பக்கங்கள்

செவ்வாய், 12 டிசம்பர், 2017

பிறந்தகாலம் என்பதை ஆதாரமாக வைத்து பலன் சொல்ல முடியுமா?


6-7-1930, குடிஅரசிலிருந்து...



பிறந்த காலம் என்பது வயிற்றுக்குள் இருக்கும் போது ஜீவன் (உயிர்) ஏற்பட்ட காலமா? அல்லது வயிற்றிலிருந்து 7, 8, 9, 10 மாதங்களில் எப்பொழுதா னாலும் பிறக்கும் காலமா? அப்படி பிறக்கும் காலத்தில் தலை வெளியில் தெரியும் காலமா? அல்லது ஒரு நாள் அரைநாள் அக்குழந்தை கீழே விழாமல் கஷ்டப்படும் காலத்தில் தலை வெளியாகி நிலத்தில் பட்டுக் கால் நிலத்தில் விழாமல் தாய் சரீரத்தில் பட்டுக் கொண்டி ருக்கும் காலமா? அல்லது கால் தலையெல்லாம் மருத்துவச்சிக் கையில் விழுந்த நேரமா? அல்லது மருத்துவச்சி கையிலிருந்து கீழே விழுந்த நேரமா? என்பனவாகிய கேள்விகள் ஒரு புறமிருக்க ஜீவனு டைய சரீரமெல்லாம் பூமியில் விழுந்த நேரம் என்பதாக வைத்துக் கொண்டே பார்ப்போமானாலும் அந்த நேரத்தைச் சரியாக எப்படி கண்டு பிடிக்க முடியும்? என்பதை யோசிப்போம்.

குழந்தை கீழே விழுந்ததும் அது உயிருடனிருக் கிறதா இல்லையா? ஆணா பெண்ணா என்பன போன்றவைகளைப் பார்க்க சிறிது நேரமாவது செல்லும்.

பிறகு அந்த சேதியைக் கொண்டு வந்து வெளியில் இருக்கும் ஆண்களிடம் சொல்ல சிறிது நேரமாவது செல்லும். அந்த சேதியைக் கேட்டவன் நேரத்தைக் குறிக்க அங்கேயே அவனுக்குக் கடிகாரம் வேண்டும். அந்தக் கடிகாரம் சரியான மணியா? என்பது தெரிய வேண்டும்.

கடிகாரமில்லாவிட்டால் வானத்தைப் பார்த்து நேரம் கண்டுபிடிப்பதாயிருந்தால் அதற்குப் பிடிக்கும் நேரம் முதலியவை அல்லது அக்கம் பக்கம் கடிகார நேரம், அதுவுமில்லாவிட்டால் உத்தேச சுமார் நேரம் ஆகியவைகளின் தாமதங்களும் பிசகுகளும் எப்படி நேராமல் இருக்க முடியும்? இவை ஒரு புறமிருக்க அந்த நேரத்தால் பலன் சொல்லுவதனால் அந்த நேரத்தில் உலகத்தில் பிறக்கும் ஜீவன்கள் எவ்வளவு இருக்கக்கூடும்.

மற்ற ஜீவன்களை எல்லாம் தள்ளி விட்டு வெறும் மனித ஜீவனை மாத்திரம் எடுத்துக் கொண் டாலும் உலகத்தில் 170 கோடி மக்கள் இருக் கிறார்கள் என்ற கணக்குப்படி  பார்ப்போமானால் சென்னை முதலிய பட்டணங்களில் சாதாரண அனுபவங்களின் படிக்கு உலகத்தில் நாள் ஒன்றுக்கு 2,26,666 (இரண்டு லட்சத்து இருபத்தாறாயிரத்து அறுநூற்று  அறுபத்தாறு) குழந் தைகள் பிறப்பதாக கணக்கு ஏற்படுகின்றது.

(இந்தக் கணக்கானது அய்ந்து லட்சம் ஜனத்தொகை  உள்ள சென்னை நகரத்திற்கு தினம் ஒன்றுக்கு 70  (எழுபது) குழந்தைகள் பிறப்பதாகக் கணக்குப் போடப்பட்டிருக்கின்றது.)

இதைத் தவிர கணக்குக்கு வராத விதவைகளின் குழந்தைகள், கல்யாணம் ஆகாத பெண்களின் குழந்தைகள், புருஷன் சமீபத்தில்  இல்லாத ஸ்திரிகளின் குழந்தைகள் ஆகியவைகளைச் சேர்த்தால் இன்னமும் இந்தக் கணக்கு அதிகமாகும்.

இது ஒரு புறமிருக்க மேல்படி சாதாரண கணக்குப் படிக்கு பார்த்தாலே ஒரு நாளைக்கு பிறக்கும் குழந்தைகளைப் பங்கிட்டு பார்த்தால் ஒரு நிமிஷத்திற்கு சுமார் 160 குழந்தைகள் வீதம் பிறக்கிறதாக கணக்கு ஏற்படுகிறது.

இதில் 33 கோடி ஜனத்தொகை கொண்ட நமது இந்தியாவுக்கு மாத்திரம் கணக்குப் பார்த்தால் நிமிடத்திற்கு 33 குழந்தை வீதம்  பிறக்கின்றதாக கணக்கு ஏற்படுகின்றது.

ஆகவே இந்த 33 குழந்தை களுக்குமாவது ஜாதகப் பலன் ஒத்து இருக்க முடியுமா? இவைகளுக்குச் சரியான நேரம் கண்டுபிடிக்க முடியுமா? என்பதை யோசிக்க வேண்டும்.

நிமிடக் கணக்கே இப்படி நிமிஷத்துக்கு 33 குழந் தைகள் பிறப்பதாயிருக்கும் போது ஒரு சோதிடம் சொல்லுவதற்குப் போதுமான காலமாகிய ஒரு லக்கினம் நட்சத்திரம் ஆகியவைகளின் காலத்திற்குள் எத்தனை குழந்தைகள் பிறக்கக்கூடும்? என்பதைப் பார்த்தால் இது சிறிதும் பொருத்த மற்றதென்பதாகவே காணலாம்.
- விடுதலை நாளேடு,8.12.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக