூடும் என துணியலாம்.
2.8.2000 அன்று மாலை சுமார் 4 மணி அளவில் திருநள்ளாறு சனி பகவான் ஆலயத்தில் சுமார் 4 லட்சம் பக்தர்கள் கூடினர். அந்நகரமே அல்லோலப் பட்டது. அன்று சனி பகவான், அதுவரை தான் குடியிருந்த மேஷ ராசியை விட்டு அகன்று ரிஷபராசிக்கு மாறியதே இதற்குக் காரணம்.
சனிக்கோள் சூரியனை ஒரு முறை சுற்ற சுமார் 36 ஆண்டுகள் எடுக்கும். ஆகவே, 12 ராசிகள் உள்ள சூரியவீதியில் சனி ஒவ்வொரு ராசியிலும் சுமார் 2.5 ஆண்டுகள், காணப்படும். இதனைத்தான், அந்த ராசியை, சனி பிடித்துள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. இரண்டரை ஆண்டுகள் கழித்து, சனி அந்த ராசியிலிருந்து விலகி அடுத்த ராசிக்கு மாறும். இதனைத்தான் சனிப்பெயர்ச்சி எனக் கூறுகிறார்கள்.
ஆகஸ்ட் 2000த்தில் மேஷ ராசிக்காரருக்கு சனி விலக ஆரம்பித்து விட்டதாகவும், ரிஷப ராசிக்காரரை சனி பிடித்து விட்டதாகவும் அதற்கடுத்துள்ள மிதுன ராசிக்காரருக்கு சனியின் பார்வை படியத் தொடங்கிவிட்டதாகவும் ஜோதிடம் கூறுகிறது. இதுதான் 7லு நாட்டுச் சனியின் பின்புலமுள்ள கருத்து. (புரட்டு)
சனி மட்டுமல்ல, எல்லாக் கோள்களுமே சூரியனைச் சுற்றுவதால் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகரும். சந்திரன் இரண்டே கால் நாளும், இராகு, கேது ஒன்றரை வரு டமும், சனி இரண்டரை வருடமும், குரு ஒரு வருடமும், செவ்வாய் ஒன்றரை மாதமும், சூரியன், சுக்கிரன், புதன் ஆகியவை ஒரு மாதமும் ஒரு ராசியில் தங்கும் என்பது வழக்கு. (நன்றி: விவேகானந்தன், தீக்கதிர்). நாள் என்ன செய்யும்? கோள் என்ன செய்யும்?
தி. வெங்கடேஸ்வரன்
விடுதலை,14.8.10

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக