பக்கங்கள்

செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

ஓ, ஜோதிட மூடர்களே!

 

கேரள எல்லை நகரமான களியக்காவிளையில் வசிப்பவர் கிரிஸ்மா, இவருக்குத் திருமணம் செய்ய பெற்றோர் ஜாதகம் பார்த்தனர். அப்போது இவரது ஜாதகத்தின் படி திருமணம் செய்த உடனே கணவர் இறந்து விடுவார், இதனால் வாழா வெட்டியாக வாழவேண்டும் என்று அவரது ஜாதகத்தில் குறிப்பிட்டுள்ளதாக ஜோதிடர் கூறினார். மேலும் இரண்டாவது திருமணம் செய்தால் அந்தக் கணவருக்கு ஆயுள் கூடும் என்றும் ஜாதகத்தில் உள்ளதாகக் கூறியுள்ளார்.  இந்த நிலையில் அவருக்கு ராணுவ வீரர் ஒருவரைத் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்திருந்தனர். 

தனது திருமணம் ராணுவ வீரருடன் நடந்தால் அவர் ஜாதகப்படி செத்துப் போவார் என்று நினைத்த கிரிஸ்மா ஜாதகத் தில் குறிப்பிட்ட படி முதல் திருமணம் செய்து பிறகு ராணுவ வீரரைத் திருமணம் செய்ய முடிவு செய்தார்.  இதன் படி  குமரி மாவட்ட எல்லையான பாறசாலை முறியன் கரை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன்ராஜ் (வயது 23). இவர் குமரிமாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ. 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இவரை  தேர்ந்தெடுத்து காதலிப்பதாக கூறி அவரைப் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

 சில நாள்களுக்குப் பின்பு கோவில் ஒன்றில் தனக்கு தாலிகட்டி தன்னை மனைவியாக ஏற்றுக் கொள் என்று கூறினார். இதனை அடுத்து அந்த இளைஞரும் கிரிஸ்மாவிற்குத் தாலிகட்டி குங்குமம் வைத்தார். தனக்குத் திருமணம் முடிந்துவிட்டது என்று நினைத்த அவர், தன் வீட்டிற்குச் சென்றுவருவதாக கூறினார். பின்னர் கடந்த 14ஆம் தேதி கிரிஸ்மா தனது கணவர் ஷாரோன்ராஜை  குடும்ப நண்பர் ஒருவர் விருந்திற்கு அழைத்ததாகக் கூறி அழைத்துச் சென்றார்.

விருந்தின் போது அவருக்கு பழச்சாறு மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு கஷாயம் கொடுத் துள்ளார். பின்னர் மீண்டும் அவரை வீட்டிற்கு அனுப்பி விட்டார். இந்த நிலையில் வீட்டிற்கு வந்த அவர் கடுமையான வயிறு வலிப்பதாகக் கூறியதை அடுத்து அவரை பாறசாலை அரசு மருத்துவ மனையில் சேர்த்தார்கள்.

அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி  ஷாரோன்ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி ஷாரோன்ராஜின் பெற்றோர் பாறசாலை காவல் துறையில் புகார் கொடுத்தனர். அதில் தனது மகன்  ஷாரோன் ராஜை அவரது காதலி குடும்பத் தினர் திட்டமிட்டுக் கொன்று விட்டதாக கூறியிருந்தனர். 

மேலும் ஷாரோன்ராஜின் காதலிக்கு ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகவும், அவருக்குத் திருமணம் நடந்தால் முதல் கணவர் இறந்து விடுவார் என ஜாதகத்தில் கூறப்பட்டதால், தனது மகனை திட்டமிட்டுக் கொன்று விட்டு, கிரிஷ்மாவுக்கு ராணுவ வீரர் ஒருவரைத் திருமணம் செய்து கொடுக்க நிச்சயம் செய்து இருப்பதாகவும் புகாரில் கூறினர். இந்த புகார் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய இளம்பெண்ணையும், அவருக்கு உடைந்தையாக இருந்த குடும்பத்தினரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கொலை செய்யப் பயன்படுத்திய நஞ்சு எது என்பதையும், ஜோதிடர் குறித்த விவரத்தையும் விசாரணையில் வெளிப்படுத்தினர்.

அக்டோபர் முதல்வாரம் இந்தியாவையே குலுக்கிய கேரள நரபலி நிகழ்வு அதிர்வலையை ஏற்படுத்தியது. அதுவும் செல்வந்தராகவேண்டும் என்றால் ஜோதிடத்தின்படி பெண்களை பலி கொடுத்தால் பணக்காரர் ஆகலாம் என்று மூடநடம்பிக்கையில் விளைவாகத்தான் அந்த நரபலி. அதே போல் ஜாதகத்தை நம்பி கல்லூரி மாணவனை கொலை செய்துள்ளதும் தற்போது நிகழ்ந்துள்ளது.

இவ்வளவுக்குப் பிறகும் மத மூடநம்பிக்கை களுக்கும், வழிபாட்டுக்கும், ஜோதிடத்துக்கும் முட்டுக் கொடுக்கும் மூடர்களைஎது கொண்டு சாற்றுவது?

மனிதர்களே பகுத்தறிவைப் பயன்படுத்துவீர்! மனிதராவீர்!    

வியாழன், 4 மார்ச், 2021

ஜோதிடத்தை நம்பி நான்கு வயது சொந்த மகனை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த பைத்தியக்காரத் தந்தையின் வெறிச்செயல்!


அரசமைப்புச் சட்டத்தின் 51ஏ(எச்) பிரிவு ஏட்டுச் சுரைக்காயா?

ஜோதிடத்தை நம்பி நான்கு வயது சொந்த மகனை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த பைத்தியக்காரத் தந்தையின் வெறிச்செயலைக் கண் டித்து   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு:

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தி லிருந்து வந்துள்ள ஒரு செய்தி நம் இதயத்தைப் பிழிகிறது. வெட்கமும், வேதனையும் விலா நோகச் செய்கிறது. பகுத்தறிவு பூமியாகிய தமிழ்நாட்டில் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் கூடவா, ஜோதிடத்தை நம்பிய ஒரு தந்தை தன் 4 வயது மகனான இளந்தளிரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ள கோர சம்பவம்?

தமிழ்நாட்டிற்கும், பகுத்தறிவாளர்களா கிய நம் அனைவருக்குமே தலைகுனிவை ஏற்படுத்தக் கூடியதாக இது உள்ளது! வன்மையான கண்டனத்திற்குரிய காட்டு மிராண்டித்தனமாகும்.

படிப்பறிவு பெருகியுள்ளது. எனி னும் பகுத்தறிவுப் பிரச்சாரத்தின் வீச்சும் தேவையும் மேலும் பெருகி, அடைமழையாகப் பொழிந்து, இந்த மூடநம்பிக்கை நோயால் வறண்ட மூளைகளை வளப்படுத்த நமது பணி மேலும் மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்பதையே இம் மாதிரி அவலச் செய்திகள் அறுதியிட்டு உறுதி கூறுவதாக அமைந்துள்ளன.

நமது அரசமைப்புச் சட்டத்தின் 51ஏ(எச்) பிரிவில் அறிவியல் மனப்பான் மையைப் பரப்புவதும் மூடத் தனத்திற்கு எதிராகவும், கேள்வி கேட்கும் உணர்வை வளர்த்து மனிதநேயத்தைப் பரப்பவேண்டும் என்பதும் இங்கே வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவே உள்ளது.

தமிழக அரசு காவல்துறை இத் தகைய சம்பவங்களைத் தடுக்க, பகுத் தறிவுப் பிரச்சார அமைப்புகளுக்கு ஆதரவும், ஆக்கமும் ஊக்கமும் தர முன்வரவேண்டும்.

இன்னமும் ஜோதிடம் உயிரைக் குடிக்கும் கொடுமை நீடிப்பதா?

 

 கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

3.3.2021

சோதிட மூடநம்பிக்கை காரணமாக பெற்றோர்களே தம் பிள்ளைகளை நரபலி கொடுப்பதா?


அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கும் 51ஏ(எச்)பற்றி பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவீர்!

நன்னிலம் பகுதியில் சோதிடர் பேச்சைக் கேட்டு, பெற்ற மகனையே தீயிட்டுக் கொளுத்திய நரபலி கொடுமையைக் கண்டித்தும் - மக்கள் மத்தியில் அரசமைப்புச் சட்டம் கூறும் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க் கும் வகையிலும் பகுத்தறிவுப் பிரச்சார கூட்டங்களை நடத்துமாறு கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சோதிட மூடநம்பிக்கைகள் காரணமாக பெற் றோர்களே தாங்கள் செல்லமாக வளர்த்த பெற்ற பிள்ளைகளைப் படுகொலை செய்வது, நரபலி கொடுப்பது என்ற கொடுமை இந்த 2021 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து நடைபெற்று வருவது கொடூரமானது - வெட்கித் தலைகுனியத்தக்கது!

தந்தை பெரியார் பிறந்த மண்ணிலா

இந்தக் கொடூரம்?

மற்ற மற்ற மாநிலங்களில் இவை நடைபெற்றாலும் அவற்றைப் புரிந்துகொள்ள முடியும்; தந்தை பெரியார் பிறந்த, பகுத்தறிவுப் பிரச்சாரம் ஓங்கி வளர்ந்த தமிழ்நாட்டிலும்கூட அங்கொன்றும் இங்கொன் றும் நடப்பதும்கூட ஜீரணிக்கப்பட முடியாதவையே!

நமது இயக்கம் வலுவாக உள்ள நன்னிலம் போன்ற பகுதியில்கூட நடந்திருப்பது - அதிர்ச்சியை அளிக்கக் கூடியதாகும்.

சோதிடன் பேச்சைக் கேட்டு தனது நான்கு வயது மகனை- அரும் செல்வத்தைத் துடிக்கத் துடிக்க மண்ணெண்ணெயை ஊற்றி எரித்த சம்பவம் சாதாரணமானதா?

புதுக்கோட்டை மாவட்டத்தில்...

அதேபோல, தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே நொடியூர் என்னும் ஊரில் தனது மூன்றாவது மகனை நரபலி கொடுத்தால் செல்வம் பெருகும் என்று பெண் மந்திரவாதி கூறியதைக் கேட்டு நரபலி கொடுக்கப்பட்டுள்ளான்.

கேரளாவில் நடந்த கொலை

கேரளாவில் பாலக்காட்டையடுத்த குளத்தூரில் சுலைமான் - சபிதா இணையினர் தமது ஆறு வயது மகன் ஆமிலினை தெய்வ தோஷம் என்று கூறிக் கொலை செய்துள்ளனர்.

சத்தீஷ்கரில் விவசாயம் செழிப்பதற்காக 7 வயது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டுள்ளான்.

பத்து வயது சிறுமி கொலை

கருநாடக மாநிலத்தில் ராம்நகர் மாவட்டம் கன்னக்கல் என்ற ஊரில் 10 வயது மகள் ஆயிஷா நரபலி கொடுக்கப்பட்டுள்ளார் - மந்திரவாதியின் ஆலோசனையைக் கேட்டு.

உத்தரப்பிரதேசம் உன்னவ் பகுதியில் நிலத்தில் புதையல் இருப்பதாகவும், அதனை எடுப்பதற்காக ஆதர்ஷ் என்ற சிறுவன் நரபலி கொடுக்கப்

பட்டுள்ளான்.

மெத்தப் படித்தவர்கள் செய்த

நெஞ்சைப் பிளக்கும் படுகொலைகள்

இவற்றை எல்லாம்விட மன்னிக்கப்படவே முடியாத மிகப்பெரிய கொடுமை - ஆந்திர மாநிலம் சித்தூர் மதனப்பள்ளியில் நடந்த நெஞ்சைப் பிளக்கும் நிட்டுரம்!

பெற்றோர்கள் சாதாரணமான படிப்பாளிகள் அல்லர்; கல்லூரி முதல்வர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் சோதிடன் பேச்சைக் கேட்டு, வளர்த்த தன் இரு மகள்களை மொட்டையடித்து, நிர்வாணப்படுத்தி, தாயே சூலத்தால் குத்தியும், இரும்புக் குண்டால் தாக்கியும் துடிதுடிக்க வைத்துப் படுகொலை செய்ததை இப்பொழுது நினைத்தாலும் பகீரென்கிறது.

இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் என்ன காரணம்? மத மூடநம்பிக்கைதானே - சோதிட மூடநம்பிக்கை தானே!

கல்வியில் பகுத்தறிவுச் சிந்தனையை ஊட்டத் தவறுவதால் தானே!

அரசமைப்புச் சட்டம் கூறுவது என்ன?

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று வலியுறுத்தப்பட்டுள்ள (51-ஏ-எச்) விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டும்; சீர்திருத்த உணர்வைப் பரப்பவேண்டும் என்ற கடமையைச் செய்யத் தவறுவதால்தானே!

வேலியே பயிரை மேய்வதா?

சட்டத்தை செயல்படுத்தவேண்டிய அமைச் சர்களே, சாமியார்களின் காலடிகளில் கிடப்பதும், மந்திரவாதிகள் - சோதிடர்கள் பேச்சைக் கேட்டு கைகளில் வண்ண வண்ணமாக கத்தைக் கத்தையாகக் கைகளில் கயிறுகளைக் கட்டிக் கொள்வதும், பூமிக்குப் பூஜை போடுவதும், மூடத் தனமான நிகழ்ச்சிகளில் பகிரங்கமாகப் பங்கு கொள்வதும்தானே!

வேலியே பயிரை மேய்ந்தால் பாதுகாப்பை எங்கே போய்த் தேடுவது?

சட்டத்தின் கடமையைச் செய்வது

திராவிடர் கழகமே!

உண்மையைச் சொல்லப் போனால், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்திக் கூறப்பட் டுள்ள - ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று உரக்கக் கூறப்பட்ட விஞ்ஞான மனப்பான்மையை பகுத்தறிவுச் சிந்தனையை வளர்க்கும் - பரப்பும் அந்தக் கடமையை முதன்மையானதாக வரித்துக் கொண்டு செயல்படும் நிறைவேற்றும் ஒரே இயக்கம் இந்தியத் துணைக் கண்டத்திலேயே திராவிடர் கழகம் மட்டும்தான்.

அரசும், காவல்துறையும்

 வரவேற்க வேண்டாமா?

திராவிடர் கழகம் மேற்கொண்டுவரும் இந்தப் பணிக்கு அரசும், காவல்துறையும் முன்னே வந்து இருகரம் நீட்டி வரவேற்று ஒத்துழைப்புக் கொடுக்கவேண்டியது மிகவும் அவசியமாகும்

திருவாரூர் மாவட்டத்தில் பிரச்சாரம்

இரண்டொரு மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் நரபலிக் கொடுமைகளை - மூடத்தனங்களை விளக்கிப் பொதுமக்கள் மத்தியில் நல்ல அளவு விழிப்புணர்வை ஏற்படுத்திட நன்னி லத்தைச் சுற்றியுள்ள - திருவாரூர் மாவட்டத்தில் நான்கு ஒன்றியங்களிலும் கழகப் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

ஒத்துழைப்புத் தாரீர்!

 கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார் இதற்கான முன் பணிகளை மேற்கொள்வார்.

கழகத் தோழர்களும், பொதுமக்களும் நல்ல வண்ணம் ஒத்துழைப்புக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

 

சென்னை       தலைவர்

4.3.2021              திராவிடர் கழகம்

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

ஜோதிடப் பைத்தியங்களே, திருந்துங்கள்!

வியாழன், 5 செப்டம்பர், 2019

சோதிடத்தால் சுருண்ட சரவணபவன் ராஜகோபால்



பரபரப்பாகப் பேசப்பட்ட சரவணபவன் ராஜகோபால் வழக்கு குறித்து வளர்தொழில் ஏட்டின் ஆசிரியர் ஜெய கிருஷ்ணன் எழுதியுள்ள முக்கியமான பதிவு..(தமிழ் வலை 30.3.2019)

என்னுடைய அப்பாவின் ஒன்று விட்ட அக்காவின் மகள்தான் திருமதி. வள்ளி அண்ணி. ஒவ்வொர் ஆண்டும் பள்ளி விடுமுறையின் போது சிறுத்தொண்ட நல்லூரில் உள்ள எங்கள் ஆச்சி வீட்டுக்கு செல்லும்போது, பெரும்பாலும் அவர்கள் வீட்டில்தான் விளையாடிக் கொண்டிருப்போம். அவர்களை திரு. ராஜகோபால் நகை, ரொக்கம் என்று எதையும் எதிர்பார்க்காமல் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் திருமணத்துக்கு நாங்கள் எல்லோரும் சென்று இருந்தோம். தன் உறவினர்கள், நண்பர்களுக்கு உதவும் குணம் அவருக்கு இருந்தது. அசோக் நகரில் இருந்த அவரது மளிகைக் கடையில் நின்று பொட்டலம் போடுவதை நான் பார்த்து இருக்கிறேன். அவர் உணவகத் தொழிலில் ஈடுபட்டு வெற்றி அடைந்த பிறகு அவரைச் சுற்றிலும் பிராமணர்கள் கூட்டம்.

வழக்கம் போல் தமிழர்கள் பெரிய வெற்றி அடைந்த பிறகு, நாம் இந்த அளவுக்கு வளர்ந்து விட்டோமா என்று தன் வெற்றியையே பார்த்து அஞ்சுவதைப் போல இவரும் அஞ்சினார். தீவீர பக்தராக மாறினார். கோயில்களுக்கு வாரி வழங்கினார். கார்த்திகை நட்சத்திரம் உள்ள பெண்களைத் திருமணம் செய்து கொண்டால், இன்னும் பெரிய ஆளாகலாம் என்று பரிகாரம் சொன்ன ஜோசியர்களை நம்பி அப்படிப் பட்ட பெண்களைத் தேடி திருமணம் செய்து கொண்டார். முதலில் திருமணம் செய்து கொண்டது ஒரு பிராமணப் பெண்ணை. அவர் கூட இன்னொருவரின் மனைவி. அடுத்து கார்த்திகை நட்சத்திரம் உள்ள இன்னொரு பெண். அவரும் இன்னொருவர் மனைவி. இவர்கள் ஜாதகங்களைப் பார்த்து தேர்ந்து எடுத்துக் கொடுத்தவர்கள், அவர் நம்பிய ஜோசியர்கள்.

காமம் மட்டுமே அவரது நோக்கமாக இருந்தால் அதற்கு வேறு எத்தனையோ வழிகள் உள்ளன. அவரிடம் இருக்கும் பணத்துக்கு வெளியே தெரியாமல் நிறைவேற்றிக் கொண்டிருந்திருக்கலாம். வெளிநாடுகளுக்கு சென்றிருக்கலாம். அவரிடம் இருந்த ஜோசியப் பித்து காரணமாகவே அவர் இப்படி வீணாகப் போனார். பிந்தைய காலக் கட்டங்களில் அவரால் நிறைய பிராமணர்களே பயன் அடைந்தார்கள். அவர் பிறந்த ஊரில் வனத்திருப்பதி என்ற பெயரில் ஒரு பெரிய கோயிலைக் கட்டி, பிராமணர்களுக்கே படியளந்து கொண்டிருக்கிறார்.

இவருடைய செயல்களால் அதிகம் பாதிக்கப்பட்டவர் எங்கள் வள்ளி அண்ணி. இப்படி ஒரு வாழ்க்கை தனக்கு அமைந்து விட்டதை எண்ணி எப்போதும் அவர் சோகத்துடனேயே காணப்படுவார். அண்மையில் அவரது தம்பி திரு. குமரேசன் இறந்த போது, ‘என் கதை கேட்டு வருந்தினானே என் தம்பி..’ என்று கதறிக் கொண்டிருந்தார். எங்கள் அண்ணியை நினைத்து நாங்கள் மிகவும் வருந்தினோம். அனைவர் மீதும் அன்பு செலுத்தக் கூடியவர். இவ்வளவு பெரிய அளவுக்கு பணத்தில் உயர்ந்த பின்னும், தொடக்கத்தில் இருந்த மாதிரியே அனைவரிடமும் பழகக் கூடியவர். எங்கள் தந்தையார் மறைந்த போது, தினத் தந்தியில் கொடுத்து இருந்த விளம்பரத்தைப் பார்த்து, நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தியதோடு, ஏன் எனக்குச் சொல்லவில்லை என்று உரிமையோடு கடிந்து கொண்டார்.

உறவினர்கள் வீட்டுத் திருமணங்களில் தவறாமல் கலந்து கொண்டு அனைவரிடமும் கலந்துரையாடி மகிழ்வார்.

திரு. ராஜகோபால் கடுமையான உழைப்பாளிதான். அதை மறுக்க முடியாது. இரவு பத்து மணிக்கு தன் உணவக சாம்பாரை வாங்கி சுவைத்துப் பார்த்து கெட்டுப் போகாமல் தரமாக இருக்கிறதா என்பதை சோதித்துப் பார்ப்பார். உணவுகள் தரமாகவும், சுவையாகவும் இருக்க வேண்டும் என்பதில் சற்றும் விட்டுக் கொடுக்க மாட்டார். உணவகங்களின் தூய்மையைப் பராமரிப்பார். ஆனால் அவரை கவிழ்த்துப் போட்டது, ஆன்மிகமும், ஜோசியமும் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. என்ன பரிகார பூஜைகள் பண்ணி என்ன பயன்? உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு இப்படி ஆகி விட்டதே?

எங்கள் அண்ணியின் திருமண வாழ்வு இப்படி ஆனதில் எங்களுக்கு எல்லாம் துன்பம்தான்.

இனி அவரது பிள்ளைகளாவது விவரமாக செயல்பட்டு சரவணபவனை காப்பாற்ற வேண்டும். முடிந்தால் இன்னும் வளர்க்க வேண்டும். தங்கள் அம்மாவை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

சொந்த உழைப்பில் முன்னேறிய ஒருவர் சோதிடத்தை நம்பியதால் என்னவானார்? என்பதை இதன் மூலம் உணரமுடிகிறது.

(குறிப்பு: சரவணபவன் ராஜகோபால் மறைவிற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே எழுதப்பட்டது இது)

- விடுதலை நாளேடு, 3.8.19

வியாழன், 6 செப்டம்பர், 2018

சமூக ஊடகங்களில் அம்பலமாகிய கேரள சோதிடரின் சோதிடப் புரட்டு

கொச்சி, செப்.5 கற்கட மாசம், ஜூலை  17 முதலே ஆகஸ்ட் ஒன்னாந்தேதி வரை மழை இருக்கப்போவதில்லை.நல்ல உஷ்ணம் ஜீவியுண்டாகும். ஆகஸ்ட் 1 முதல் செப்.17 வரை கொஞ்சம் மழை இருக்கும். செப்.1 முதல் அக்.11வரை தானியங்களுக்கு அனுகூலமாகும் விதத்தில் மழை இருக்கும். ஏனென்றால், அவிட வாயு கோபம். வாயு தாராளமாகி, கார்மேகங்கள் சின்னா பின்னம் ஆய்ப் போம். வன பருவதங்களில் கடந்த வருடங்களைப்போல்தான் மழை இருக்கும்.


வய்துதி உல்பாதனம் விதரனம் விபனனம்....


இப்படியாக மலையாள மொழி தொலைக்காட்சியில் சோதிடர் கேரளாவில் மழை நிலவரம் குறித்து ஏதோ கொஞ்சம் மழை பொழியும் என்றும், காற்று அதிதீவிரமாக அடித்து மேகத்தைக் கலைத்துவிடும் என்றெல்லாம் கூறி, கேட்கின்ற யாருக்குமே புரியக்கூடாது என்று சமஸ்கிருதத்திலும் ஏதேதோ அந்த சோதிடர் ஆருடம் கூறுகின்றார். ஆனால், நூற்றாண்டு காணாத மழை பொழியும், வெள்ளம் வாரிச்சுருட்டிச் செல்லும் என்று கூறவில்லை. எல்லாவற்றையும்விட, தன்னையே அவரால் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. அவரையும் மீட்புக்குழுவினரே மீட்டனர்.

அந்த சோதிடர் தொலைக்காட்சியில்  சோதிடம் கூறுகின்ற காட்சிப்பதிவை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதுடன், கேரளா வெள்ளத்தில், அதே சோதிடரை மீட்புக் குழுவினர் குண்டு கட்டாகத் தூக்கி வரும் காட்சிப் பதிவையும் வெளியிட்டு, சோதிடம் என்பது எவ்வளவு பெரிய புளுகுமூட்டை என்பதை மீம்ஸ்கள்மூலம் தோலுரித்துள்ளனர்.

கீழ்க்கண்டவாறு அந்த காட்சிப் பதிவு, படத்துடன்  தகவலைப் பதிவேற்றி பகிர்ந்து வருகின்றனர்.

மலையாள ஜோதிடர்...


இந்த ஆண்டு அதிக மழை இருக்காது, வெப்பம் தாக்கும்..! என டிவியில் பேட்டி கொடுத்தவர்



நேற்று அதே சானல் மறு ஒளிபரப்பாக வெளியிட்டு ஜோதிடத்தால் அவரையே காப்பாற்ற முடியவில்லை என வெள்ளத்தில் அவரை காப்பாற்றி தூக்கிவரும் புகைப் படத்தையும் வெளியிட்டது...!!



-  விடுதலை நாளேடு, 5.9.18

செவ்வாய், 10 ஏப்ரல், 2018

இறந்து விடுவாய் என பொய் ஆருடம்: ஜோதிட நிலையத்தை இடித்து தரை மட்டமாக்கிய பெண்


சீனாவில் சிசுவான் மாகாணம் மியான் யங் பகுதியை சேர்ந்த 70 வயது பெண் வாங் , கடந்த ஆண்டு மார்ச் மாதம் அங்குள்ள ஜோதிடரை சந்தித்தார்.
அப்போது வாங் 2018ஆம் ஆண்டை பார்க்கமாட்டார் அதற்குள் இறந்து விடுவார் என் ஆரூடம் கூறினார். அதை உண்மை என அவர் நம்பினார். ஒவ்வொரு நாளையும் மரண பயத்துடன் கழித்தார்.

ஆனால் அவர் “நல்ல உ ட ல் ந ல த் து ட ன். ஆரோக்கியமாக இருக்கிறார், இந்த நிலையில் கடந்த வாரம் ஜோதிடர் நிலையத்துக்கு வாங் சென்றார்.

ஜோதிடரை சந்தித்து அவர் ஆரூடம் பொய் என வாக்குவாதம் செய்தார். மேலும் ஆத்திரத்தில் ஜோதிட நிலையத்தை இடித்து தரைமட்டமாக்கினார், சம்பவ இடத்துக்கு, விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.

தவறாக ஆரூடம் சொல்லி வாங் மனதை  நோகடித்ததற்காக அவரிடம் ஜோதிடரை மன்னிப்பு கேட்க வைத்தனர்.
தகவல்: கு.பஞ்சாட்சரம், 
திருவண்ணாமலை

- விடுதலை ஞாயிறு மலர், 7.4.18