பக்கங்கள்

புதன், 19 ஜூன், 2024

செவ்வாய் தோஷம்? மெச்சத் தகுந்த உச்சநீதிமன்ற ஆணை


முகப்புக் கட்டுரை – 

2023 முகப்பு கட்டுரை ஜூன் 16-30,2023

– மஞ்சை வசந்தன்

உத்தரபிரதேசத்தில் உள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம் பல நேரங்களில் பரபரப்பான தீர்ப்புகளை வழங்கிய முக்கியமான நீதிமன்றம். அண்மையில் அந்த நீதிமன்றத்தில் ஒரு வழக்கு.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி, ஒரு பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தினார். ஆனால், அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்வதைத் தவிர்த்து, தொடர்ந்து ஏமாற்றி வந்தார்.
பாதிக்கப்பட்ட அப்பெண் புகார் அளித்ததை அடுத்து அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். பிணை கோரி, அவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடினார்.

அப்போது அந்த இளைஞரின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ‘‘அந்தப் பெண்ணுக்கு ‘செவ்வாய் தோஷம் உள்ளது; இந்தத் தோஷம் இருப்பவர்களைத் திருமணம் செய்தால், குடும்பத்துக்கு அழிவு ஏற்படும்; அதனால்தான், அந்தப் பெண்ணை என் கட்சிக்காரர் திருமணம் செய்யவில்லை’’ என வாதிட்டார்.

இதையடுத்து அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த அதிர்ச்சி தரும் உத்தரவு என்ன தெரியுமா?

‘‘இந்த வழக்கில் தொடர்புடைய பெண்ணும் – அந்த இளைஞரும் தங்கள் ஜாதகத்தை லக்னோ பல்கலைக்கழக ஜோதிடத் தலைவரிடம் 10 நாள்களுக்குள் அளிக்கவேண்டும்.

இதை ஆய்வு செய்து, அந்தப் பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா? என பல்கலைக்கழக ஜோதிடத் துறை மூன்று வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட உறையில் வைத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
என்று ஆணை பிறப்பித்தார்.

இந்த விவகாரம் குறித்து பத்திரிகைகளில் செய்தி வெளியானதை அடுத்து, உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்தது.
அப்போது உச்சநீதிமன்றம், ‘‘பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா? என அறிக்கை அளிக்கும்படி, லக்னோ பல்கலைக்கழகத்திற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் ஏன் உத்தரவிட்டது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
எனவே, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் அந்த ஆணைக்கு (ஜோதிடம் பார்த்து முடிவு செய்யும் ஆணையை) தடை விதிக்கின்றோம்’’ என்று ஆணையிட்டுள்ளது!

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியின் ஆணை எவ்வளவு பெரிய அறியாமை! உயர்நீதிமன்ற நீதிபதிக்கே சட்டப்பார்வைக்கும் சமூக நம்பிக்கைகளுக்கும் வேறுபாடு தெரியாமல் போகலாமா?

சமுதாயத்தில் மக்கள் மத்தியில் எத்தனையோ அறியாமையின்பாற்பட்ட மூடநம்பிக்கைகள் இருக்கும். அப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளையெல்லாம் கருத்தில் கொண்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கமுடியுமா?

பக்தியின் பேரால் தன் பிள்ளையையே அறுத்து சாமியாருக்கு விருந்து கொடுத்தான் சிறுத்தொண்டன்.

இன்றைக்கு ஒரு தந்தை தன் பிள்ளையை பக்தியின் பேரால் அறுத்து கறி சமைத்தால் நீதிமன்றம் ஏற்குமா?
நம்பிக்கையின் அடிப்படையில் நரபலிகள் கொடுக்கப்படுகின்றன. அவற்றை நீதிமன்றம் ஏற்குமா?

சோதிடத்தில் ஒருவருக்கு படிப்பு வராது என்று சொன்னால், அவரைப் படிக்க வைக்காமல் ஒரு தந்தை இருந்தால் அதை நீதிமன்றம் ஏற்குமா? அந்தப்பிள்ளைக்கு படிப்பு வருமா? வராதா? அப்பிள்ளையின் ஜாதகத்தைப் பார்த்துச்சொல்லுங்கள் என்று பல்கலைக் கழகத்திற்கு உத்தரவு போடுவாரா நீதிபதி?நீதிபதியின் இந்த அணுகுமுறை எதனால் வந்தது? சோதிடத்தை பல்கலைக்கழகத்தில் பாடமாக வைத்ததன் அவலநிலை அல்லவா இது? பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளதால் அது உண்மை என்று எண்ணுகிறாரா நீதிபதி?

பாடத்தில் வருவதெல்லாம் அறிவியல் உண்மையாகுமா? சட்டம் அவற்றை ஏற்க முடியுமா?

சிவபெருமான் தலையில் கங்கையுள்ளது; நிலவு உள்ளது என்று பாடம் வைத்துள்ளார்கள். திருப்பாற்கடல் கடையப்பட்டதாய் பாடத்தில் சொல்லப்படுகிறது. பூமியை பாயைச் சுருட்டிய கதை பாடத்திட்டத்தில் உள்ளது. பாடத்திட்டத்தில் இருப்பதால் இவையெல்லாம் உண்மையாகிவிடுமா?

அறிவியலுக்கு எதிரான பாடங்கள் அறவே நீக்கப்பட வேண்டும்; வாஸ்து, பாடத்திட்டத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளதால், கட்டு
மான அறிவியலை (Civil Engineering) கைவிட்டு விட்டு, வாஸ்துபடி கட்டடங்களை கட்ட வேண்டும் என்று கூற முடியுமா?
மதவாத பி.ஜே.பி. அரசு தங்கள் நம்பிக்கைகளை, சாஸ்திர விதிமுறைகளையெல்லாம் சட்டமாக்க, பாடமாக்க முயற்சி செய்வதன் விளைவுகளே இச்சீர்கேடுகளுக்குக் காரணம்.

நீதிமன்ற நீதிபதிகளையே பாதிக்கும் அளவிற்கு இது சென்றுவிட்டதால், கல்வி நிலையங்களில், அறிவியலுக்கு எதிரான, முரணான ஒவ்வாத கருத்துகள் எதுவும் பாடத்திட்டத்தில் இருக்கக்கூடாது என்று முடிவு செய்து அப்படிப்பட்ட பாடங்களை உடனே நீக்க வேண்டும். இல்லையேல், உலக அரங்கில் இந்தியாவின் கல்வித்திட்டமும், நீதிமன்றமும், சட்டங்களும் கேலிக்குரியனவாய் மாறிவிடும். இந்திய விஞ்ஞானிகள் எல்லாம் தலைகுனிந்து நிற்க வேண்டிவரும். எனவே, கல்வியாளர்களும், விஞ்ஞானிகளும் கூடிப்பேசி, இப்படிப்பட்ட அவலங்களை அகற்ற உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நீதிபதிகளின் தனிப்பட்ட நம்பிக்கைகள் எல்லாம், தீர்ப்பில் தற்போது எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. அனைத்து சாதியினர் அர்ச்சகர் தொடர்பான வழக்கில்கூட, அதை விசாரித்த நீதிபதியின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப தீர்ப்புகள் வருவது, சட்டப்படியான, சமூகநீதியின் அடிப்படையிலான ஆட்சியின் மாண்பைக் குலைத்து மண்மூடச் செய்துவிடும் என்பதை நீதித்துறையில் உள்ளவர்கள் உடனடியாகக் கருத்தில்கொண்டு செயல்பட்டு முடிவெடுக்க வேண்டும்.

நீதிமன்றங்களில் சட்டப்பார்வை மட்டுமே இருக்கவேண்டுமே தவிர, தனிப்பட்ட நம்பிக்கைகள், கொள்கைகள், விருப்பு, வெறுப்புகள் அங்கு நுழைந்தால் நீதித்துறையையே அது சீரழித்து, சீழ்பிடிக்கச் செய்துவிடும்.

செவ்வாய் தோஷம் உண்மையா?

செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணைத் திருமணம் செய்தால் இன்னின்ன பாதிப்புகள் வரும் என்பது ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளனவா? செவ்வாய் தோஷம் உள்ளதாகக் கூறும் சோதிடம் முதலில் சரியாக கணிக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டதா?
நீதிமன்றத்தில் ஒரு கொலைக்கான தடயங்களை உறுதி செய்ய எத்தனை பரிசோதனைகள், ஆய்வுகள் செய்யப்படுகின்றன. தடயவியல் ஆய்வு, மருத்துவர் ஆய்வு, சோதனைக்கூடத்தில் ஆய்வு என்று பல ஆய்வுகள் அறிவியல் கண்ணோட்டத்தில் செய்யப்பட்டு, அத்தடயங்களின்

உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்ட பின்பே அவை ஏற்கப்படுகின்றன.
அப்படியிருக்க, சோதிடம் உண்மை என்று ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதா? செவ்வாய் தோஷம் உண்மை, அதனால் பாதிப்பு வரும் என்று ஆய்வுகள் நடத்தப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதா?

எந்த ஆய்வும் இன்றி, சோதனையின்றி, இதை எப்படி ஏற்க முடியும்? இந்த அடிப்படைச் சிந்தனைகூட இன்றி ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி எப்படி ஆணையிட்டார்?

உச்சநீதிமன்ற ஆணை மெச்சத் தகுந்தது

செய்தித்தாளில் செவ்வாய்தோஷம் சார்ந்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவு வெளிவந்ததைப் பார்த்த அளவிலே உச்சநீதிமன்ற நீதிபதிகள், தாங்களாகவே முன்வந்து அதை வழக்காக எடுத்து, உயர்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்குத் தடையும் உடனடியாக விதித்துள்ளனர் என்றால், அதன்உட்பொருள் என்ன? உயர்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவு அந்த அளவிற்கு சட்டத்திற்குப் புறம்பானது, நீதிமன்ற விதிமுறைகளுக்கு, விசாரணை முறைகளுக்கு எதிரானது என்பதை அவர்கள் உணர்ந்ததால்தான் உடனடியாக தடைவிதித்து ஆணையிட்டுள்ளனர்.

சோதிடம், வாஸ்து போன்ற மூடநம்பிக்கைகளை பாடமாக வைப்பது எவ்வளவு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை இந்த வழக்கின் மூலமாக, இந்த பா.ஜ.க. அரசு உணர்ந்து தங்கள் தப்பை உடனடியாகச் சரிசெய்து கொள்ள வேண்டும். அறிவியலுக்கு எதிரான பாடங்களை உடனடியாக பாடத்திட்டத்திலிருந்து விலக்கிக்கொள்ள வேண்டும்.

அறிய வேண்டிய அறிவியல் கருத்துகளை பாடமாக வைக்காமல், மூடநம்பிக்கைகளை பாடமாக வைப்பதும், கட்டாயம் கற்க வேண்டிய மக்களாட்சி பற்றிய பாடங்களை பாடச்சுமை என்று நீக்குவதும், கல்வித்துறை கற்காலத்தை நோக்கிக் கொண்டு செல்லப்படுவதையே காட்டுகிறது.

ஒன்பது கிரகங்கள் என்று கணக்கில் கொண்டு சோதிடம் கணிக்கிறார்கள். வெறுங்கண்ணால் பார்த்து கணித்த காலத்தில் ஒன்பது. ஆனால் அதன்பின் புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

அப்படியென்றால் எல்லா கோள்களையும் கணக்கில் கொள்ளாமல் காணப்படும் சோதிடம் எப்படிச் சரியாக இருக்க முடியும்?
மேலும், சூரியன் நிலையாக தன்னைத்தானே சுற்றக்கூடியது. ஆனால், சூரியன் கோள்களைச் சுற்றி வருவதாக சோதிடம் கூறுகிறது.இது அறிவியலுக்கு முற்றிலும் எதிரானது; உண்மைக்கு மாறான கருத்தின் அடிப்படையில் கணிக்கப்படும் சோதிடம் எப்படிச் சரியாக இருக்க முடியும்?

கடவுளுக்கு எதிரானது சோதிடம் :

கடவுள் கொள்கைப்படி ஒருவனுடைய வாழ்க்கை கடவுளின் விதிப்படி அமைவது.ஆனால், ஒருவரது வாழ்க்கை கிரகங்களால் தீர்மானிக்கப்படுகிறது என்கிறது சோதிடம். அப்படியென்றால் சோதிடம் கடவுளை மறுக்கிறது என்று பொருள்.

வாழ்வைத் தீர்மானிப்பது கடவுளா? கிரகங்களா என்பதையே உறுதி செய்ய முடியாத நிலையில், செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணைத் திருமணம் செய்யக்கூடாது என்பது அநீதியல்லவா? பெண்ணுக்குச் செய்யும் துரோகம் அல்லவா?

https://unmai.in/images/magazine/2023/june/16-30/30.jpg

செவ்வாய் என்பது ஒரு கோள். அங்கு மனிதன் விண்கலம் இறக்கி சோதனை செய்கிறான். செவ்வாயில் உயிரினங்கள் உண்டா என்று ஆய்வு நடத்துகிறான். செவ்வாயில் குடியேற திட்டம் வகுத்துக்கொண்டிருக்கிறான். அப்படி அறிவியில் வளர்ச்சி உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கும் நிலையில் செவ்வாய் தோஷம் என்று கூறி பெண்ணின் வாழ்வைக் கெடுக்க முற்படுவது, அதற்கு உயர்நீதிமன்றமே துணை நிற்பது மிகப்பெரிய அவலம் அல்லவா?

ஆசிரியர் அறிக்கை

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியைக் கண்டித்தும் உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பாராட்டியும் ஆசிரியர் அவர்கள்நுட்பமான, பொருள் பொதிந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

“அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியின் ஆணையை நாளேடுகளில் பார்த்ததும், தாங்களாகவே முன்வந்து (Suo Moto) நடவடிக்கை மேற்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவு பாராட்டுக்குரியதாகும்.

இந்திய அரசமைப்புச் சடடத்தின் மீதுதான் எல்லா நீதிபதிகளும் பதவிப் பிரமாணம் எடுக்கிறார்கள்.
அதில் ‘‘அடிப்படைக் கடமைகள்’’ (Fundamental Duties)என்ற தலைப்பில் 51-ஏ (எச்) பிரிவு 1976 முதலே இணைக்கப் பட்டுள்ளது!

ஒரு பிரிவு மிகத் தெளிவாக,

‘‘It shall be the duty of every citizen of India to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform’’ என்று கூறுகிறது.

‘‘அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், புலனறிவு மற்றும் சீர்திருத்த உணர்வை வளர்ப்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாகும்’’ என்பது அதன் தமிழாக்கம் ஆகும்.

வாஜ்பேயி ஆட்சிக்காலத்தில் பல்கலைக் கழகங்களில் மூடத்தனத்தைப் படிப்பாக்கினர்!

சோதிடம் என்பது அறிவியல் அடிப்படையைக் கொண்டதல்ல; மாறாக, ‘‘போலி அறிவியல் (விஞ்ஞானம்)’’ (ழிஷீt ஷிநீவீமீஸீநீமீ தீut றிsமீuபீஷீ ஷிநீவீமீஸீநீமீ) என்றாலும், பா.ஜ.க. ஆட்சியில் முரளி மனோகர் ஜோஷி மனிதவளத் துறை அமைச்சராக, வாஜ்பேயி தலைமையிலான ஒன்றிய அரசில் இருந்தபோது, பல்கலைக் கழகங்களில் இப்படி ஒரு மூடத்தனத்தைப் படிப்பாக ஆக்கி, விருப்பத்தைத் தூண்ட, அப்பல்கலைக் கழகங்களுக்கு நிதி உதவி உண்டு என்றும் நாக்கில் தேனைத் தடவினர்.

அதன் தீய விளைவு நாட்டில் பல பல்கலைக் கழகங்களில் இந்தப் போலி அறிவியல் துறையும் ஏற்படுத்தப்பட்டு இயங்குகிறது!
எவ்வகையில் சரியானது?

அது ஒருபுறமிருந்தாலும், உயர்நீதிமன்ற நீதிபதி இப்படி அறிவியல் மனப்பாங்குக்கு முரணான வகையில், அடிப்படைக் கடமையைச் செய்யாது இப்படி மூடத்தனத்திற்கு போலி விஞ்ஞானத்திற்குப் புத்தாக்கம் தருவதுபோல் நடந்து கொள்ளுவது எவ்வகையில் சரியானது?
இது அவர் எடுத்த அரசமைப்புச் சட்ட உறுதிமொழிக்கு முற்றிலும் முரண் அல்லவா?

உயர்ஜாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு வழக்கில் 3 இல் 2 என்று தீர்ப்பு வந்த அமர்வில், தீர்ப்பு எழுதிய ஒரு நீதிபதி (உச்சநீதிமன்றத்தில்) ‘‘டாக்டர் அம்பேத்கர் இட ஒதுக்கீடு 10 ஆண்டுகள் இருந்தால் போதும் என்று கூறியிருந்தார்’’ என்று எழுதியுள்ளார்!

அரசியல் ரிசர்வேஷன் வேறு; கல்வி, உத்தியோக இடஒதுக்கீடு வேறு என்ற வேறுபாடுகூட அறியாமல் இப்படி தீர்ப்பில் எழுதியது, ஏனோ புரியவில்லை!

நீதி இப்படி திரிபுகளுக்கு இரையாகக் கூடாது என்பதே பகுத்தறிவாளர்களின் கவலை!

இப்படிப்பட்ட சூழலில், தங்கள் ஆணையின் மூலம் மனிதம் தழைக்கச் செய்தார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள்!
மனிதர்கள், செவ்வாய்க் கிரகத்திற்குச் சென்று ஆய்வு (விண்வெளி ஆய்வு) நடத்திடும் இந்த அறிவியல் யுகத்தில், இப்படி ஒரு விசித்திர ஆணை அலகாபாத் உயர்நீதிமன்றத்திலிருந்து கிளம்பியது குறித்து வேதனைப்பட்டாலும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதனை உணர்ந்து, உடனே தடையாணை வழங்கியது, நீதியை மட்டும் காப்பாற்றிடவில்லை; கூடுதலாக அறிவியல் மனப்பாங்குக்கும் பாதுகாப்பு அளித்து ‘‘மனிதம்‘’ தழைக்க உதவியுள்ளார்கள்.அவர்களுக்கு பாராட்டுகள்!’’ என்று ஆசிரியர் அவர்கள் தமது அறிக்கையில் கூறியுள்ளார்கள்.

எனவே, அரசியல் சாசனப்படி பதவியேற்றுக்கொண்டுள்ள நீதிபதிகள், அரசியல் சட்டத்தை மதித்து, அறிவியல் அடிப்படையில் செயல்படவேண்டியது கட்டாயக் கடமையாகும். சமூக நம்பிக்கை என்பது வேறு; சட்டப் பார்வை வேறு என்பதை நீதிபதிகள் அறிந்து செயல்பட வேண்டியது கட்டாயக் கடமையாகும்.♦


சனி, 8 ஜூன், 2024

கிரகணத்தைப் பார்த்தால் ஆபத்தா?


அறிவியல் : 

த.வி.வெங்கடேஸ்வரன்

முதுநிலை விஞ்ஞானி, புதுடில்லி
முந்தைய சூரிய சந்திர கிரகணங்களின் போது ஒவ்வொருமுறையும் உண்மையில்லாச் செய்திகள் பரப்பியது போலவே, அக்டோபர் 25ஆம் தேதி நிகழ்ந்த சூரிய கிரகணம் குறித்தும் பரப்பி வருகின்றனர்.
தவறான செய்திகளை சூரிய கிரகணம் ஏற்படும் என்பது பாரம்பரியப்
பஞ்சாங்கம் கணித்தபடி நடக்கிறது, மேலும் கிரகணக் காலங்களை மிகச்சரியாக நம்
பஞ்சாங்கங்கள் கணித்து உள்ளன என்றும் கூறிக் கொள்கின்றனர்.

கிரகணச் சமயத்தில் கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரவேண்டாம் எனவும் வாட்ஸ்ஆப் செய்திகள் காட்டுத் தீ போலப் பரவி வருகிறது.
ஆனால், மிகத் துல்லியமாக பஞ்சாங்கம் கணிப்பது இல்லை என்பதோடு, கிரகணத்தின் போது எந்தவிதமான மர்மக் கதிர்களும் வெளிப்படுவதும் இல்லை. இந்த அறிவியல் உண்மையை நாம் உரக்கச் சொல்ல வேண்டி இருக்கிறது.

பிழைபட்ட பஞ்சாங்கக் கணிப்பு
சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே உள்ள கோணம் தான் திதி. சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே 12 பாகை (டிகிரி) கொண்டது ஒரு திதி. சுக்லபட்ச பிரதமை எனும் முதல் திதி 0_12 பாகை [அதாவது வளர்பிறை கால முதல் திதி என்றே பொருள்]; சுக்லபட்ச துவிதியை எனும் இரண்டாம் திதி 12_24 டிகிரி என அடுத்தடுத்த திதிகள் அமையும். இறுதி 348_360 பாகை வரை அமாவாசை திதி ஆகும்.
நிலவு, பூமி, சூரியன் என்ற வரிசையில் ஒரே தளத்தில் அமையும்போது பவுர்ணமி திதி முடிவுக்கு வரும். அடுத்த திதியான கிருஷ்ண பட்ச பிரதமை (தேய் பிறைக் கால முதல் திதி) துவங்கும்.
அதேபோல பூமி, நிலவு, சூரியன் என்ற வரிசையில் ஒரே தளத்தில் அமையும்போது அமாவாசை திதி முடிந்து அடுத்த திதியான சுக்லபட்ச பிரதமை துவங்கும் (முதலாம் வளர் பிறை). அதாவது சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே பூச்சியம் பாகை அமையும்போது அமாவாசை திதி முடிவுக்கு வரும்.
எனவே, சூரிய கிரகணம் ஏற்பட்டால் அமாவாசை முடிவுறும் நிலையில் தான் உச்சபட்ச கிரகணம் _ அதிகபட்ச மறைப்பு _ ஏற்படவேண்டும்.
அதாவது, அக்டோபர் 25 அன்று நிகழும் சூரிய கிரகணத்தின் போது, சென்னையில் உச்சபட்ச சூரிய கிரகணம் 17:42 மணிக்கு நிகழும்.
ஆனால், சென்னையில் அமாவாசை திதி முடியும் காலம் 16:18 என வாக்கியப்
பஞ்சாங்கமும், 16:19 என திருக்கணிதப்
பஞ்சாங்கமும் கூறுகிறது. இது சரியல்ல. எனவே, இந்த இரண்டு வகைப் பஞ்சாங்கங்கள் கூறுவதும் பிழையானது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

பஞ்சாங்கம் என்றால் என்ன?
பஞ்சாங்கம் என்பது பல்லி விழுந்த பலன் போலக் குறி சொல்லும் புத்தகம் எனவும், கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் நம் வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை வெளிப்படுத்தும் கணிதம் எனவும் கருதப்படுகிறது.
நவீன நாள்காட்டிகள் உருவாக்குவதற்கு முன்னர் இருந்த நாள்காட்டி தான் பஞ்சாங்கம். பஞ்ச +அங்கம் அதாவது வாரம், திதி (நிலவின் பிறை), நட்சத்திரம் (அன்றைய வானில் நிலவின் நிலை), கர்ணம் (திதியின் இரண்டு பகுதி),யோகம்(நிலவு மற்றும் சூரிய நிலையின் கோணத்தின் கூட்டு) ஆகிய அய்ந்து வானியல் நிலைகளைக் கொண்டுள்ள பட்டியல்.
குறிப்பிட்ட நாளில் நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் என்ன திதி இருக்கும், என்ன நட்சத்திரம் இருக்கும் என்பது போல, பஞ்ச + அங்கம் பட்டியல் செய்வது ஆகும்.

பஞ்சாங்கக் குளறுபடி
நவீன அறிவியல்படி நட்சத்திர ஆண்டு சுமார் 365.25636 நாள்கள் ஆகும். ஆனால், ஆரியபட்டரின் சித்தாந்தத்தின் படி இது 365. 258681 நாள்கள், சூரிய சித்தாந்தத்தின்படி இது 365.258756 நாள்கள்.
வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 248 நாள்-களுக்கு ஒருமுறை நிலவு தன் நிலையை வானில் மறுபடி துல்லியமாக எட்டும். ஆனால், நவீன அறிவியலின்படி 247.99095 நாள்களுக்கு ஒரு முறை எட்டிவிடும்.
பஞ்சாங்கக் கணிதம் உருவானது ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்; அப்போது இந்தப் பிழைகள் பெரிதும் பாதிப்பு தரவில்லை. ஆனால், காலப்போக்கில் இந்தச் சிறுசிறு பிசிறுகள் ஒன்று சேர்ந்து பெரும் பிழையாக மாறிவிட்டது.
இடைக்காலத்தில் ஏற்பட்ட சமூக இறுக்கத்தின் தொடர்ச்சியாக வாக்கியக் கரணம் போன்ற நூல்களை “கடவுள் அருளிச் செய்தது” எனக் கூறத் துவங்கினர்.
எனவே, கடவுளின் வாக்காக வாக்கியங்கள் கருதப்பட்டுப் பிழை திருத்தப்படவில்லை. இதன் தொடர்ச்சியாக இன்று பஞ்சாங்கக் கணிப்புக்கும் வான் பொருள்களின் மெய்யான நிலைக்கும் பெரும் வேறுபாடு உள்ளது.
இவ்வாறு பஞ்சாங்கத்தின் பற்பல அபத்தமான பிழைகள் வானவியல் அறிந்தவர்-களுக்கு வெள்ளிடை மலை போல் விளங்கும்.

குட்டு வெளிப்படும்!
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட சூத்திரங்கள் பலநூறு ஆண்டுகளாக உண்மை கிரக நிலையுடன் ஒப்பிட்டுத் திருத்தம் செய்யாமல் அப்படியே பயன்படுத்துவதால் பஞ்சாங்கத் தகவல்கள் உண்மையான கிரக நிலையிலிருந்து வேறுபட்டு அமைகின்றன.
கிரகணம் போன்ற வெறும் கண்களால் எளிதில் காணக்கூடிய நிகழ்வுகள் பிழையாக இருந்தால் ஊர்மக்கள் கைகொட்டிச் சிரிப்பார்கள் என்பதால், பஞ்சாங்கம் பிரசுரம் செய்பவர்கள் தங்கள் கணிப்பை ஒதுக்கி வைத்துவிட்டு அறிவியல் நிறுவனமான வான்பொருள் நிலை கணிப்பு மய்யம், கொல்கத்தா (Positional Astronomy Centre, Kolkata)  கணிக்கும் தரவுகளை அப்படியே தங்களது பதிப்பில் பிரசுரம் செய்து விடுகிறார்கள்.
எனவேதான், கிரகணத்தின் துவக்கம் முடிவு போன்றவை ஒத்து வருவது போல நமக்குப் புலப்படுகின்றன. ஆனால், திதி போன்ற அம்சங்களைப் பாரம்பரியச் சூத்திரம் கொண்டு கணிக்கிறார்கள். எனவே தான் அக்டோபர் 25 அன்று சென்னையில் 17:42 மணிக்கு முடியும் அமாவாசையை 16:18 என வாக்கியப் பஞ்சாங்கமும், 16:19 என திருக்கணிதப் பஞ்சாங்கமும் பிழையாகக் கூறுகின்றன.
இரவு வானில் நிலவு அற் று இருக்கும்போது அந்த நாள் அமாவாசை இரவு என எளிதில் காணலாம். ஆனால் மிகச் சரியாக பூமி, நிலவு, சூரியன் ஒரே தளத்தில் நின்று அமாவாசை திதி முடிவுறுவதை வெறும் கண்களால் காணவியலாது.
கிரகணம் குறித்த விவரங்களை மேலோட்ட-மாகப் பார்த்தால் பஞ்சாங்கம் சரியாகத்தானே கூறுகிறது எனக் கருதத் துணிவோம். ஆனால், பஞ்சாங்கக் கணித விவரங்களை உற்றுநோக்கினால் குட்டு வெளிப்பட்டு விடும்.

மர்மக் கதிர்கள்
வெயிலில் குடையைக் கொண்டு சூரியனை மறைத்து நிழல் ஏற்படுவது போல, நிலவு, சூரியனுக்கு முன்புறமாகச் செல்லும்போது சில மணித்துளிகள் சூரியனை மறைக்கிறது. இதுவே கிரகணம்.
அதாவது குடை, மரம், கட்டடம் போல நிலவு ஏற்படுத்தும் வெறும் நிழல் தான் கிரகணம்.
கிரகணச் சமயத்தில் சூரியனில் எந்தவொரு சிறப்பு மாற்றமும் ஏற்படுவதில்லை. எப்போதும் போல நாற்புறமும் தன் ஒளியை வீசிக்கொண்டு இருக்கிறது. வேறு எந்த சிறப்பு மர்மக் கதிர்களும் வெளிப்படுவது இல்லை.
பூமி இருக்கும் திசையில் இடையில் நிலவு வந்து மறைத்து விடுவதால் பூமியில் சில பகுதிகளில் சூரிய முகம் மறைக்கப்படுகிறது. அந்தப் பகுதியில் மட்டும் கிரகணம் தென்படும்.
உலகில் வேறெங்கும் கிரகணத்தைக் கண்டு கர்ப்பிணிப் பெண்கள் ஓடி ஒளிந்து கொள்வதில்லை. அங்கெல்லாம் கர்ப்பிணிப் பெண்களுக்கும் வயிற்றில் வளரும் குழந்தை-களுக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படுவதில்லை.
கருக்கொண்ட பூச்சிகள் முதல் விலங்குகள் வரை அதன் போக்கில் கிரகணத்தின் போது வெளியே திரிந்து கொண்டுதான் உள்ளன. அவற்றுக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படுவதில்லை.

பாதுகாப்பாகக் காண்போம்!
சூரிய சந்திர கிரகணம் என்பது அற்புதமான வானக்காட்சி. இயற்கையின் இந்த விளையாட்டைப் பாதுகாப்பாகக் கண்டு களிக்க வேண்டும். வெறும் நிழலைக் கண்டு அச்சப்படுவது பேதைமை.
தமிழ்நாடு அறிவியல் மய்யம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற பல்வேறு அரசு மற்றும் தன்னார்வ அறிவியல் பிரச்சார அமைப்புகள் பொதுமக்கள் பாதுகாப்பாக கிரகணத்தைக் கண்டுகளிக்கும் வண்ணம் வெவ்வேறு இடங்களில் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.
உங்கள் பகுதியில் நடைபெறும் நிகழ்வு-களைக் கண்டறிந்து பங்கேற்க வேண்டும்.