பக்கங்கள்

புதன், 30 ஜூலை, 2025

வாஸ்து என்பது கட்டட அறிவியலா ?

என்ற சொல்லே தமிழ்ச்சொல் அல்ல. எனவே, இதில் தமிழனுக்குத் தொடர்பில்லை என்பது உறுதி. அய்ந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகு வியக்க கட்டடக் கலையில் உயர்ந்து நின்ற தமிழன் எந்த வாஸ்துவையும் பின்பற்றிக் கட்டடங்கள் கட்டவில்லை. வசதிக்கேற்ப வலுவுடனும் அழகுடனும், அறிவியல் கண்ணோட்டத்திலும் கட்டினர்

அண்மைக்காலத்தில் அறிவிலிகளை ஆட்டிப் படைக்கும் மூட நோய் இது. கேட்டால், இது அறிவியல் அடிப்படையிலானது என்கின்றனர். அதற்கு ஆதரவாகக் கருத்துக் கூறவும், நூல்கள் வெளியிடவும் சில படிப்பாளிகளும் புறப்பட்டுள்ளனர்.

முதலில் ‘வாஸ்து’ என்ற சொல்லே தமிழ்ச்சொல் அல்ல. எனவே, இதில் தமிழனுக்குத் தொடர்பில்லை என்பது உறுதி. அய்ந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகு வியக்க கட்டடக் கலையில் உயர்ந்து நின்ற தமிழன் எந்த வாஸ்துவையும் பின்பற்றிக் கட்டடங்கள் கட்டவில்லை. வசதிக்கேற்ப வலுவுடனும் அழகுடனும், அறிவியல் கண்ணோட்டத்திலும் கட்டினர்.

வாஸ்து வந்ததெல்லாம் ஆரியர் கலப்பின் அவலம்

கீழ்க்கண்ட கருத்தை அறிந்தால் இந்த உண்மையை அனைவரும் அறியலாம்.

வீடுகட்ட எப்படிப்பட்ட இடத்தை யார் யாருக்குத் தேர்வுசெய்ய வேண்டும் என்பதற்கு “வாஸ்து” கூறும் விதியைப் பாருங்கள்!

1.மண்ணின் சுவை இனிப்பாகவுள்ள மனை –
– பிராமணனுக்கு

2.மண்ணின் சுவை கார்ப்பாகவுள்ள மனை –
– சத்திரியனுக்கு

3  மண்ணின் சுவை புளிப்பாகவுள்ள மனை –
– வைசியனுக்கு

4.மண்ணின் சுவை கைப்பாக(களர்)வுள்ள மனை – சூத்திரனுக்கு

(ஆதாரம் : 21ஆம் நூற்றாண்டில் வாஸ்து. – Er. பா. இரத்தினவேல், B.E., F.I.E., F.I.V., கற்பகம் புத்தகாலயம், சென்னை – 17).

சமூக மக்களிடையே ஜாதியைப் புகுத்தி, தங்களை உயர்த்திக் காட்டிய சதிகாரர்கள், அதே ஏற்றத்தாழ்வில் ஆதிக்க வெறியில் மனையையும் ஒதுக்கியுள்ளனர் என்ற உண்மை இதன்மூலம் வெளிப்படுகிறது.

பிராமணனுக்கு மனை மண் இனிப்புச் சுவையுடன் இருக்க வேண்டுமாம்; சூத்திரனுக்கு மனை மண் உப்புச் சுவையுள்ள, எதற்கும் தகுதியற்ற களர் மண்ணாக (உப்பு மண்ணாக) இருக்க வேண்டுமாம்.

மக்கள் நலமுடன் வாழ்வதற்கான வாஸ்து சாஸ்திரமாக இது இருக்குமானால், அவர்கள் நாசமாய்ப் போக வழி சொல்லுமா?

உப்பு மண்ணில் கட்டடம் கட்டினால், விரைவில் அரிக்கப்பட்டு, சிதைந்து போகுமே!

கட்டடம் கட்டுவதற்குமுன் களர்மண் இல்லை யென்பதை உறுதி செய்து கட்டவேண்டும் என்கிறது அறிவியல். ஆனால், சூத்திரன் அம்மண்ணில் தான் கட்டவேண்டும் என்கிறது வாஸ்து. அப்படியிருக்க இது எப்படி அறிவியலாகும்? சதியியல் அல்லவா?

வீடுகட்டுவது என்பது அவரவர் தேவை, வாய்ப்பு, உளவியல், விருப்பு, வெறுப்பு, பாதுகாப்பு, உடல்நலம், தூய்மை, காற்றோட்டம், வெளிச்சம், சுற்றுச்சூழல் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு அதற்கேற்பச் செய்ய வேண்டியது. அப்படியிருக்க ஒவ்வொருவருக்கும் உரிய வீட்டை ஒரு சாஸ்திரம் எப்படிக் கூறிவிட முடியும்?

அது மட்டுமல்ல, கட்டட அமைப்பு என்பது காலத்திற்கு ஏற்ப, அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாறக் கூடியது. அப்படியிருக்க, எப்போதோ கூறிய வாஸ்து சாஸ்திரம் எக்காலத்திற்கும் எப்படிப் பொருந்தும்? சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வாஸ்து, இராசிக்கல், பெயர் சோதிடம், கையொப்பச் சோதிடம் என்று நாளுக்குநாள் ஒவ்வொன்றாய்ப் புகுத்தப்பட்டு, தொலைக்
காட்சியின் துணையோடு, வணிகமாகிவிட்டன.

இவை அத்தனையும் பொய் என்பதற்குக் கீழ்க்கண்ட கருத்துகளை ஆழச் சிந்தித்தால் நன்குத் தெளியலாம்.

யார் ஜோதிடத்தை நம்புகிறார்களோ, யார் வாஸ்துவை நம்புகிறார்களோ, யார்
இராசிக் கல்லை நம்புகிறார்களோ, யார் பெயர்
ஜோதிடத்தை, கையொப்ப ஜோதிடத்தை நம்புகிறார்களோ அவர்கள்தாம் உண்மை
யிலேயே கடவுள் மறுப்பாளர்கள் ஆவார்கள்!

வியப்பாக இருக்கிறதா? அதிர்ச்சி
யளிக்கிறதா? ஆனால், உண்மை அதுதான்!

உண்மையான கடவுள் நம்பிக்கையாளர், விதியைக் கட்டாயம் நம்புவார்; நம்ப வேண்டும்!
கடவுள்தான் தங்கள் வாழ்வை நிர்ணயிக்கிற
தாகவும், அவர் விதித்த விதிப்படியே அனைத்தும் நிகழ்வதாகவும்; அவர் அமைத்தபடியே வாழ்வு அமைகிறது என்றும், அதுதான் கடவுள் கோட்பாடு என்றும் நம்புவர்.

ஆனால், ஜோதிடக் கோட்பாடு என்ன சொல்கிறது?

பிறக்கும்போது உள்ள கிரக (கோள்) நிலைக்கு ஏற்பவே ஒருவரது வாழ்வு அமைகிறது என்கிறது. அப்படியாயின் ஒருவரது வாழ்வைத் தீர்மானிப்பது கடவுள் அல்ல, கிரக இயக்கங்கள்தான் என்றாகிறது. அதன்படி பார்த்தால் கடவுள் இல்லை என்றும் ஆகிறது!

வாஸ்து சாஸ்திர நம்பிக்கையாளர், வாசற்படியை மாற்றியமைத்தால் வாழ்வே மாறிவிடும் என்கிறார். அப்படியானால், ஒருவர் வாழ்வைக் கடவுளும் தீர்மானிப்பதில்லை, கிரகங்களும் தீர்மானிப்பதில்லை; வாசற்படியும், சன்னலும், சமையலறையும், கழிவு அறையும் இருக்குமிடங்களே தீர்மானிக்கின்றன என்றாகிறது. அப்படியானால், வாஸ்து சாஸ்திரவாதி கடவுளையும் மறுக்கிறார்; ஜோதிடத்தையும் மறுக்கிறார் என்று பொருள்.

இராசிக்கல்காரரோ, அணிகிற இரத்தினக் கல்லைப் பொருத்தே வாழ்வு அமைகிறது என்கிறார். கல்லை மாற்றி அணிந்தால், வாழ்வே மாறிவிடும் என்னும் இவர், ஒருவர் வாழ்வைக் கடவுளும் தீர்மானிப்பதில்லை, வாசற்படியும் தீர்மானிப்பதில்லை, அணிகின்ற இராசிக் கல்லே தீர்மானிக்கிறது என்பதால், இவர் கடவுளையும் மறுக்கிறார்; வாஸ்துவையும் மறுக்கிறார்; ஜோதிடத்தையும் மறுக்கிறார்.

பெயர் இராசிக்காரரோ ஒருவர் வாழ்வை அவர் பெயரில் உள்ள எழுத்துகளே தீர்மானிக்கிறது என்கிறார். அப்படியாயின் ஒருவர் வாழ்வைக் கடவுளோ, கிரகங்களோ, வாசற்படியோ, இரத்தினக் கல்லோ தீர்மானிப்பதில்லை; பெயரில் உள்ள எழுத்தே தீர்மானிக்கிறது என்பது இதற்குப் பொருள். எனவே, இவர் மேற்கண்ட மற்ற எல்லாவற்றையும் மறுக்கிறார்.

ஆக, ஜோதிடக்காரராயினும், வாஸ்து வல்லுநராயினும், இராசிக்கல் விற்பவராயினும், பெயர் ஜோதிடராயினும் இவர்கள் எல்லோரும் கடவுளையும், விதியையும் மறுக்கிறார்கள் என்பதே உண்மை.

காரணம், இவையெல்லாம், கடவுள் கோட்பாட்டுக்கும் விதிக் கோட்பாட்டுக்கும் முற்றிலும் முரணானவை. இத்துறை வல்லுநர்கள் இப்படியெல்லாம் ஆழ்ந்து சிந்திக்காமல், அவரவர் நோக்கில் வணிகம் செய்கின்றனர். மக்களை மடையராக்குவதோடு, ஏமாற்றுகின்றனர். சுரண்டுகின்றனர். இவையெல்லாம் அறியாமையின் அடையாளங்களேயன்றி, அறிவுடைமைக்கு அழகல்ல.

வாஸ்து சாஸ்திரத்தில் குளியலறை எங்கு இருக்க வேண்டும்? கழிவறை எங்கு இருக்கவேண்டும்? என்று கூறுகிறார்கள். வீட்டுக்குள் கழிவறை, குளியலறை வந்தது அண்மைக்காலத்தில்தான். அப்படியிருக்க அது எப்படி வாஸ்து சாஸ்திரத்தில் இருக்க முடியும்? எனவே, வாஸ்து சாஸ்திரம் என்பது பிற்காலத்தில் பிழைப்புக்காக உருவாக்கப்பட்ட ஒன்று என்பது உறுதியாகிறது.

எனவே, மூட நம்பிக்கைகளை விட்டொழித்து, தன்னம்பிக்கையுடன், தங்கள் வாழ்வை, பகுத்தறிவுப் பாதையில் நடத்தி வாழ்வதே அறிவுள்ள மனிதர்க்கு அழகு.l

உண்மை இதழ் மாதமிருமுறை,  ஜூலை 16-31,2025 ,